Published:Updated:

`புறக்கணிக்கப்பட்டவர்களைத் திரட்டுங்கள்'- தி.மு.கவினருக்கு தூண்டில் போடும் எடப்பாடி அசைன்மென்ட்!

அ.சையது அபுதாஹிர்

``எடப்பாடி திடீரென முதல்வரானபோது ஆட்சி நீடிக்கும்வரை நாமும் நீடிக்கலாம் என்று மட்டுமே நினைத்தார். ஆனால், அடுத்த சில மாதங்களில் அரசியல் பாடத்தை முழுவதும் கற்றுத்தேர்ந்து கொண்டார். ஒருகட்டத்தில் தி.மு.க-விற்கே நெருக்கடியைக் கொடுத்தார்’’.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஐந்தாண்டுக் காலம் இந்த ஆட்சியைக் கொண்டுசெல்வது மட்டும் எனது நோக்கம் அல்ல... அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வைக் கரைசேர்க்கும் திட்டமும் என்னிடம் இருக்கிறது” என்று வேலூரில் முக்கிய நிர்வாகிகளிடம் தனது எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளார், எடப்பாடி பழனிசாமி. அதற்காக அ.தி.மு.கவைப் பலப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுப்பதோடு எதிர்க்கட்சியான தி.மு.க-வைப் பலவீனப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார், என்கிறார்கள் அ.தி.மு.க தரப்பில்.

பழனிசாமி- பன்னீர்செல்வம்
பழனிசாமி- பன்னீர்செல்வம்

அ.தி.மு.க அரசின் பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது. எடப்பாடியின் அரசைக் கவிழ்க்கும் தி.மு.க-வின் திட்டமும் இப்போது கைவிடப்பட்டுவிட்டது. "சட்டமன்றத் தேர்தல்வரை பொறுமையாக இருந்தால், இந்த ஆட்சியை மக்களே வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். அசுரபலத்தோடு நாம் ஆட்சியைப் பிடித்துவிடலாம்” என்று தி.மு.க தரப்பு கணக்குப் போட்டிருக்கிறது. அதேநேரத்தில், உட்கட்சியில் உள்ள உரசல்கள், ஊழல் குற்றச்சாட்டுகள், நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி என்று அ.தி.மு.க தொடர்ந்து பின்னோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறது. இதனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள்கூட அடுத்தமுறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவாய்ப்பில்லை என்ற மனநிலையில் இருக்கிறார்கள். மறுபுறம், அமைச்சர்களோ துறைரீதியான வளர்ச்சிப் பணிகளைவிட, தங்களை வளப்படுத்தும் பணிகளில் கவனம்செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

அதற்குள் தி.மு.கவினர், ‘அடுத்த ஆட்சி எங்களுடையது’ என்று இப்போதே உற்சாகத்தில் செயல்படுவதை அ.தி.மு.க-வினரால் தாங்கிக்கொள்ள முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. இந்த ஆட்சி முடிந்துவிட்டால் எடப்பாடியும் இருக்கமாட்டார், பன்னீர்செல்வமும் இருக்கமாட்டார் என்று அ.தி.மு.க., தி.மு.க எனத் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே கருதுகின்றன. ஆனால் எடப்பாடியின் கணக்கோ வேறு மாதிரியாக இருக்கிறது என்கிறார்கள், எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.

‘‘எடப்பாடி திடீரென முதல்வரானபோது ஆட்சி நீடிக்கும்வரை நாமும் நீடிக்கலாம் என்று மட்டுமே நினைத்தார். ஆனால், அடுத்த சில மாதங்களில் அரசியல் பாடத்தை முழுவதும் கற்றுத்தேர்ந்து கொண்டார். ஒருகட்டத்தில் தி.மு.க-விற்கே நெருக்கடியைக் கொடுத்தார். ஆரம்பத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள்கூட இனி அமைச்சர்கள்மீது எழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். குறிப்பாக, அவருக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த டி.டி.வி.தினகரனையும் நாடாளுமன்றத் தேர்தலோடு முடக்கிவிட்டார். இப்போது அவருடைய இலக்கு, கட்சியை வலுப்படுத்த வேண்டும். அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க முயலவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கட்சியை வலுப்படுத்தவே பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை அ.தி.மு.கவிற்காக ஆலோசனை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் எடப்பாடி. அதற்கேற்ப பிரசாந்த் கிஷோர் குழுவும் அ.தி.மு.கவை மீண்டும் வலுப்படுத்துவதற்கான அடிமட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளோடு மேலும் சில கட்சிகளைச்சேர்த்துக்கொண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவேண்டும் என்று எடப்பாடி திட்டமிடுகிறார். அதேநேரத்தில் வலுவாக உள்ள தி.மு.க விற்கும் செக் வைக்க வேண்டுமென்று நினைக்கிறார். வேலூர் தேர்தல் முடிந்த பிறகு கட்சி வளர்ச்சிப்பணிகளில் தீவிரமாக இறங்கவிருக்கிறார். முதற்கட்டமாக தி.மு.க வில் புறக்கணிக்கபட்டவர்களின் பட்டியலை தயார் செய்யுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளாக இருந்து இப்போது வரை எந்த வாய்ப்புமின்றி கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நபர்கள் ஆகியோரை உளவுத்துறை மூலம் கணக்கெடுத்து அதில் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறது முதல்வரின் படை. இவர்களில் எத்தனை பேர் அ.தி.மு.க விற்கு வந்தாலும் ஓ.கே. அல்லது அ.தி.மு.க விற்கு சாதகமாக இவர்கள் செயல்பட வேண்டும். அதற்கான பணிகளை உளவுத்துறை செய்ய வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே தமிழக உளவுத்துறை அ.தி.மு.க அமைத்த கூட்டணிக்கு மிகப்பெரிய பங்காற்றியது. இந்த முறை தி.மு.க -வை நோக்கி உளவுத்துறையை முடுக்கிவட்டு, கட்சிக்குள் உள்ளடி வேலையை ஆரம்பிக்க முடீவு செய்துவிட்டார் எடப்பாடி.

இதனால், தி.மு.கவில் உள்ள பல மூத்த நிர்வாகிகளுக்கு ஆளும்கட்சி தரப்பிலிருந்து செல்போன் அழைப்புகள் சென்றுள்ளன. தி.மு.கவில் இந்த குழப்பத்தை ஏற்படுத்தினால் அவர்கள் மனரீதியாக சோர்வடைந்துவிடுவார்கள். அதற்கு முன்பாக நாம் பல திட்டங்களை அறிவித்து மக்களிடம் இமேஜ் ஏற்படுத்தி விடலாம் என்று எடப்பாடி கணக்கு போட்டுள்ளார்.

ஸ்டாலின்.
ஸ்டாலின்.

இப்படியொரு முயற்சி நடக்கிறதா என்று தி.மு.க தரப்பில் விசாரித்தால், ‘‘இந்த ஆட்சி முடிவுக்கு வந்தால் அடுத்த முறை அ.தி.மு.க ஆட்சி என்பதை நினைத்துப்பார்க்கவே முடியாது. அதனால் இங்கிருந்து அ.தி.மு.கவிற்கு யாரும் போகவாய்ப்பில்லை. வேண்டுமானால் அங்கிருந்து இங்கு யாராவது வருவதற்கு நிறையவே வாய்ப்புண்டு’’ என்று நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள்.