Published:Updated:

``உதயநிதி எப்படிப் பொறுப்புக்கு வந்தார் என எல்லோருக்கும் தெரியும்!''-வறுத்தெடுக்கும் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

'' 'அடுத்த முப்பது ஆண்டுகள் எங்களுக்குத் தலைவர் பிரச்னை பற்றிய கவலையே இல்லை' என்று தி.மு.க-வின் மூத்த அமைச்சர் ஒருவரே வெளிப்படையாகச் சொல்கிறார். பா.ஜ.க-வில் இப்படியெல்லாம் நேரடியாகக் கட்சியின் இரண்டாம் இடத்துக்கு யாராவது வர முடியுமா?'' எனக் கேட்கிறார் வானதி சீனிவாசன்.

``உதயநிதி எப்படிப் பொறுப்புக்கு வந்தார் என எல்லோருக்கும் தெரியும்!''-வறுத்தெடுக்கும் வானதி சீனிவாசன்

'' 'அடுத்த முப்பது ஆண்டுகள் எங்களுக்குத் தலைவர் பிரச்னை பற்றிய கவலையே இல்லை' என்று தி.மு.க-வின் மூத்த அமைச்சர் ஒருவரே வெளிப்படையாகச் சொல்கிறார். பா.ஜ.க-வில் இப்படியெல்லாம் நேரடியாகக் கட்சியின் இரண்டாம் இடத்துக்கு யாராவது வர முடியுமா?'' எனக் கேட்கிறார் வானதி சீனிவாசன்.

Published:Updated:
வானதி சீனிவாசன்

`மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் மதமாற்றப் பின்னணி உள்ளது' என்று தமிழ்நாட்டில் தடதடத்துவரும் பா.ஜ.க., கர்நாடகாவில் அரங்கேறிவரும் 'ஹிஜாப்' எதிர்ப்பு போராட்டங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துவருகிறது.

பள்ளி மாணவிகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் இது போன்ற போராட்டங்கள், 'பெண் கல்வியை மறுபடியும் கற்காலத்தை நோக்கித் தள்ளிவிடும்' என எச்சரித்துவருகின்றனர் முற்போக்காளர்கள். இந்த நிலையில், பா.ஜ.க-வின் தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசனிடம் பேசினேன்...

``கர்நாடகாவில் நடைபெற்றுவரும் 'ஹிஜாப்' எதிர்ப்பு போராட்டங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''நாங்கள் எந்த உடை அணிய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் முடிவு செய்வீர்களா என்ற கேள்வியை அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத்தன்மையில் பா.ஜ.க-வும் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறது.

மாணவர்களின் காவித்துண்டு போராட்டம்
மாணவர்களின் காவித்துண்டு போராட்டம்

ஹிஜாப்பை இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் அணிவது இல்லை. 20 வருடங்களுக்கு முன்புகூட ஹிஜாப் அணியும் பழக்கம் பெரிய அளவில் இங்கு இல்லை. எனவே, இயல்பாக ஒரு பழக்கத்தை மக்கள் பின்பற்றினால் அதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

கர்நாடகா கல்விக்கூடங்களில், இதுநாள் வரையில் யாரும் ஹிஜாப் அணிந்து வரவில்லை. ஆனால், இப்போதுதான் ஒருசில அமைப்புகள் பின்னணியில் இருந்துகொண்டு 'ஹிஜாப் அணிந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்' என்பதுபோல் பிரச்னையைத் தூண்டிவிட்டுவருகின்றன. இதற்குப் பிறகுதான், மாணவர்கள் 'நாங்களும் காவித்துண்டு அணிந்துவருவோம்' என்று செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், விவகாரம் இப்போது நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டது. வழக்கின் தீர்ப்பு வெளியாகும்வரை, 'மாநில அரசின் உத்தரவுப்படி மாணவர்கள் சீருடை அணிந்து மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும்' என்று நீதிமன்றமும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துவிட்டது. பா.ஜ.க-வின் நிலைப்பாடும்கூட இதுதான்..!''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''பள்ளிக்கூடத்துக்கு உள்ளே 'ஹிஜாப் அணிந்து செல்லக் கூடாது' என்கிறார் குஷ்பு. அப்படியென்றால் நாமம், டர்பன், சிலுவை உள்ளிட்ட மத அடையாளங்களும் கூடாதுதானே?''

''மதச் சுதந்திரம் பற்றி தனிப்பட்ட ஒவ்வொரு தலைவருக்கும் பல்வேறு கருத்துகள் இருக்கும். ஹிஜாப் பற்றிக் கருத்து சொல்வதற்கு குஷ்புவுக்கு முழு உரிமை உள்ளது. இஸ்லாமியராகப் பிறந்து இப்போதும் 'நான் இஸ்லாமியர்தான்' என்று பெருமையாகச் சொல்லிவருபவர் அவர்.

பொதுவாக இந்த மத அடையாளப் பிரச்னைகள் இப்போதுதான் புதிதாக உருவாகின்றன. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளி நிர்வாகம்தான் இப்படியொரு கட்டுப்பாட்டை விதிக்கிறது. ஆனால், இதையொட்டி பிரச்னைகள் எழுந்தால், சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றவேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறது. எனவே, இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்துக்கும் சென்றுவிட்டது. ஆனால், இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகத் தொடர்ந்து பொய்ப் பிரசாரம் பரப்பப்பட்டுவருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.''

குஷ்பு
குஷ்பு

''இந்த விவகாரத்தில், மத சுதந்திரத்தை மறுக்கும் வகையில், கர்நாடக மாநில பா.ஜக அரசு உத்தரவிட்டதுதானே பிரச்னைக்கான மூல காரணம்?''

''இல்லையில்லை... அது தவறு. மாநில அரசின் உத்தரவு என்பது அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்குமானதுதான். ஆனால், குறிப்பிட்ட சில இடங்களில் மத அடிப்படைவாதிகள் அரசியல் பின்னணியோடு ஹிஜாப் பிரச்னையைப் பெரிதுபடுத்தியிருக்கின்றனர்.''

''கடந்த ஆண்டு, தேசியக்கொடிக் கம்பத்தில் மதக் கொடியை ஏற்றி அவமதித்துவிட்டதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், கர்நாடகத்தில் தேசியக்கொடிக் கம்பத்தில், காவிக்கொடி ஏற்றியவர்மீது எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன்?''

''இது தொடர்பாக எங்கள் கட்சித் தலைவர்கள் ஏற்கெனவே அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அதாவது, தேசியக்கொடி அந்தக் கம்பத்திலேயே இல்லை. காலியாக உள்ள ஒரு கம்பத்தில், ஒரு சிறுவன் காவிக்கொடியை ஏற்றிவிட்டு வருகிறான்.

ஆனால், டெல்லி செங்கோட்டையில் ஏற்கெனவே ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடியை இறக்கிவிட்டு, மதக்கொடியை ஏற்றினார்கள். எனவே இந்தச் சம்பவத்தோடு டெல்லி செங்கோட்டைச் சம்பவத்தை ஒப்பிடாதீர்கள்.

மாநில அரசும்கூட, 'பொய்ச் செய்தியைப் பரப்பாதீர்கள்' எனக் கூறி உடனடியாக ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறது. மேலும் இந்தச்சம்பவத்தில் என்ன விதிமீறல் நடந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.''

தேசியக் கொடிக்கம்பத்தில் காவிக்கொடி
தேசியக் கொடிக்கம்பத்தில் காவிக்கொடி

''வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது என்கிறார் பிரதமர் மோடி. ஆனால், பா.ஜ.க-விலேயே வாரிசுத் தலைவர்கள் இருக்கிறார்களே?''

''மாநில அளவிலான அரசியல் கட்சிகளில் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் தலைவர்களின் வாரிசுகள் இருந்துவருகிறார்கள். ஆனால், பா.ஜ.க தலைவர்கள் சிலரது வாரிசுகள் கடின அரசியல் பணி காரணமாகப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்... அவ்வளவுதான். அரசியலில் முடிவெடுக்கக்கூடிய முக்கிய இடத்தில் இவர்கள் இல்லை.

தேர்தலுக்காக பா.ஜ.க வேட்பாளர்களைத் தேர்வு செய்யக்கூடிய உயர் மட்டக் குழுவில் நானும் ஓர் உறுப்பினராக இருந்துவருகிறேன். எங்கள் கட்சியில் வாரிசு அடிப்படையில் யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை. கட்சிக்கு அவர்கள் ஆற்றியிருக்கும் பணிதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆனால், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களையே எடுத்துக்கொள்ளுங்கள்.... இங்கேயெல்லாம் நேரடியாக குடும்ப வாரிசுகளின் ஆட்சிதானே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் குடும்ப உறுப்பினர்களே தொடர்ந்து வரும்போது, அவர்கள் ஊழலற்ற - நேர்மையான ஆட்சியை எப்படிக் கொடுப்பார்கள் என்ற சந்தேகம் வருகிறதுதானே?

தமிழ்நாட்டில், உதயநிதி ஸ்டாலின் எந்த அளவு உழைத்து இந்தப் பொறுப்புக்கு வந்தார் என்பது எல்லோருக்குமே தெரியும். 'இன்னும் அடுத்த முப்பது ஆண்டுகள் எங்களுக்குத் தலைவர் பிரச்னை பற்றிய கவலையே இல்லை' என்று தி.மு.க-வின் மூத்த அமைச்சர் ஒருவரே வெளிப்படையாகச் சொல்கிறார். பா.ஜ.க-வில் இப்படியெல்லாம் நேரடியாகக் கட்சியின் இரண்டாம் இடத்துக்கு யாராவது வர முடியுமா?''

''பெகாசஸ் பிரச்னைக்கே இன்னமும் பா.ஜ.க பதில் சொல்லாத நிலையில், 'என் போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது' என தமிழக பா.ஜ.க தலைவர் சொல்கிறாரே?''

''பெகாசஸ் விவகாரத்தில், யார் ஒட்டுக்கேட்டார்கள் என்று யாராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆக, பொதுவான மிரட்டலாக பெகாசஸ் இருக்கிறது என்று சொன்னால், அதற்கான பதிலை மத்திய பா.ஜ.க அரசு நீதிமன்றத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறது. இது விஷயமாக மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம் என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவித்துவருகிறது.

இதற்கிடையே, 'பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் பா.ஜ.க அமைச்சர்களது போனும் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கிறது' என்று சொல்கிறார்கள். பின் எப்படி மத்திய பா.ஜ.க அரசு மீதே ஒட்டுக்கேட்டதாகக் குற்றம் சுமத்துகிறார்கள்? இந்த விவகாரத்தில் என்ன நடந்திருந்தாலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு தயாராகவே இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 'மாநில உளவுத்துறை என் போனை ஒட்டுக்கேட்கிறது' என்று தமிழக பா.ஜ.க தலைவர் மிகத் தெளிவாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஏனெனில், கூட்டணிக் கட்சி உள்ளிட்ட விஷயங்களில் எங்கள் மாநிலத் தலைவர் பேசிவருவது, உடனடியாக சோஷியல் மீடியாவில் செய்தியாக வெளிவந்துவிடுகிறது. இவையெல்லாம்தான் அவரது சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறது.''

அண்ணாமலை
அண்ணாமலை

''கடந்த கனமழை பாதிப்புக்கு தமிழகம் கேட்டது 6,230 கோடி ரூபாய். கிடைத்திருப்பது வெறும் 816 கோடி. பிரதமர் மோடி, தமிழ் மொழியைப் புகழ்ந்துபேசுவதற்கு பதிலாக உரிய நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக பா.ஜ.க வாக்குவங்கியை பலப்படுத்தலாமே?''

''தமிழர்களே இல்லாத இடத்திலும்கூட நமது பிரதமர் தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசிவருவதற்கு நாம் பெருமைப்பட வேண்டும். ஆனால், இங்கே சிலர் அச்சப்படுகிறார்கள்... ஏன்? 'எங்களுக்கு நிதி உதவிதான் வேண்டும்; தமிழைப் பற்றியெல்லாம் நீங்கள் பேச வேண்டாம்' எனப் பிரதமரிடம் நாம் சொல்ல முடியுமா?

தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதி உதவியை எந்தக் கட்டமைப்பின் கீழ் செய்துதர வேண்டுமோ அதை முறைப்படி செய்துவருகிறது மத்திய அரசு. பா.ஜ.க ஆட்சி செய்துவரக்கூடிய மாநிலங்களைவிடவும் அதிகமான அளவில் நிதி உதவியைப் பெற்றுவரும் மாநிலம் தமிழ்நாடு.

கனமழை - புயல் விவகாரத்தில், 'எந்த அளவு பாதிப்பு, ஆதாரம் என்ன...' என்பது போன்ற தரவுகளின் அடிப்படையிலேயே தேசியப் பேரிடர் ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. மரம், பாலம், சாலை என ஒவ்வொரு பாதிப்புக்கும் இவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. எல்லா மாநிலங்களுக்கும் இது பொருந்தும். எனவே இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்று சொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை.

தேசிய நெடுஞ்சாலைத்துறை, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் தமிழ்நாட்டுக்கான சாலைப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்தது. ஆனால், தமிழக அரசு உரிய ஒத்துழைப்பு கொடுக்காததால், இந்தத் திட்டங்களே இப்போது முடக்கத்தில் உள்ளன. இது விஷயமாக தமிழக அரசு ஏன் இதுவரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து மறுபரிசீலனை செய்யக் கோரி கேட்கவில்லை?

'தமிழக ஆட்சியாளர்கள் கேட்கிற கமிஷன் தொகையை எங்களால் கொடுக்க முடியவில்லை' என்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறை கான்ட்ராக்டர்கள். தமிழக அரசுக்கு எதிரான நேரடிக் குற்றச்சாட்டாகவே நான் இதை முன்வைக்கிறேன்.''

''தெற்கு ரயில்வேயின் புதிய வழித் திட்டங்களுக்கு 308 கோடி ரூபாய் ஒதுக்கீடு. அதுவே வடக்கு ரயில்வேக்கு 31 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவது ஏன் என சு.வெங்கடேசன் எம்.பி கேட்டுள்ளாரே?''

''ஒரு நாடு என்பது நமது உடல் மாதிரிதான். உடலின் எல்லா பாகங்களுமே ஆரோக்கியமான வகையில் வளர்ச்சி காண வேண்டும். தெற்கு ரயில்வேயில் பாரம்பர்யமாகவே நிறைய வழித்தடங்கள் உள்ளன. ஆனால், வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில் இதுவரை ரயில்வே வழித்தடங்களே கிடையாது. உதாரணமாக மணிப்பூருக்கு ரயிலே கிடையாது என்றால் நம்ப முடிகிறதா?

ஆக, நாடு முழுக்க எல்லா மாநிலங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கில், இது போன்ற முயற்சிகள் எடுக்கப்படுவதால், அதிக நிதி ஒதுக்கீடு செய்து, உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்படுகின்றன. இந்த வளர்ச்சித் திட்டங்களெல்லாம் இதுவரை வடகிழக்கு மாநிலங்களில் இல்லாததால்தான், அங்கே தீவிரவாதம் வளர்ச்சியடைந்து நாட்டின் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இப்போது நாட்டின் வளர்ச்சியில் அவர்களும் பங்கெடுத்துக்கொள்ளும் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது.''

மோடி
மோடி

''இந்திய எல்லையை ஆக்கிரமித்து சீனா, பாலம் கட்டி வருகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை இப்போது மத்திய பா.ஜ.க அரசே ஒப்புக்கொண்டுவிட்டதே?''

''கடந்த 60 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், இந்திய எல்லைப் பகுதிகளில் உரிய சாலை வசதிகளே செய்துதரப்படவில்லை. ஆனால், இப்போது அதற்கான திட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு செய்துவருகிறது. நான் நேரடியாக லடாக் பகுதிக்குச் சென்றபோது இந்தப் பணிகளையெல்லாம் பார்க்கவும் செய்தேன்.

இந்திய - சீன எல்லைப் பகுதிகள் பனி படர்ந்த பகுதி. இந்தச் சூழலில், நம் நாட்டின் எல்லைப் பகுதிகளிலுள்ள கிராம மக்கள், வசதி வாய்ப்புகளைத் தேடி நாட்டின் உட்புறப் பகுதிகளை நோக்கிக் குடியேறிவருகிறார்கள். ஆனால், சீன எல்லைப் பகுதிகளில் இது போன்ற குடியேற்றங்களை அனுமதிக்காமல் சர்வாதிகாரத்தன்மையோடு மக்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். ஜனநாயக நாடான இந்தியாவில், இது போன்ற செயல்பாடுகள் சாத்தியம் அல்ல. இந்த நடைமுறைச் சிக்கல்களையெல்லாம் தாண்டி, எந்த இடத்தில் நாம் பதிலடி கொடுக்க முடியுமோ அந்த இடத்தில் பதிலடி கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இன்றைய சூழலில், சீனாவுக்கு உலக நாடுகள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு இல்லை. இந்த நிலையில், அத்துமீறி பாலம் கட்டிவருகிற விவகாரத்திலும் நமது பிரதமர் மோடி, மிகச்சரியாகக் கையாண்டு வெற்றி காண்பார்.''