Published:Updated:

`வருத்தம் வேண்டாம்; அரசியல் வளர்ச்சிக்கு உதவும்'- காஷ்மீர் நிலைகுறித்து பேசிய ஆளுநர் மாலிக்!

மலையரசு

காஷ்மீரின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் மத்திய அரசு விரைவில் மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட உள்ளது.

J&K Governor Satyapal Malik
J&K Governor Satyapal Malik

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை முடக்கி அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இருவேறு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகிவிட்டது. வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் பிரிவு உத்தரவு அமலுக்கு வருகிறது. இருப்பினும் இன்று வரையிலும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை என்கின்றன அங்கிருந்து வரும் தகவல்கள். ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து தற்போதுவரை அலைபேசி, இணையம் முதலிய எல்லாவிதமான தகவல்தொடர்புகளும் அங்கே முடக்கப்பட்ட நிலையே இருந்துவருகிறது. காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதாக மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டாலும் நிதர்சனம் அவ்வாறாக இல்லையென மக்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

police protection in kashmir
police protection in kashmir

சமீபத்தில் இந்த உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. ஆனால், மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு வராமல் கடைகளுக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். பள்ளிகளுக்கும் மாணவர்கள் வருவதில்லை எனவும் பணியில் உள்ள சில ஆசிரியர்கள் மட்டும் வந்து செல்வதாக பி.டி.ஐ தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆர்டிக்கிள் 370 ரத்துக்குப் பிறகு முதல்முறையாகச் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய சத்யபால் மாலிக்கிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்கு, ``உயிரிழப்புகளை தடுக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேவையற்ற உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இன்டெர்நெட் சேவையை முடக்கியதற்குக் காரணம் தீவிரவாதம்தான். நம்மைவிட தீவிரவாதிகள் மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவையை அதிகமாகப் பயன்படுத்திவருகின்றனர்.

மக்களை மூளைச் சலவை செய்ய இன்டர்நெட் சேவை அதிகமாக பயன்படுகிறது. பாகிஸ்தான் இதை ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறோம். இதை எல்லாம் தடுக்கவே இன்டெர்நெட், மொபைல் சேவையை நிறுத்தியுள்ளோம். குப்வாரா மற்றும் ஹண்ட்வாரா மாவட்டங்களில் இன்டெர்நெட் சேவை மீண்டும் கொடுக்கப்படவுள்ளது. விரைவில் படிப்படியாக இந்த உத்தரவு தளர்த்தப்படும். சமீபத்தில் நிகழ்ந்த கலவரக்காரர்களுக்கு எதிராக பெல்லட் குண்டுகள் பயன்படுத்தபட்டன. குண்டுகளை இடுப்பின் கீழ்தான் போலீஸ் சுட்டுள்ளனர். இதில் ஒருவருக்கு மட்டுமே கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமாக இருக்கிறார். ஒவ்வொரு காஷ்மீரி மக்களின் வாழ்க்கையும் எங்களுக்கு மதிப்புமிக்கது.

riots in kashmir
riots in kashmir

ஒரு உயிரைக்கூட இழக்க விரும்பவில்லை. எந்த நிலையிலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கலாசாரம், அடையாளம் பறிபோகாது. அதற்கு நான் உறுதியளிக்கிறேன். அடுத்த மூன்று மாதத்தில் காஷ்மீர் மக்கள் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. காஷ்மீர் இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. காஷ்மீரின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் மத்திய அரசு விரைவில் மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட உள்ளது" என்றவரிடம், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ``வீட்டுச் சிறையில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து வருத்தம் கொள்ள வேண்டாம். வீட்டுச் சிறையில் இருப்பது அவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு உதவும்'' எனக் கூறினார்.