Published:Updated:

`வாக்கிங் போங்க, உடம்பை நல்லா வெச்சுக்கோங்க; அதே மாதிரி..!’ - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்

எடப்பாடி பழனிசாமி

``தி.மு.க ஆட்சியில் எந்தவிதத் துன்பமும் இல்லாமல் இருக்காங்கன்னு ஸ்டாலின் சொல்லியிருக்காரு. இந்த ஆட்சி இருப்பதே மக்களுக்குத் துன்பம்தான்..." - எடப்பாடி பழனிசாமி

`வாக்கிங் போங்க, உடம்பை நல்லா வெச்சுக்கோங்க; அதே மாதிரி..!’ - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்

``தி.மு.க ஆட்சியில் எந்தவிதத் துன்பமும் இல்லாமல் இருக்காங்கன்னு ஸ்டாலின் சொல்லியிருக்காரு. இந்த ஆட்சி இருப்பதே மக்களுக்குத் துன்பம்தான்..." - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

சொத்து வரியை உயர்த்தியுள்ள தி.மு.க அரசைக் கண்டிக்கும்விதமாக திருச்சியில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், திருச்சி ரயில்வே ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகே நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, முன்னாள் எம்.பி குமார் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 10 மாத ஆட்சியில் தி.மு.க-வின் செயல்பாடு, ஸ்டாலின் மீதான விமர்சனம், நிறைவேற்றப்படாத தி.மு.க தேர்தல் வாக்குறுதிகள், விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களை முன்வைத்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில், ``தி.மு.க., தன்னுடைய தேர்தல் அறிக்கையில 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. அவற்றில் 487-வது அறிவிப்பில் ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம், மீண்டும் மேம்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்பட மாட்டாது’ எனச் சொல்லியிருக்காங்க. மக்கள் சிரமப்படுவார்கள்னு தெரிஞ்சு தேர்தல் அறிக்கையில் சொன்னவர்கள், இப்போது அதை நடைமுறைப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தச் சொத்து வரி உயர்வை தி.மு.க உடனடியாக திரும்பப் பெறணும். ‘மத்திய அரசு வீட்டு வரியை உயர்த்தச் சொல்லியதால்தான் உயர்த்தினோம்’ என இதற்கொரு காரணத்தை வேற சொல்கிறார்கள்.

ஆனால், மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறது என்றால், ‘சொத்து வரிக்கான குறைந்தபட்ச அளவினை ஒவ்வொரு மாநிலமும் அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பதோடு, வரி வசூலிப்புக்கான பொருத்தமான செயல்பாட்டுடன்கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றிருக்கிறது. இவ்வளவு வரி உயர்வு என்று எங்குமே மத்திய அரசு குறிப்பிடவில்லை. ஆக, மத்திய அரசுமீது பழியைப் போட்டு, தமிழக மக்கள்மீது கடுமையான வரியை இந்த விடியா அரசு உயர்த்தியிருக்கிறது” எனக் காட்டமாகத் தன் பேச்சை ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து பேசியவர், “எல்லாக் கட்சிகளும் தேர்தல் சமயங்களில் அறிவிப்புகளை வெளியிடும். ஆனால், இந்தியாவிலேயே ஒரு புத்தக வடிவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஒரே கட்சி தி.மு.க-தான். கொடுத்த வாக்குறுதிகளை செய்யவாபோறோம், மக்களை ஏமாத்தத்தானே போறோம்னு புத்தகமாக போட்டுட்டாங்க. ஸ்டாலினுக்கு நாட்டு மக்களைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அவர் வீட்டு மக்களைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார். எது எதிலெல்லாம் ஊழல் செய்ய முடியுமோ... எதிலெல்லாம் பணம் கிடைக்குமோ... எப்படியாவது தங்களுடைய கஜானாவை நிரப்ப வேண்டும்... இதைத்தான் கடந்த 10 மாத திமுக ஆட்சியில் செஞ்சிருக்காங்க. விளம்பரத்துலதான் இந்த தி.மு.க அரசாங்கம் தாக்குப்பிடிச்சுக்கிட்டு இருக்கு. ஸ்டாலின் ஒரு விளம்பரப் பிரியர். டீ குடிப்பார். தினமும் வாக்கிங் போவார். வாக்கிங் போங்க... உடம்பை நல்லாவெச்சுக்கோங்க. அதே மாதிரி மக்களையும் கொஞ்சம் பாருங்க. இது போதாதுன்னு ஸ்டாலின் பளு தூக்குறார். அடுத்த உலக பளு தூக்கும் போட்டிக்கு அவரை அனுப்பிச்சிடலாம். ஏங்க... இதெல்லாமா நாட்டுக்குத் தேவை... மக்கள் தி.மு.க ஆட்சியில் எந்தவிதத் துன்பமும் இல்லாமல் இருக்காங்கன்னு ஸ்டாலின் சொல்லியிருக்காரு. இந்த ஆட்சி இருப்பதே மக்களுக்குத் துன்பம்தான்” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து, “குடும்பத்தோட ஸ்டாலின் துபாய்க்கு இன்பச் சுற்றுலா போனாரு. நம்மூர்லயும் வருஷா வருஷம் பொருட்காட்சி நடக்குது. பொருட்காட்சி நடக்குறப்ப அரசாங்கத்துல இருக்குற அந்தந்தத் துறை சார்பாக அரங்கம் அமைப்போம். துபாய்ல சர்வதேசக் கண்காட்சி போன அக்டோபர் மாசமே நடைபெற ஆரம்பிச்சிடுச்சு. ஆனா, கண்காட்சி முடியுறதுக்கு ஆறு நாளைக்கு முன்னாடி, எல்லாரும் அரங்கத்தைப் பிரிச்சிக்கிட்டு இருக்கிற சமயத்துல, தமிழ்நாடு சார்பாக ஒரு அரங்கத்தை ஸ்டாலின் திறந்துவெக்கிறாரு. இவரு அரங்கத்தைத் தொடங்கிவெக்கப் போகலை. 10 மாத காலத்தில் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே துபாய் போயிருக்கிறார். இதை நான் சொல்லலை, மக்கள் பேசிக்கிட்டு இருக்காங்க. ஒரு அமைச்சரே ஒரு அதிகாரியைச் சாதிப் பேரைச் சொல்லித் திட்டுறாரு. அவர் மீது நடவடிக்கை எடுக்காம, அந்த அமைச்சரை இலாகா மட்டும்தான் மாத்தியிருக்காங்க. இதுதான் சமூகநீதியா... இதுதான் திராவிட மாடலா... இந்த ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு, சிறுமிகளுக்கு மட்டுமில்லாம ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவிவருகிறது.

அ.தி.மு.க ஆட்சியில் 2,000 அம்மா மினி கிளினிக் திறந்தோம். அதுல மக்கள் பெரிதும் பயன் அடைஞ்சாங்க. அம்மா என்ற பெயர் வந்தாலே ஸ்டாலினுக்கு அலர்ஜி ஆகுது. உடனே அதை இழுத்து மூடிட்டாங்க. அம்மாவுடைய அரசாங்கம் தங்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கியது. ஆனால், 2-3 அனல்மின் நிலையம் நிலக்கரி இல்லாமல் மூடப்பட்டுவிட்டது என்பதைப் பத்திரிகையில் இப்போது பார்த்தேன். போகப் போக கரன்ட் கட் வரும் பாருங்க. உள்ளாட்சித் தேர்தல்ல தில்லு முல்லு செஞ்சு தி.மு.க வெற்றி பெற்றுட்டாங்க. அதுக்கான பரிசுதான் இப்ப வீட்டு வரி உயர்வு. ஓட்டுப் போட்ட மக்களுக்கு வேட்டுவெச்சுட்டாங்க. இந்த ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். வீட்டு வரி உயர்வு மட்டுமில்லை... விரைவாக மின் கட்டணம் உயர்த்துவாங்க. 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கும் விரைவில் பட்டை நாமம் போடப் போறாங்க. குடிநீர்க் கட்டணம், பஸ் கட்டணம், பால் கட்டணம் என எல்லாமும் உயரப்போகுது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism