Published:Updated:

இடைத்தேர்தல்: ஆதரவு கேட்க வந்த எடப்பாடி தரப்பு... ஆதரவு கொடுக்க வந்த பன்னீர்... கமலாலய காட்சிகள்!

அதிமுக - அண்ணாமலை

“அ.தி.மு.க-வுக்கான சின்னம், தொகுதியின் கள நிலவரம், கூட்டணிக் கட்சிகளின் நிலைபாடுகள் என பா.ஜ.க-வை சுற்றி அரசியல் மையம் நிலைக்கொண்டிருக்க, இந்த இடைத்தேர்தலிலேயே பா.ஜ.க VS தி.மு.க என்கிற சூழலை உருவாக்க பா.ஜ.க முன்னெடுத்து வருகிறது”

இடைத்தேர்தல்: ஆதரவு கேட்க வந்த எடப்பாடி தரப்பு... ஆதரவு கொடுக்க வந்த பன்னீர்... கமலாலய காட்சிகள்!

“அ.தி.மு.க-வுக்கான சின்னம், தொகுதியின் கள நிலவரம், கூட்டணிக் கட்சிகளின் நிலைபாடுகள் என பா.ஜ.க-வை சுற்றி அரசியல் மையம் நிலைக்கொண்டிருக்க, இந்த இடைத்தேர்தலிலேயே பா.ஜ.க VS தி.மு.க என்கிற சூழலை உருவாக்க பா.ஜ.க முன்னெடுத்து வருகிறது”

Published:Updated:
அதிமுக - அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணி தெளிவான முடிவெடுத்து, வேட்பாளரை அறிவித்து வேலைகளை தொடங்கியுள்ளது. ஆனால், எதிர் தரப்போ தங்கள் கூட்டணியில் யார் நிற்பது என்கிற முடிவுக்கு வருவதற்கே பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர் தரப்பு கூட்டணியில் ஏற்கனவே அந்த தொகுதியில் நின்ற த.மா.கா-வுக்கு முன்னுரிமை அளித்திருந்தாலும் கள சூழல், இடைத்தேர்தல் ஃபார்முலா ஆகியவற்றை அறிந்து பின் வாங்கியது த.மா.கா. இதனையடுத்து சுமுகமாக முடிந்துவிட்டது என்று இ.பி.எஸ் தரப்பு துள்ளளுடன் வேட்பாளரை அறிவித்து வேலைகளை ஆரம்பிக்கலாம் என்றிருந்த போது, ஓ.பி.எஸ் ஒரு கடிவாளம் போட்டு நானும் போட்டிக்கு வருவேன் என்று அறிவித்தார். இதனால் ஈரோடு களத்தின் தட்பவெப்பம் மாறியது. கூடவே பா.ஜ.க-வும் தங்கள் பங்குக்கு அ.தி.மு.க-வின் சூழலை தங்களுக்கு சாதகமாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கிறது.

பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்.
பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்.

இந்த நிலையில்தான் அ.தி.மு.க-வின் இரு பிரிவினரும் கமலாலயம் படையெடுத்து தங்கள் நிலையை எடுத்து வைத்துள்ளனர். முதலில் எடப்பாடி தரப்பில் கமலாலயத்தில் என்ட்ரி கொடுத்த போது, ஜெயக்குமாரும், தங்கமணியும் ஒரே வண்டியில் வந்திறங்கினர். இவர்கள் வருகைக்கு பின் பத்து நிமிட இடைவேளைக்கு பிறகே கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, செங்கோட்டையன் போன்ற மூத்த நிர்வாகிகள் வந்தனர். அந்த பத்து நிமிட இடைவேளையில், ‘எனக்கு எல்லா வழியும் தெரியும். அதனால் சீக்கிரமாவே வந்துட்டோம்’ என்று ஜெயக்குமார் சொன்னதும், ‘என்ன அதுக்குள்ள கமலாலயம் அட்ரஸ் மறந்துட்டாங்களா’ என்று பா.ஜ.க., தரப்பினர் பேசவும் கலகலப்பானது கமலாலயம் வாசல்.

இதனையடுத்து எடப்பாடி தரப்பினர், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணமலையை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பா.ஜ.க மூத்த தலைவர்களான சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக் குறித்து கமலாலய வட்டாரத்தில் விசாரித்த போது, ``ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை த.மா.கா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. இந்த தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு வலுவான வாக்கு வங்கி இருக்கிறது. ஓ.பி.எஸுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு வார்டில் கூட பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லை. எனவேதான் அவர், பா.ஜ.க போட்டியிட்டால் ஆதரவு கொடுக்க தயார் என அறிவித்துள்ளார். நாங்கள் எங்கள் வலிமையில் நம்பிக்கையாக இருக்கிறோம். நீங்கள் எல்லா டேட்டாவை சரிபார்த்த பின்பு, முழு மனதோடு ஆதரவை எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் நாங்கள் மக்களிடம் செல்கிறோம்” என்று கே.பி.முனுசாமி மூலமாக அண்ணாமலையிடம் தங்கள் நிலைபாட்டை எடுத்து வைத்திருக்கிறார் இ.பி.எஸ்.

பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்.
பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்.

இதற்கு அண்ணாமலை, “நீங்கள் சொல்லும் விவரம் எல்லாவற்றையும் மேல சொல்லி இருக்கிறோங்ணா. பா.ஜ.க-வை பொறுத்தவரை மேலிடம் எடுக்கும் முடிவு. அது உங்களுக்கு தெரியும்” என்று பதிலளித்திருக்கிறார்” என்கிறார்கள்.

இதனையடுத்து கமலாலயம் வந்த ஓ.பி.எஸ். தரப்பு, “நான் 2017-லிருந்து உங்களோடு நெருக்கமாக பயணிக்கிறேன். நீங்கள் நின்றால் என் முழு ஆதரவு உங்களுக்குத்தான்” என்று பேசியிருக்கிறார்.

பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்.
பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள்.

உள்ளுக்குள் ஓ.பி.ஸ்., ஜே.சி.டி.பிரபாகர், வெள்ளமண்டி நடராஜன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் போன்றோர் ஆலோசித்துக் கொண்டிருந்த போது, வெளியே இருந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஒருவர், ‘எங்க வந்து நின்னுட்டு இருக்கோம் பாருங்க. அம்மா இருக்கும் போது இந்த மாதிரி நடந்திருக்கா?’ என்று காவல் அதிகாரி ஒருவரிடம் தன் வருத்தத்தை பகிரிந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், “அ.தி.மு.க-வுக்கான சின்னம், தொகுதியின் கள நிலவரம், கூட்டணிக் கட்சிகளின் நிலைபாடுகள் என பா.ஜ.க-வை சுற்றி அரசியல் மையம் நிலைக் கொண்டிருக்க, இந்த இடைத் தேர்தலிலேயே பா.ஜ.க VS தி.மு.க என்கிற சூழலை உருவாக்க பா.ஜ.க முன்னெடுத்து வருகிறது” என்கிறார்கள் பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலர்.

என்ன நடக்கும்... பொறுத்திருந்து பார்க்கலாம்!