Published:Updated:

`எடப்பாடியின் சைலன்ட் மூவ்?'- ஓ.பி.எஸ், ஸ்டாலினுக்கு சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு நீக்கப்பட்ட பின்னணி!

ஓ.பி.எஸ், ஸ்டாலின்
ஓ.பி.எஸ், ஸ்டாலின்

ஜெயலலிதா யோசித்த விஷயத்தை எதையும் யோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பைத் திரும்பப் பெற்றதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலதடவை யோசித்து புத்திச்சாலித்தனமாகக் காயை நகர்த்தியுள்ளார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஸ்டாலின், ஓ.பி.எஸ் இருவருக்கும் மத்திய அரசு வழங்கிவந்த கமாண்டோ பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது பல விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க இரண்டு அணிகளாக உடைந்தது. ஆ.ர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா- ஈ.பி.எஸ் என இரு அணியினரின் தரப்பிலும் தனித்தனி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், அ.தி.மு.க அம்மா கட்சியின் வேட்பாளராக சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் வேட்பாளராக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் மின்கம்பம் இரட்டை விளக்குச் சின்னத்திலும் போட்டியிடுவதாக இருந்தது. இந்தநிலையில் ஓ.பி.எஸ் தர்ம யுத்தம் நடத்தியபோது சசிகலா செய்த தவறுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்று சசிகலாவையும் தினகரனையும் கடுமையாகச் சாடி பேசினார். அதனால் தினகரனின் ஆதரவாளர்கள் அவர் சென்ற கார் மீது கல் எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தினகரனுக்கும் ஓ.பி.எஸ் டீமுக்கும் பிரச்னை பூதாகரமாக வெடித்திருந்த நிலையில், மத்திய அரசிடம் மிக நெருக்கமாக இருந்த ஓ.பி.எஸ்ஸுக்கு டி.டி.வி.தினகரன் தரப்பினரால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து `ஒய்' பிரிவு பாதுகாப்பைப் பெற்றார்கள்.

அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

அதேபோல் ஸ்டாலினுக்கு `இசட்' பிரிவு வழங்கி வந்தது மத்திய அரசு. இதற்கு என்ன காரணம் என்றால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி, அந்தப் பழியை மு.க.அழகிரி மீது போடத் தமிழக உளவுத்துறை ஒரு திட்டம் தீட்டியிருப்பதாகப் பத்திரிகைகளில் தகவல் வெளிவந்தது.

இதையடுத்து இந்தத் தகவலை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தி.மு.க எம்.பி-க்கள் மூலம் எடுத்துச் சென்றது. இதையடுத்து ஸ்டாலினுக்கு `இசட் பிரிவு' கமாண்டோ பாதுகாப்புப் படை அளிக்கப்பட்டது. இவரைத் தவிர, தமிழகத்தில் மேலும் ஒரு முக்கிய வி.ஐ.பி-க்கு `இசட் பிரிவு' எனப்படும் சி.ஆர்.பி.எஃப் கமாண்டோ பாதுகாப்புப் படை வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அவர் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இதற்கிடையே, ஓ.பி.எஸ் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்புப் படை திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இன்று முதல் அவர்களின் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாகத் தமிழக போலீஸே இருவருக்கும் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு வாபஸ் ஸ்டாலினுக்கு வைத்த செக் அல்ல, ஸ்டாலின் மூலமாக ஓ.பி.எஸ்ஸுக்கு வைத்த செக் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மத்திய பாதுகாப்புப் படை எனப்படும் கமாண்டோ படை பாதுகாப்பைத் தலைவர்களுக்கு மத்திய அரசுதான் கொடுக்கும். அதேபோல் அதை விலக்கும் முடிவையும் மத்திய அரசுதான் எடுக்கும். ஆனால், இந்த முடிவை மத்திய அரசு எடுக்கும் என்றாலும் அதற்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை. இந்தநிலையில்தான் எடப்பாடி அரசு தமிழகத்தில் இருவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறது.

அமித்ஷா - ஓ.பி.எஸ்
அமித்ஷா - ஓ.பி.எஸ்

இதை மத்திய அரசும் உளவுத்துறை மூலமாக விசாரித்து உறுதி செய்த பின்னர்தான், பாதுகாப்புப் படையை வாபஸ் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். ஸ்டாலினின் பாதுகாப்பு விஷயத்தில் விளையாட வேண்டாம் என்று ஜெயலலிதா யோசித்த விஷயத்தை எதையும் யோசிக்காமல் எடப்பாடி அரசு செய்திருக்கிறது. அத்தோடு பா.ஜ.க-வோடு மிக நெருக்கமாக இருக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கு செக் வைக்க எடப்பாடி செய்த வேலை என்கிறார்கள். அத்தோடு ஸ்டாலினை மனதில் வைத்து ஓ.பி.எஸ்ஸுக்கு செக் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு