Published:Updated:

``திமுக தலைவர்களே செந்தில் பாலாஜியை எதிர்க்கச் சொல்கிறார்கள்” - ரகசியம் உடைக்கும் அண்ணாமலை

அண்ணாமலை

“ஊழல், குடும்ப ஆட்சி அத்துமீறல் அதிகமாகி மக்கள் திண்டாடும்போது வருவார். அதை நோக்கித்தான் திமுக அரசும் போய்க்கொண்டிருக்கிறது.” - அண்ணாமலை

``திமுக தலைவர்களே செந்தில் பாலாஜியை எதிர்க்கச் சொல்கிறார்கள்” - ரகசியம் உடைக்கும் அண்ணாமலை

“ஊழல், குடும்ப ஆட்சி அத்துமீறல் அதிகமாகி மக்கள் திண்டாடும்போது வருவார். அதை நோக்கித்தான் திமுக அரசும் போய்க்கொண்டிருக்கிறது.” - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

எப்போதும் தன்னைப் பரபரப்பாக வைத்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை, கட்சி அலுவலகமான கமலாலயத்தில் சந்தித்து சமகால அரசியல் நிகழ்வுகளோடு சில கேள்விகளை முன்வைத்தோம்...

``சாதாரண மக்களுக்குக் கொடுக்கப்படும் இலவசங்களை எதிர்க்கிறீர்கள். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் கோடி கோடியாக வரிச்சலுகை அளிக்கப்படுகிறதே உங்கள் அரசில்?''

“கொள்கைரீதியாக ஒரு நாட்டில் வரிச்சலுகை கொடுக்கக் கூடாது என்பதை ஒரு கட்சியாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் வரிச்சலுகைகளை வழங்கத்தான் செய்கின்றன. அப்போதுதான் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க வருவார்கள். மாநிலம் வளர்ச்சிபெறும். அப்படி வரிச்சலுகை வழங்கினாலும் குறைந்தபட்ச மாற்றுவரியை MAT (Minimum Alternate Tax) கட்டிவிடுகிறார்கள். குறிப்பிட்டு யாருக்கும் வரிச்சலுகை வழங்குவது கிடையாது. அதானிக்கு இருக்கக்கூடிய அதே வரிச் சலுகைதான் அண்ணாமலைக்கும் குப்புசாமிக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், இலவசங்களால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சொல்பவர்கள், என்னுடன் புள்ளிவிவரங்களை எடுத்துவந்து விவாதிக்கத் தயாரா... வாக்குகளைக் கவரவே இலவசங்களை ஒரு யுக்தியாகப் பயன்படுத்துகிறார்கள்”

``ஆனால், பா.ஜ.க தமிழகத்தில் கட்சியை வளர்க்க அமைச்சரின் காரில் செருப்பை வீசியது தொடங்கி பல விஷயங்களில் வன்முறையை ஒரு யுக்தியாகப் பயன்படுத்துகிறதே?''

``அமைச்சரின் காரில் செருப்பு வீசியதை தலைவராக நான் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இதே தி.மு.க-வினர் 2017-ம் ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகருக்கு காரில் வந்தபோது செருப்பு, கல் எடுத்து அடித்து ஆறு பேர் கைதானார்கள். ‘தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டுட்டாங்க’ என்று தி.மு.க தரப்பிலிருந்து பதில் வந்தது. ஆனால், நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. தொண்டர்கள் சில இடத்தில் தவறு செய்யும்போது திருத்தவேண்டியது எங்கள் கடமை. அதைச் செய்வோம்.''

பி.டி.ஆர் - சரவணன்
பி.டி.ஆர் - சரவணன்

``சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் இணைத்துக்கொள்வோம் என்று சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியில் சேருபவர்கள் பெரும்பாலும் சமூகவிரோதிகளாக இருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?”

``சமூகவிரோதிகளுக்கு பா.ஜ.க-வில் எப்போதும் இடமில்லை. அரசியல் லாபத்துக்காகவும், ஆளுங்கட்சியில் சேர்ந்தால் போலீஸ் கைதுசெய்ய மாட்டார்கள் என்று வருபவர்களுக்கு இது புகலிடமோ, தஞ்சம் அடைவதற்கான இடமோ கிடையாது. சில இடங்களில் தவறுகள் நடக்கின்றன. அந்த மாவட்டத் தலைவர்களிடம் நானே முறையிட்டிருக்கிறேன். தொடர்ந்து இது பேசுபொருளாக இருப்பதால், இரண்டு தலைவர்களை நியமித்து புதிதாக வருபவர்களது பின்னணியைத் தெரிந்துகொண்டு இணைத்துவருகிறோம். ஆனால், இது குறித்து தி.மு.க எங்களை விமர்சிப்பது, கண்ணாடிக் கூண்டுக்குள் உட்கார்ந்துகொண்டு கல் எறிவதுபோல் இருக்கிறது.”

``காங்கிரஸுக்காவது 18 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். பா.ஜ.க-வுக்கு 4 பேர்தான். நீங்கள் காங்கிஸை, ‘ தி.மு.க கொடுக்கும் ஆக்சிஜனில்தான் உயிர்வாழ்கிறது’ என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா?

“உள்ளாட்சித் தேர்தல் ஓர் உதாரணம். அதில் பா.ஜ.க., காங்கிரஸ் வாக்குவங்கியைப் பார்த்தால் தெரியும். இதுவரை வெற்றி பெறாத இடங்களில் வென்றிருக்கிறோம். புதிதாகப் பல இடங்களில் கால் பதித்திருக்கிறோம். இன்றைய தேதியில் காங்கிரஸ் ஒரு கூட்டம் போட்டால் 1,000 பேருக்கு மேல் கூட்டம் சேருமா?''

அண்ணாமலை
அண்ணாமலை

``ஆனால், காசு கொடுத்துக் கூட்டம் கூட்டப்படுகிறது என்கிறார்களே?”

``தமிழ்நாட்டில் பணம் கொடுக்க பா.ஜ.க ஆளுங்கட்சியாக இருக்கிறதா அல்லது டாஸ்மாக் வைத்திருக்கிறோமா... அப்படியே கொடுத்தாலும் எத்தனை நாள், எத்தனை கூட்டத்துக்குக் கொடுக்க முடியும்... தொடர்ந்து ஆட்சியிலிருந்த கட்சிகளே திணறும்போது ஆட்சியிலேயே இல்லாத பா.ஜ.க எப்படிக் கொடுக்க முடியும்... மத்தியில் ஆட்சியில் இருக்கிறீர்களே என்பார்கள். மத்தியில் இருந்தால் தமிழ்நாட்டுக்கு பணமா கொடுப்பார்கள்... ஊக்கம் வேண்டுமானால் கொடுப்பார்கள்.”

``அ.தி.மு.க-வில் நடக்கும் பிரச்னைக்கு பா.ஜ.க-தான் காரணம் எனத் தொடர்ந்து சொல்லப்படுகிறதே?”

``எனக்கு இதில் எந்த ஐடியாவும் கிடையாது. காரணம், இப்போது அ.தி.மு.க-வில் நடக்கக்கூடிய ஒற்றைத் தலைமைப் பிரச்னைக்கும், பா.ஜ.க-வுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. நீதிமன்றத்தை வைத்து அ.தி.மு.க-விவகாரத்தில் பா.ஜ.க விளையாடுகிறது என்கிறார்கள் சிலர். இ.பி.எஸ்-ஸுக்கோ, ஓ.பி.எஸ்-ஸுக்கோ ஆதரவாக வந்தால் அவருக்கு ஆதரவு என்கிறார்கள். இருவருக்கும் நடுநிலையாக வந்தால் பா.ஜ.க வேறெதோ திட்டம் போடுகிறது என்கிறார்கள். எப்படித்தான் அரசியல் செய்வது... எங்களைப் பொறுத்தவரை அந்தக் கட்சியின் தலைமை யாரோ அவர்களோடு பா.ஜ.க பேசும், தனிபட்ட நபரிடமில்லை.”

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, மோடி
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, மோடி

“இ.பி.எஸ் டெல்லி சென்றது மர்மமாகவே இருக்கிறதே... அதனால்தான் ஆளுநர் தேநீர் விருந்திலும் இ.பி.எஸ் பங்கேற்கவில்லை என்கிறார்களே?”

``பழைய ஜனாதிபதி பிரிவு உபசரிப்பு விழாவுக்கு, பிரதமர் அலுவலகத்திலிருந்து நேரடியாக எனக்கும், முன்னாள் முதல்வர் என்கிற அடிப்படையில் இ.பி.எஸ் அண்ணனுக்கும் போன் வருகிறது. மொத்தமாகவே இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் 60 பேருக்கும் கீழ்தான். அப்படி டெல்லிக்குச் சென்ற இ.பி.எஸ் அண்ணன் பிரதமரிடம் அப்பாயின்மென்ட் கேட்கவும் இல்லை, அங்கு கொடுக்கவும் இல்லை. நானும் அவரும் ஒரே டேபிளில் சாப்பிடும்போது, ‘எப்ப ஊருக்குக் கிளம்புறீங்க’ என்று கேட்டேன். ‘நாளைக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம். பார்த்துட்டுத்தான்’ என்றார். அதன் பிறகு பிரதமர் தமிழ்நாடு வருகையில் இ.பி.எஸ் அண்ணன் விமானம் இறங்கும்போதும், ஓ.பி.எஸ் அண்ணன் மீண்டும் டெல்லி செல்லும்போதும் பார்த்தார்கள். இதில் எங்கேயுமே குழப்பம் இல்லை. ஆளுநர் தேநீர் விருந்தில் எனக்கு உடம்பு சரியில்லாததால் கலந்துகொள்ளவில்லை. இ.பி.எஸ் அண்ணான் ஏன் செல்லவில்லை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் இருவரும் திட்டம் போட்டுப் போகவில்லை என்று செய்தி வருகிறது. இது தவறானது.”

``கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் பா.ஜ.க., அ.தி.மு.க-வுக்கு எதிராகவும், தீவிரமாகவும் இருப்பதால் தொடர்ந்து அவர்மீது நீங்கள் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகச் சொல்கிறார்களே?”

``எனக்கு எல்லோரும் சமம்தான். ஆனால், 40% பட்ஜெட் கன்ட்ரோல் செய்வது செந்தில் பாலாஜியின் துறைதான். அதேபோல, எல்லா குற்றச்சாட்டுகளும் அவரைச் சுற்றித்தான் இருக்கின்றன. மற்ற அமைச்சர்கள் டம்மிதான். இந்த அரசின் அமைச்சரவையில் ஊழல் செய்து பணம் சம்பாதித்துக் கொடுப்பதில் நம்பர் ஒன் செந்தில் பாலாஜிதான். இன்னும் சொல்லப்போனால் நிறைய தி.மு.க தலைவர்களே ஏர்போர்ட்டில் பார்க்கும்போது, ‘இன்னும் நீங்கள் வலுவாக செந்தில் பாலாஜியை எதிர்க்க வேண்டும்’ என்று என்னிடம் கூறுகிறார்கள்.''

ஸ்டாலின், செந்தில் பாலாஜி
ஸ்டாலின், செந்தில் பாலாஜி

“நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் வெளியிடலாமே... வெறும் மிரட்டல் அரசியல் செய்வது ஏன்?”

“எந்த ஆதாரம் கொடுத்தாலும் இன்னமும் கொடு என்று விதண்டாவாதம்தான் செய்கிறார்கள். பி.ஜி.ஆர் எனர்ஜி மீதான புகார் குறித்து இன்றைக்கு வரைக்கும் முதல்வர் மறுக்கவில்லையே... அதற்கான ஆதாரம் எல்லோரிடமும் இருக்கிறது. பி.ஜி.ஆர்-க்கு கொடுக்கக் கூடாது என்று டேன்ஜெட்கோ சொன்ன பிறகும் சி.எம் மீட்டிங்கில் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. இதற்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். செந்தில் பாலாஜி மீது விஜிலன்ஸில் நாங்கள் அளித்த புகாருக்கு இரு முறை சம்மன் கொடுத்து அவர் ஆஜராகியிருக்கிறார். ஆளுநரிடம் கொடுத்த புகாரும் பரிசீலனையில் இருக்கிறது. அவர் எங்கேயும் தப்பித்துப் போக முடியாது. பெங்கால், மகாராஷ்டிரா மாநிலத்திலும் இரண்டு மூன்று செந்தில் பாலாஜி இருந்தார்கள். இப்போது எல்லோரும் உள்ளே இருக்கிறார்கள்.”

“ஒரு பக்கம் பட்டியலினப் பிரதிநிதிகளை ஜனாதிபதியாக்கினோம், தலைவர்களாக்கினோம், அமைச்சர்களாக்கினோம் என்று மார்தட்டும் பா.ஜ.க., பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொடி ஏற்ற அனுமதிக்காததற்கு அறிக்கை மட்டும் விட்டால் போதுமா?”

“ஏதோ ஓர் இடத்தில் பத்திரிகைச் செய்தியாக வந்ததை, பா.ஜ.க-தான் பெரிய பேசுபொருளாக மாற்றியது. ‘எல்லா இடங்களிலும் நாங்கள் ஏற்றவைக்கிறோம்’ என்று அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால், 75-வது சுதந்திர தின விழாவின் மகத்துவத்துக்காகவும், அதிகாரிகளுக்கு மரியாதை கொடுத்தும் அறவழியில் முன்னெடுத்தோம். பா.ஜ.க நிறைய போராட்டம் செய்திருந்தாலும், எல்லாவற்றுக்கும் தெருவுக்கு வந்து போராடுவது தீர்வு கிடையாது. ஓர் இடத்தில் பத்திரிகை, அறிக்கை மூலமாகக்கூடச் சொல்லலாம்.”

பாஜக - அண்ணாமலை
பாஜக - அண்ணாமலை

``எட்டு வருடங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தும், தமிழகத்தில் பா.ஜ.க 8% கூட கட்சி வளர்ச்சி இல்லையே... என்ன காரணம்... அதை ஆய்வு செய்ததுண்டா?”

``இன்றைக்கு தேதியில் தமிழ்நாட்டில் பா.ஜ.க 20% மேல் வாக்கு வைத்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தும் கொலுசும், ஹாட் பாக்ஸ் கொடுத்தும்தானே வெற்றிபெற முடிந்தது. இதையெல்லாம் தாண்டித்தானே வந்திருக்கிறோம்... தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடிப்படையில் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. அனைவருக்குமான கட்சி பா.ஜ.க என்பதை ஆணித்தரமாகச் செயல் மூலமாகவும், காட்சி மூலமாகவும் காட்டிவருகிறோம். இந்த நேரத்தில் கட்சி எங்கிருக்க வேண்டும் என்று வரையறை செய்திருந்தோமோ அங்கிருக்கிறது. 2024- தேர்தலில் எங்கிருக்க வேண்டும் என்று வேலை செய்கிறோமோ அங்கிருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.”

``ஏக்நாத் ஷிண்டே எப்போது வருவார்..?”

“(சிரிக்கிறார்). இதைச் சொன்னதிலிருந்து ‘ரஜினி எப்போ வருவார்... ரஜினி எப்போ வருவார்...’னு கேட்கிற மாதிரி ‘ஏக்நாத் ஷிண்டே எப்போ வருவார்’ என்று கேட்கிறார்கள். நிச்சயம் வருவார். ஊழல், குடும்ப ஆட்சி அத்துமீறல் அதிகமாகி மக்கள் திண்டாடும்போது வருவார். அதை நோக்கித்தான் தி.மு.க அரசும் போய்க்கொண்டிருக்கிறது.”

அண்ணாமலை
அண்ணாமலை

``அண்ணாமலை முதல்வர் ஆவார்னு அண்ணாமலைக்கு நம்பிக்கை இருக்கிறதா?”

“நான் முதல்வர் ஆக வேண்டுமென்று வரவில்லை. விவசாயி ஆக வேண்டும் என்றுதான் வந்தேன். அதற்காகக் கஷ்டபட்டு சம்பாதித்த காசையெல்லாம் தோட்டத்தில் முதலீடு செய்து, போர் போட்டு, இரண்டு ஆடு எல்லாம் வாங்கிவிட்டு பட்டி கிட்டி எல்லாம் அடைச்சேன். ஆனால், அந்த வேலை செய்ய முடியாமல், சம்பந்தமே இல்லாத ஊர் சென்னைக்கு வந்து பா.ஜ.க என்ற கட்சியின் ஓர் அரசியல் தலைவராக இருக்கிறேன். என்னுடைய அடிப்படை ஆசை ஒரு விவசாயாக இருக்கணும். விபத்தாக அரசியலுக்கு வந்திருக்கேன். கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான் கனவாக இருக்குமே தவிர, தனிப்பட்ட முறையில் அண்ணாமலை அதாகணும், இதாகணும் என்கிற பேச்சே துளிக்கூட கிடையாது.”