மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ``சில நேரங்களில் அரசியலிலிருந்து விலகலாம் என்று நினைத்திருக்கிறேன்" என்று கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. சமூக ஆர்வலரும், முன்னாள் எம்.எல்.சி உறுப்பினருமான கிரிஷ் காந்தியின் 75-வது பிறந்தநாளன்று, நடத்தப்பட்ட பாராட்டுவிழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, ``அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் என்பது சமுதாயம் மற்றும் நாட்டின் நலனுக்காகவா அல்லது அரசாங்கத்தில் இருப்பதற்காகவா... மகாத்மா காந்தியின் காலத்திலிருந்தே சமூக இயக்கத்தின் ஒரு பகுதியாகவே அரசியல் இருந்துவருகிறது. பின்னர் அது, நாடு மற்றும் அதன் வளர்ச்சிக்கான இலக்குகளில் கவனம் செலுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்றைய அரசியலில் 100 சதவிகிதம் ஆட்சிக்கு வருவதைப் பற்றித்தான் நாம் பார்க்கிறோம். அரசியல் என்பது சமூக-பொருளாதார சீர்திருத்தத்தின் உண்மையான கருவி. அதனால் இன்றைய அரசியல்வாதிகள் சமூகத்தில் கல்வி, கலை போன்றவற்றின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். கிரீஷ் பாவ் அரசியலிலிருந்தபோது அவரை ஊக்கப்படுத்தினேன். ஏனெனில் நான்கூட அரசியலிலிருந்து விலகிவிடலாம் என்று சில சமயம் நினைத்திருக்கிறேன். மேலும் அரசியலைத் தவிர, வாழ்க்கையிலும் செய்யவேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன" என்று கூறினார்.