Published:Updated:

`அ.தி.மு.கவினரின் கொரோனா மோசடிக் கணக்கு; உளவுத்துறை ரிப்போர்ட்!'- முதல்வர் எடுத்த புது அஸ்திரம்

எடப்பாடி
எடப்பாடி

`சென்னை, நெல்லை போன்ற வீக்கான பகுதிகளில் தற்போது ஒதுங்கியிருக்கும் பலம்வாய்ந்த நிர்வாகிகள் பலரை களம் இறக்கவும் இவர்கள் இருவரும் தயாராகிவிட்டனர்'.

அ.தி.மு.கவில் உள்ள எம்.எல்.ஏக்கள் சிலர் தினமும் 200 பேருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு இரண்டாயிரம் அரிசி மூட்டை வழங்கியதாக தலைமைக்கு தகவல் அளிக்கிறார்களாம். அத்தோடு பலர் கொரானோ விவகாரத்தில் மக்களுக்குச் செலவு செய்துவிட்டால் தேர்தல் நேரம் என்ன செய்வது என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்களாம். இவ்விவகாரம் உளவுத்துறை மூலமாக முதல்வர் கவனத்துக்கு வர, அவர் புது அஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதாக சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் அரசியல் உள்விவாகரம் அறிந்தவர்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஒருபுறம் கொரோனா தொடர்பான அரசு பணிகளில் பம்பரமாய் சுற்றிச்சுழலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்னொருபுறம் கட்சியைப் பலப்படுத்த ரகசியமாய் ஒரு வேலை செய்து வருவதாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில். கொரோனா பணிகளில் அடிதட்டு மக்கள் வரை சென்று அரசுக்கும் கட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும் வகையில் பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சிப் பிரமுகர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் யார் யார் என ஒரு பட்டியலை தயாரித்துத் தரும்படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, உளவுதுறையை மட்டும் நம்பாமல் வருவாய்துறை மற்றும் உள்ளாட்சிதுறை அதிகாரிகள் மூலமும் அதிமுகவினரின் கொரோனா நிவாரண பணிகள் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறார் என்கிறார்கள்.

144 தடை உத்தரவு காரணமாக அரிசி முதலான உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குபவர்கள் ஏரியா தாசில்தார் அல்லது மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளிடம் முதலில் உரிய அனுமதி பெறுவதற்கு மனு கொடுக்கவேண்டும். எனவே, பொதுமக்களுக்கு கட்சியினரால் வழங்கப்படுகிற நிவாரணப் பொருட்கள் குறித்த அனைத்து விபரங்களும் இந்த அதிகாரிகளுக்கு தெரியும். இதில், ஆளுங்கட்சியினரின் நிவாரணப் பணி விவரங்களும் அடக்கம்.

நிவாரணப் பொருட்கள்
நிவாரணப் பொருட்கள்

எனவே, உளவுத்துறை தரும் தகவல்களுடன் வருவாய்த் துறையினரின் பட்டியலையும் ஒப்பீடு செய்து கொரோனா நிவாரண பணியில் பாய்சசல் காட்டியது யார்? சுணக்கம் காட்டியது யார்? பம்மாத்து செய்தவர்கள் யார்? என்ற தெளிவான பட்டியல் தற்போது அவர் கைக்கு வந்திருக்கிறது! பொதுமக்களுக்கு அள்ளிவழங்கிய வகையில் பொதுவாக அமைச்சர்களில் பெரும்பாலானோர் பாஸ் மார்க் வாங்கியபோதிலும் எதுவுமே செய்யாமல் ரெட் ஸோனுக்குள் வந்த அமைச்சர்களும் உண்டாம்.

குறிப்பாக மத்திய மாவட்டத்தில் ஒரு இனிப்பான அமைச்சரின் நடவடிக்கைகளை கண்டு முதலமைச்சருக்கு கசந்து விட்டதாம். தென்மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிகடாட்சமான ஒரு அமைச்சர் கஜானாவை திறக்கவே இல்லையாம்! கடந்த 50 நாள்களில் அவர் வெளியில் தலைகாட்டியதே ஒரு சிலநாள்கள்தானாம்.

ஒ,பி.எஸ்
ஒ,பி.எஸ்

காரணம் கேட்டவர்களிடம் லட்சுமிகரத்தின் நிழல்வட்டங்கள் சொன்ன பதில், ``அடுத்த தேர்தலில் நிற்பதாக இருந்தால்தானே செலவழிக்க வேண்டும்?" என்பதாம். இதே மனோபாவத்தில் ச.ம.உ-க்கள் நிறைய பேர் தினசரி 200 பேருக்கு நிவாரணப் பைகளை வழங்கிவிட்டு பத்திரிகைகளுக்கு இரண்டாயிரம் அரிசி மூட்டை வழங்கியதாக அறிக்கைவிட்டுவிட்டு கம்மென்று இருந்துவிட்ட தகவல் எல்லாம் முதல்வர கவனத்துக்கு வந்திருக்கிறதாகத் தெரிவிக்கின்றன அ.தி.மு.க வட்டாரங்கள்.

டாஸ்மாக் விஷயத்தைத் தவிர கொரோனோ எபிஸோடில் ஆளுங்கட்சிக்கு பொதுவாக பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பதாக வந்த தகவல்கள் முதல்வரை உற்சாகப்படுத்தி இருந்தாலும் சென்னை, நெல்லை, வேலூர் உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாத மாவட்டங்களில் அ.தி.மு.க தள்ளாடுகிறது என்ற தகவல் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

காவல்துறையினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
காவல்துறையினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற மாவட்டங்களில் கொரோனா பணிகளில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ க்களோடு போட்டிபோட்டுக்கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளும் தமது ஏரியாக்களில் பணிசெய்தனர். அதைப் போல இந்த மாவட்டங்களில் வேலை செய்ய உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததுதான் பிரதான காரணம் என்று நோட் போட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு தேர்தலில் சென்னை, குமரி, நெல்லை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அ.தி.மு.கவைவிட தி.மு.க அதிக தொகுதிகளில் வென்றது. தற்போது ஜெ என்ற ஆளுமை இல்லாத நேரத்தில் இந்த மாவட்டங்களில் தி.மு.கவின் கை மேலும் ஓங்கலாம்.

அவ்வாறு இம்மாவட்டங்களில் தி.மு.க மேலும் இருபது தொகுதிகளைக் கைப்பற்ற நேர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க அரசு அமைப்பது என்பது கனவாகிவிடும்’ என்பதை எடப்பாடி பழனிசமி நன்கு அறிந்தே வைத்துள்ளார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும்,`இதுகுறித்து ஓபிஎஸ்ஸிடம் விரிவாக விவாதித்து இருவரும் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூடத் தெரிகிறது.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, நெல்லை போன்ற வீக்கான பகுதிகளில் தற்போது ஒதுங்கியிருக்கும் பலம்வாய்ந்த நிர்வாகிகள் பலரை களம் இறக்கவும் இவர்கள் இருவரும் தயாராகிவிட்டனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் தற்போது தி.மு.க கையே ஓங்கி உள்ளது. இந்நிலை நீடித்தால் அ.தி.மு.க காணாமல் போய்விடும். எனவே, சென்னை மண்டலத்தைக் கண்காணிக்க அமைச்சர் ஜெயக்குமார், ஆதிராஜாராம், தென் மாவட்டங்களுக்கு கருப்பசாமி பாண்டியன் போன்றோர் மண்டலச் செயலாளர்கள் என்ற பெயரில் களம் இறக்கப்படலாம். இசக்கி சுப்பையா, மைக்கேல் ராயப்பன், போன்ற அ.ம.மு.க வரவுகளுக்கு பதவிகள் வழங்கி தினகரனிடம் எஞ்சியிருப்பவர்களையும் இழுக்க அதிரடி வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இவர்களில் யாராவது ஒருவருக்கு மாவட்டச்செயலாளர் பதவி வழங்கவும் வாய்ப்புள்ளது’’ என்றும் அவர்கள் கூறினர்.

அடுத்த கட்டுரைக்கு