Published:Updated:

`ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன!’ - குலாம் நபி ஆசாத்

`வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட வேளாண் சட்டம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது’ என்று குலாம் நபி ஆசாத், வரலாற்றுப் பக்கங்களை நினைவுகூர்ந்து பேசினார்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த இரண்டு மாதங்களையும் தாண்டி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இந்தநிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க பல்வேறு கட்சிகளும் நேரம் கோரியிருந்தன. மாநிலங்களவையில் இது குறித்து விவாதிக்க 15 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இரண்டு நாள்களுக்குக் கேள்வி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
RSTV

காங்கிரஸின் மூத்த தலைவரும், மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் பேசுகையில், ``இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யுமாறு பிரமர் மோடியை வலியுறுத்துகிறேன். ஜம்மு - காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம் ஆகிய இரண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காணக்கூடிய ஒரே நபர் பிரதமர் மோடிதான்.

'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' இந்த இரண்டுமே நமக்கு மிகவும் முக்கியம். இந்தக்ஷ் சமூகத்தில் ராணுவ வீரர்கள், விவசாயிகள் என்று இந்த இரண்டு பிரிவினர்கள் இல்லையென்றால் நாம் முழுமையற்றவர்கள். எல்லையில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல்க், எல்லாச் சூழ்நிலைகளிலும் நாட்டுக்காகப் பாடுபடும் வீரர்களுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன். அதேவேளையில், கடந்த சில மாதங்களாகத் தங்களின் உரிமைக்காகப் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி
RSTV

அரசு - விவசாயிகள் இடையில் முரண்பாடு ஏற்படுவது இது முதன்முறை கிடையாது. நிலக்கிழார்கள், ஜமீன்தார்களுக்கு எதிராகவும், சில நேரங்களில் அரசுகளுக்கு எதிராகவும் தங்களின் உரிமைக்காகவும் பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடியுள்ளனர். ஏன்... ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட விவசாயிகள் போராடியுள்ளனர். விவசாயிகளின் தொடர் போராட்டங்களால், ஆங்கிலேயர்கள் தங்களின் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளார்கள். விவசாயிகள் இந்த நாட்டின் வலிமை மிகுந்த சக்தி. அவர்களுடன் சண்டையிடுவதன் மூலம் எந்த முடிவையும் எட்டிவிட முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`எந்த அனுமதியும் கொடுக்கவில்லை!’- `உலோக லத்தி’ சர்ச்சைக்கு டெல்லி போலீஸ் விளக்கம்

ஓர் அரசாங்கம், தன் சொந்த மக்களோடு போராடக் கூடாது. போராட வேண்டியது எதிரிகளுடன்தான். ஜனவரி 26-ம் தேதி செங்கோட்டையில் நடந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. அப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாத ஒன்று. அது ஜனநாயகத்துக்கு எதிரானது. அது சட்டம் ஒழுங்குக்கு எதிரானது. குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதேநேரத்தில், குற்றமற்றவர்களை அதில் சம்பந்தப்படுத்தக் கூடாது.

ஜனவரி 26-ம் தேதி காணாமல்போனவர்களைக் கண்டுபிடிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். வெளியுறவு அமைச்சராக இருந்தவர் உள்ளிட்ட சில பத்திரிகையாளர்கள் மீதும் தேசத் துரோக வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அவர்கள் தேசத் துரோகிகள் என்றால், நாங்கள் அனைவரும் தேசத் துரோகிகள்தான்’’ என சசிதரூர் மற்றும் சில பத்திரிகையாளர்கள் மீது பதியப்பட்ட தேசத் துரோக வழக்கை மேற்கோள்காட்டிப் பேசினார்.

சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ராம் கோபால் யாதவ் பேசுகையில், ``டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையான காசிப்பூரில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பாகிஸ்தான் எல்லையில்கூட இல்லை. பாகிஸ்தான் எல்லையை நான் பார்த்திருக்கிறேன்" என்று பேசினார்.

இந்தச் சூழலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ``டெல்லி விவசாயிகளால் சூழப்பட்டுள்ளது. அவர்கள்தான் நமக்கான வாழ்வாதாரங்களைத் தருபவர்கள். நாம் ஏன் அவர்களை அச்சுறுத்துகிறோம், அடிக்கிறோம், கொல்கிறோம்... அரசு ஏன் அவர்களுடன் பேசி இந்தச் சிக்கலைத் தீர்க்கவில்லை? இந்தப் பிரச்னை நாட்டுக்கு நல்லதல்ல. விரைவில் தீர்க்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு