Published:Updated:

ஈரோடு கிழக்கு: `எப்படிப் பார்த்தாலும் நமக்கு லாபம்தான்’ - களமிறங்கும் அதிமுக; எடப்பாடி கணக்கு என்ன?

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன்

ரிஸ்க் எல்லாவற்றையும் அறிந்தும், த.மா.கா தாமாக வந்து, அங்கு நிற்பதாக விருப்பம் தெரிவித்தது. ஆனால், அதிமுக நிர்வாகிகள் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.

ஈரோடு கிழக்கு: `எப்படிப் பார்த்தாலும் நமக்கு லாபம்தான்’ - களமிறங்கும் அதிமுக; எடப்பாடி கணக்கு என்ன?

ரிஸ்க் எல்லாவற்றையும் அறிந்தும், த.மா.கா தாமாக வந்து, அங்கு நிற்பதாக விருப்பம் தெரிவித்தது. ஆனால், அதிமுக நிர்வாகிகள் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன்

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வெ.ரா திருமகன் வெற்றிபெற்றார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் சமீபத்தில் அவர் மரணம் அடைந்தார். இதனால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 18-ம் தேதி அறிவித்தது.  

மறைந்த திருமகன்
மறைந்த திருமகன்

வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவாகரத்துக்குப் பின்னர், நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், தேதி அறிவிப்புக்கு முன்னரே, அ.தி.மு.க-வுக்குள்ளும் அதன் கூட்டணிக்குள்ளும் தேர்தல் குறித்த விவாதம் அனல் பறந்தது. அ.தி.மு.க-வை பொறுத்தவரை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதி கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. த.மா.கா சார்பில் யுவராஜா போட்டியிட்டார்.

அதேபோலவே, தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியிருந்தது. அதன்படி, காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிட்ட திருமகன் 67,300 வாக்குகளும், த.மா.கா வேட்பாளர் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 58,296 வாக்குகளையும் பெற்றிருந்தார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

திருமகன் மறைவு காரணமாக நடைபெற இருக்கிற இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். அதேபோல, அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா போட்டியிடப்போவதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில்தான், அதிமுகவே களமிறங்கும் என ஜி.கே வாசன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அ.தி.மு.க சீனியர்களிடம் விசாரித்தோம். ``ஈரோடு கிழக்கு என்பது அ.தி.மு.க கோட்டை. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டது. அதில் வெற்றியும் பெற்றோம். பின்னர், 2016-ல் அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து 2021-ல் த.மா.கா-வுக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டது. வெறும் 8,904 வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தோம். தற்போது, ஒற்றைத் தலைமை விவகாரத்தால் சின்னம் கிடைக்கப் போவதில்லை என்ற நிலையே இருக்கிறது.

எடப்பாடி
எடப்பாடி

அதே நேரத்தில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்குத்தான் அந்த இடம் மீண்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, திருமகனின் குடும்பத்தில் யாராவது ஒருவர்தான் அந்த இடத்தில் நிற்க வாய்ப்புகள் அதிகம். இதனால் அனுதாப ஓட்டு அதிகமாக கிடைக்கும். எல்லாவற்றையும் தாண்டி, ஆளும் கட்சியான தி.மு.க., தனது கூட்டணிக் கட்சி வேட்பாளர் அந்தத் தொகுதியில் வெற்றிபெற எந்த எல்லைக்கும் போவார்கள். கூடவே ஓ.பி.எஸ்-ஸும் தனது பங்குக்கு ஏதாவது செய்வார்.

இந்த ரிஸ்க் எல்லாவற்றையும் அறிந்தும், த.மா.கா தாமாக வந்து, அங்கு நிற்பதாக விருப்பம் தெரிவித்தது. ஆனால், அதிமுக நிர்வாகிகள் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள். அந்த இடத்தில் அ.தி.மு.க நேரடியாக நிற்பதுதான் சரியாக இருக்கும் என்று. முதலில் மறுத்த த.மா.கா பின்னர், நிலைமையைப் புரிந்துகொண்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதாவது, அந்தத் தொகுதியில் பா.ஜ.க களமிறங்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி அவர்கள் போட்டியிட்டால், அதிமுக-வை எதிர்த்துப் போட்டி போடுகிறார்கள் என்று கூட்டணியிலிருந்து வெளியே வர முடியும். இதன் மூலம், பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்கும் கட்சிகளையும் அணிதிரட்டவும் முடியும். 

வரும் காலத்தில், மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டாலும், கடந்தமுறை நாங்களாக கூட்டணியைவிட்டு வெளியேறவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி பாஜக-வையும் கையில் வைத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் பாஜக தனித்துப்போட்டியிட்டால் மட்டுமே.

மாறாக, எங்களுக்கு ஆதரவு தெரிவித்தால், பாஜக ஆதரவு எங்களுக்குதான் என பன்னீர் தரப்பை முற்றிலுமாக ஓரங்கட்டிவிடலாம். இதனால் இடைத்தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, எப்படிப் பார்த்தாலும் இந்த இடைத்தேர்தலில் நாங்கள் களமிறங்குவது எங்களுக்கு லாபத்தையே தரும் என்பதுதான் இதிலுள்ள திட்டம்" என்றனர் விரிவாக.