Election bannerElection banner
Published:Updated:

நாகர்கோவில்: `பழனிசாமியை அமைச்சர்களே முதல்வராக மதிப்பதில்லை!’ - ஸ்டாலின்

நாகர்கோவிலில் பேசிய ஸ்டாலின்
நாகர்கோவிலில் பேசிய ஸ்டாலின்

`இன்று நடப்பது அரை அ.தி.மு.க., அரை பா.ஜ.க ஆட்சி. எல்லாவற்றையும் அரைகுறையாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்றார் ஸ்டாலின்.

`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். பின்னர் ஸ்டாலின் பேசுகையில், ``உங்கள் மாவட்டம்தான் இந்தியாவின் மகத்தான அடையாளமாகச் சொல்லப்படுகிறது. வடக்கே இமயமும், தெற்கே குமரியும் அடையாளமாக அமைந்துள்ளன. அப்படிப்பட்ட குமரிக் கடலில் தமிழ் ஆசான் வள்ளுவனுக்கு 133 அடி உயரத்தில் சிலைவைத்து, அதை தமிழ்க் கடலாக மாற்றியவர் கருணாநிதி. இந்தியாவில் ஒரு சுதந்திரப் போராட்டம் நடந்தபோது தென்குமரியில் இரண்டு சுதந்திரப் போராட்டங்கள் நடந்தன. கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டை, பீர்மேடு, தேவிகுளம் ஆகியவற்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் எனப் பல தியாகிகள் உயிரைப் பணயம்வைத்து போராடினார்கள். எல்லைப் போர் தியாகிகளுக்கும், அவர்களுடைய குடும்பத்துக்கும் சலுகை வழங்கியது கருணாநிதி ஆட்சி. இந்தியப் போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், எல்லைப்போர் தியாகிகள் அனைவரையும் போற்றியது கருணாநிதி அரசு. கருணாநிதியும், அண்ணாவும் தமிழகத்துக்காக, தமிழ் இனத்துக்காக, தமிழர்களுக்காக ஆட்சியை நடத்தினார்கள். இத்தகைய ஆட்சிதான் விரைவில் அமையவிருக்கிறது.

பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்த ஸ்டாலின்
பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்த ஸ்டாலின்

சிலர் அமைச்சர்கள் ஆக வேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு வர நினைக்கும் கட்சி அல்ல தி.மு.க. நானோ மற்றவர்களோ பதவிக்காக அலைபவர்கள் அல்ல என்பதைத் தொண்டர்களும் தமிழக மக்களும் அறிவார்கள்.1966-முதல் கழக, பொதுப்பணி ஆற்றிவருகிறேன். ஆனாலும் 1984-ல் தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அப்போது, `நீங்கள் அமைச்சர் ஆகப்போகிறீர்களா?’ என நிருபர்கள் கேட்டார்கள். நான் அமைச்சர் ஆக விரும்பவில்லை என கலைஞரிடம் சொல்லிவிட்டதாகச் சொன்னேன். `இளைஞரணிச் செயலாளரான ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பீர்களா?’ என கலைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்கு, `அமைச்சர் ஆகக்கூடிய எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. ஆனால், என் மகன் என்ற காரணத்தால் அந்தத் தகுதியை அவர் இழந்துவிட்டார்’ என்று கூறிவிட்டார்.

மகன் என்பதற்காக என்னை அரசியலில் வளர்த்தவர் அல்ல கருணாநிதி. அவர் மகன் என்பதற்காக நான் உழைக்காமலும் இருக்கவில்லை. லட்சோப லட்சம் தொண்டர்கள் இந்த இயக்கத்தில் என்னை எற்றுக்கொள்வதற்கான காரணம் நான் உழைத்த உழைப்புதான். 2002-ல் எனக்காக ஒரு சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். சென்னை மேயர் பதவி, எம்.எல்.ஏ பதவியில் இருந்ததால் ஒருவர் இரண்டு பதவியில் இருக்கக் கூடாது என தனிச்சட்டத்தை ஜெயலலிதா நிறைவேற்றினார். அதை நான் எதிர்க்கவில்லை. உடனே, நான் மேயர் பதவியைவிட்டு விலவிலகினேன். மக்களுக்கு சேவையாற்றத்தான் பதவியே தவிர, எனது தனிப்பட்ட உயர்வுக்காக பதவி அல்ல.

பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களை பெட்டியில்வைத்த ஸ்டாலின்
பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களை பெட்டியில்வைத்த ஸ்டாலின்

ஜெயலலிதா இறந்த பிறகு அ.திமு.க-வில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி தி.மு.க ஆட்சி அமைக்கும் என்றார்கள். அ.தி.மு.க-விலிருந்தும் சிலர் தூதுவிட்டார்கள். அவர்களைப்பற்றிச் சொல்ல விரும்பவில்லை. அப்படி ஆட்சி அமைத்தால் அது தி.மு.க அரசாக இருக்காது. கோடிக்கணக்கான மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அது விரைவில் அமையவிருக்கிறது. 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தி.மு.க ஆட்சி அமையவிருக்கிறது. இன்று நடப்பது அரை அ.தி.மு.க,, அரை பா.ஜ.க ஆட்சி. எல்லாவற்றையும் அரைகுறையாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வு ரத்து எனத் தீர்மானம் போடுவார்கள். ஆனால், நீட் தேர்வு இருக்கும். ஏழு பேர் விடுதலைக்கு ஆதரவாகத் தீர்மானம் போடுவார்கள். ஆனால், அவர்கள் ஜெயிலில் இருப்பார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராகத் தீர்மானம் போடுவார்கள், ஆனால், இந்தித் திணிப்பு நடந்துகொண்டேயிருக்கும். மாநில உரிமை, மாநில நிதி கேட்டு மனு கொடுப்பார்கள் எதுவும் கிடைக்காது. எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவார்கள். ஆனால், ஒரு செங்கல்கூட வைக்க மாட்டார்கள்.

மனு கொடுக்க திரண்ட மக்கள்
மனு கொடுக்க திரண்ட மக்கள்

பழனிசாமி தன்னை முதல்வர் என்பார். ஆனால், அமைச்சர்கள் யாரும் மதிக்க மாட்டார்கள். பழனிசாமி தனது கடுப்பாட்டுக்குள் அ.தி.மு.க இருப்பதாகக் காட்டிக்கொள்வார். ஆனால், பழனிசாமியை பன்னீர்செல்வம்கூட முன்மொழிய மாட்டார். அ.தி.முக அரசு நாட்டைக் கெடுத்துவருகிறது. இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட தி.மு.க-வுக்கு முழுமையான வெற்றியைத் தாருங்கள். குமரி மாவட்டத்தில் கடந்த முறை தேர்தலில் முழுமையான வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த முறையும் அது போன்ற வெற்றியைக் கொடுங்கள். இன்று உங்கள் எழுச்சியைப் பார்க்கும்போது முழுமையான வெற்றியைத் தருவீர்கள் என நம்புகிறேன். நீங்கள் அளித்தது உங்கள் கோரிக்கை அல்ல; என்னுடைய கோரிக்கை. உங்கள் இதயங்களை நான் கொண்டு செல்கிறேன். கலைஞர் மரணத்தின்போது அண்ணா அருகில் அடக்கம் செய்ய இடம் கொடுக்காத நயவஞ்சகர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு