Published:Updated:

`நீங்கள் வேடிக்கை பார்ப்பதால்தான் அரசியலில் கறை படிந்திருக்கிறது!'- லயோலா விழாவில் கமல்ஹாசன்

இந்த இளைஞர்களே என்னுடைய குடும்பம். இளைஞர்களே நாளைய தலைவர்கள். எந்த மொழியையும் நான் எதிர்க்கவில்லை. மொழி என்பது குழந்தைகளின் டயபர் போன்றது.

Kamal
Kamal

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற Media con '19 ஊடகக் கருத்தரங்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். மாணவர்கள் முன்னிலையில் பேசிய அவர், ``சினிமாவில் டிஜிட்டல் மயம் வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கூவிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பலரின் சுய லாபத்துக்காக அது தாமதமாகி வந்தது. இப்படியே பல தொழில்நுட்பங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. சமூக அக்கறை உள்ளவர்களாக மாணவர்களை மாற்றும் வல்லமை கொண்ட ஒன்றாக ஊடகம் மாறிவிட்டது. அந்தச் சாட்டையை மாணவர்கள் கையில் எடுத்துச் சுழற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. நான் பேசுவது அரசியல் என்று பலருக்கு சந்தேகம் வருகிறது. சந்தேகமே அல்ல அது அரசியல்தான்.

kamal hassan in a event
kamal hassan in a event

அரசியல் இல்லாமல் அரசு, கல்வி, விவசாயம் உள்ளிட்ட எந்த அடிப்படை பிரச்னைகளுக்கும் தீர்வு கிடையாது. எதிலும் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல், பன்மைத்துவமாக இருக்க வேண்டும். கரைவேட்டி அசிங்கம் என்று மாணவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதால்தான் இன்று அரசியலில் கறை படிந்திருக்கிறது” என்றார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், ``தமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

இனி ஊடகம் எப்படி இருக்கும்?வழிகாட்டிய லயோலா MediaCon19

வாரிசு அரசியல் சுதந்திரத்துக்கு முன்பு இருந்தாலும் பின்பு இருந்தாலும் அது தவறுதான். தமிழக அரசியலிலிருந்து குடும்பத்தைப் பிரிக்க முடியாது என்பது உண்மையாக இருந்தால், என்னுடைய குடும்பத்தை நான் பெரிதுபடுத்திக் கொள்கிறேன். இந்த இளைஞர்களே என்னுடைய குடும்பம். இளைஞர்களே நாளைய தலைவர்கள். எந்த மொழியையும் நான் எதிர்க்கவில்லை. இந்தியாவில் இந்தி தான் கடைசியாக பிறந்த மொழி. அப்படி பார்த்தால் இந்தி டயபர் போட்டு நடக்கும் குழந்தை போன்றது. அதற்காக இந்தியை வெறுக்க மாட்டோம். ஆனால் திணித்தால் ஏற்க மாட்டோம். மொழி ஒரு தொடர்பியல் கருவிதான். எனவே அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது.

mnm chief
mnm chief

உணவகத்தில் நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை உணவகத்தினர் முடிவு செய்யக் கூடாது. சமூக வலைதளத்தில் நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் உயரத்தில் இருப்பவர்கள், பிரபலமாக இருப்பவர்கள் சொன்னால் அது அதிகம் நபரை சென்று சேரும். அந்த உயரத்தில் ஒரு சரியான ஆளைத்தான் நிறுத்தி வைக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்துத் திட்டங்களும் கமிஷன் சார்ந்து இயங்குகிறது. படித்த, அறிவுள்ள நபர்களைக் கைகுலுக்கி அழைத்து அருகில் வைத்து அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு திட்டங்களை இயற்ற வேண்டும். ஆனால், இன்று யாரும் படித்தவர்களைக் கண்டுகொள்வது இல்லை.

தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ் நடக்கும் பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தமிழில் பிறமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்தப் பழக வேண்டும். காதலைக்கூட நாம் `ஐ லவ் யூ’ என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். தமிழர்களுக்கு உணர்வு உள்ள வரை தமிழ் வாழும். அதை அசைக்க முடியாது. தமிழர்களின் கர்ஜனை உள்ளவரை தமிழ் எனும் காடு பெருகி வளர்ந்துகொண்டே இருக்கும்.

kamal speech
kamal speech

வேலூரில் கயிறு கட்டி சடலத்தை இறக்கும் அவலத்துக்குக் காரணம், இந்த அரசுதான். சுடுகாட்டில்கூட சமத்துவம் இல்லை. எனக்கு வேறு நிறைய வேலை இருக்கிறது. எனவே, என்னுடைய வேலையைப் பார்க்க இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்று பேசினார்.