Published:Updated:

`எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் நாளை ஒரே நேரத்தில் பிரசாரம்!’ - சூடுபிடித்த வேலூர் தேர்தல் களம்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரத்தைத் தொடங்குகிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் பிரசாரம் செய்யவிருப்பதால், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி-ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி-ஸ்டாலின்

வேலூர் தேர்தல், கௌரவப் பிரச்னையாக மாறியிருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு நேரடி போட்டியிருந்தாலும், துரைமுருகன் மற்றும் ஏ.சி.சண்முகம் எனும் இரு பெறும் தலைகள் மோதுவதால், இந்தத் தேர்தல் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பணப் பட்டுவாடா மீண்டும் முக்கியக் காரணியாக அமைந்திருக்கிறது.

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

அ.தி.மு.க கூட்டணியில் களமிறங்கியிருக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக, ஒட்டுமொத்த அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் பலர் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியிருக்கும் 6 சட்டமன்றத் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்கிறார்கள்.

தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக, அவரின் தந்தையும் பொருளாளருமான துரைமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ``எத்தனை அமைச்சர்கள் வந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. மண்ணின் மைந்தன் நான். மக்களின் ஆதரவு எங்களுக்குத்தான்’’ என்று தேர்தல் களத்தில் கர்ஜிக்கிறார் துரைமுருகன்.

துரைமுருகன்
துரைமுருகன்

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் வேலூரில் அடுத்தடுத்து இரண்டு நாள்கள் ஒரே நேரத்தில் பிரசாரம் செய்யவிருப்பது, தேர்தல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாளை (27-ம் தேதி) முதல்வரும், தி.மு.க. தலைவரும் வேலூர் வருகிறார்கள்.

நாளை மாலை 5 மணிக்கு வாணியம்பாடியில் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர். பின்னர், மாலை 8 மணிக்கு ஆம்பூரிலும், 28-ம் தேதி மாலை 5 மணிக்கு கே.வி.குப்பம், அன்று மாலை 6 மணிக்கு குடியாத்தத்தில் வாக்கு சேகரிக்கிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை 5 மணிக்கு அணைக்கட்டு, அன்று மாலை 6 மணிக்கு வேலூரில் பிரசாரத்தை நிறைவுசெய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஏ.சி.சண்முகம் - கதிர் ஆனந்த்
ஏ.சி.சண்முகம் - கதிர் ஆனந்த்

இதேபோல், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மூன்று கட்டமாக பிரசாரம் செய்கிறார். நாளை மாலை 4 மணியளவில் கே.வி.குப்பம் சட்டமன்றப் பகுதியிலும்,  28-ம் தேதி மாலை வாணியம்பாடி, 29-ம் தேதி மாலை அணைக்கட்டு பகுதிகளில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கிறார் ஸ்டாலின்.