அரசியல்
Published:Updated:

அணிகள் இணைந்தாலும்... மனங்கள் இணையவில்லை!

பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி

இப்போதிருக்கும் மாவட்டச் செயலாளர்களில் 90 சதவிகிதம் பேர் எடப்பாடியின் விசுவாசிகள். அமைச்சர்களோ குறுநில மன்னர்களாக வலம்வருகிறார்கள்.

“அட வாங்கப்பா...” என பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரின் கைகளையும் பிடித்து இணைத்துவைத்தார் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ். இது நடந்தது 2017, ஆகஸ்ட் 21-ல். கைகளோடு சேர்த்து அணிகளும் இணைந்தன. மூன்று மாதங்கள் கழித்து, பன்னீர் அணியிலிருந்த மைத்ரேயன், தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டார்: ‘ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?’ என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதோ, மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. அந்தக் கேள்விக்குறி மட்டும் இன்றைக்கும் அப்படியே தொங்கிக்கொண்டிருக்கிறது!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாகப் பிளவுற்று, பன்னீர் தலைமையில் மதுசூதனன், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன், மைத்ரேயன், மாஃபா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஓர் அணியாகவும் சசிகலா தலைமையில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் ஓர் அணியாகவும் செயல்பட்டனர். ஏப்ரல் 2017-ல் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னமும், கட்சிப் பெயரும் முடக்கப்பட்டன. ‘புரட்சித்தலைவி அம்மா அணி’யின் சார்பில் இரட்டை மின்கம்பம் சின்னத்தில் மதுசூதனனும், ‘அம்மா அணி’ என்ற பெயரில் தொப்பிச் சின்னத்தில் தினகரனும் போட்டியிட்டனர். பணப் பட்டுவாடா புகார் எழுந்ததால், அந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், தினகரனுக்கும் எடப்பாடி தரப்புக்கும் வார்த்தைத் தகராறு முற்றவும் கட்சியிலிருந்து தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.

2017, ஆகஸ்ட் 20-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, பன்னீர் இல்லத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி கலந்துகொண்ட முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்குவது, நிர்வாகிகள் நியமனத்தில் சரிசமப் பங்கு உள்ளிட்டவை பேசிமுடிக்கப்பட்டன. அப்போது, ‘கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பது; அக்குழுவில் பன்னீர் தரப்பிலிருந்து ஐந்து பேரும், எடப்பாடி தரப்பிலிருந்து ஆறு பேரும் இடம்பெறுவது’ எனத் தீர்மானிக்கப்பட்டது. ‘வர்ற வியாழக்கிழமை இந்தக் குழு அமைக்கப்படும்ணே’ என பன்னீரிடம் மணி அமைச்சர்கள் உத்தரவாதம் அளித்தனர். அந்த வியாழக்கிழமை இன்றுவரை வரவில்லை. டெல்லியின் அழுத்தத்தால் இரு அணிகளும் ஒன்றிணைந்தன. ஆனால், மனங்கள் இணையவில்லை. ‘யார் முதல்வர் வேட்பாளர்?’ விவகாரத்தில் பன்னீர் கொதித்தெழுந்ததே அதற்கு சாட்சி.

இப்போதிருக்கும் மாவட்டச் செயலாளர்களில் 90 சதவிகிதம் பேர் எடப்பாடியின் விசுவாசிகள். அமைச்சர்களோ குறுநில மன்னர்களாக வலம்வருகிறார்கள். இவர்களை மீறி, பன்னீரால் கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

அ.தி.மு.க-வின் மிக மூத்த தலைவர் ஒருவர், “அணிகள் இரண்டாக இருந்தபோது, நிர்வாகிகள் எடப்பாடி தரப்பிலும், தொண்டர்கள் பன்னீர் தரப்பிலும் குழுமியிருந்தனர். அந்தத் தொண்டர்களுக்கும், கட்சித் தலைமைக்குமான தொடர்பு இன்று அறுந்துபோயிருக்கிறது. துணை முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ஏற்றிருக்கக் கூடாது. ஒருங்கிணைப்பாளர் பதவியை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் டூர் அடித்திருந்தாலே இன்று கட்சி அவர் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். பொதுக்குழுவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்திருப்பார்” என்றார். அணிகள் இணைந்து மூன்றாண்டுகள் முடிந்துள்ள நிலையில், கட்சியில் குழப்பங்களே எஞ்சியுள்ளன. தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என பன்னீர் தரப்பு கொதிப்பில் இருக்கிறது. அதற்கு சமீபத்திய சாட்சி, முன்னாள் எம்.பி-யான லட்சுமணன்.

விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்துக்கு எதிராக அரசியல் செய்துவந்த லட்சுமணன், மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்தார். விழுப்புரத்தை இரண்டாக உடைத்து லட்சுமணனை மா.செ-வாக்க பன்னீரும் முயன்றார். ஆனால், சி.வி.சண்முகம் விடாப்பிடியாக நின்றதால், அந்த முயற்சி பலிக்கவில்லை. கடைசியில், ஸ்டாலினைச் சந்தித்து லட்சுமணன் தி.மு.க-வில் இணைந்துவிட்டார். பன்னீரால் எதுவும் செய்ய முடியவில்லை.

பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி, இன்று தன்னை ஓர் ஆளுமையாக நிரூபித்திருக்கிறார். அடுத்தடுத்த வழக்குகள், ஊழல் குற்றச்சாட்டுகள், தினகரன் அணியின் குடைச்சல், பன்னீரின் அழுத்தம், கூட்டணிக் கட்சிகளோடு உரசல் எனப் பல தடைகளைக் கடந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியைக் கட்டமைத்ததாக இருக்கட்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஒற்றை ஆளாகத் தோளில் சுமப்பதாகட்டும், தன்னை நிரூபிக்கிறார் எடப்பாடி. ஆனால், இந்த நிரூபணம் பன்னீரிடம் செல்லுபடியாகாது, இரட்டைத் தலைமையாகத்தான் தேர்தலை எதிர்கொள்வது என்பதில் தீர்மானமாக இருக்கிறார் பன்னீர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில், சரிபாதி பிரதிநிதித்துவம் எதிர்பார்க்கிறது பன்னீர் தரப்பு. இதைக் கொடுக்க எடப்பாடி உட்பட அமைச்சர்கள் யாரும் தயாராக இல்லை. அவரவர் மாவட்டங்களில், அவரவர் தீர்மானிப்பவரே வேட்பாளர் என்கிற முடிவில் அமைச்சர்கள் இருக்கின்றனர். இந்தக் குழப்பங்கள் கட்சியை அதலபாதாளத்துக்குக் கொண்டு போய்விடும். அ.தி.மு.க-வுக்குள் அதிகாரப் பகிர்வை அமல்படுத்தவில்லையென்றால், பல லட்சுமணர்கள் உருவாகலாம்!

‘ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்...

கொஞ்சம் பிரிவு வந்தால், பின்பு உறவு வரும்.

நல்ல மனிதனுக்கும் நன்றி மறந்தவர்க்கும்

முன்பு உறவிருந்தால், பின்பு பிரிவு வரும்!’

- எங்கோ எம்.ஜி.ஆர் பாடல் ஒலிக்கிறது!