Published:Updated:

``பாஜக-வின் அட்டூழியங்கள்; தமிழ்நாடு காவல்துறைமீது சந்தேகம்...” - ஈ.வி.கே.எஸ் எக்ஸ்க்ளூசிவ்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதில்

``இளைஞர்கள் காங்கிரஸில் இல்லை அல்லது காங்கிரஸ் இளைஞர்களுக்கு வழிவிடுவதில்லை என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.” - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

``பாஜக-வின் அட்டூழியங்கள்; தமிழ்நாடு காவல்துறைமீது சந்தேகம்...” - ஈ.வி.கே.எஸ் எக்ஸ்க்ளூசிவ்

``இளைஞர்கள் காங்கிரஸில் இல்லை அல்லது காங்கிரஸ் இளைஞர்களுக்கு வழிவிடுவதில்லை என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.” - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Published:Updated:
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதில்

“ரொம்ப நாள் ஆச்சுங்க... பேட்டியெல்லாம் கொடுத்து. வயசு காரணமா கொஞ்ச ஓய்வெடுக்கவேண்டியதா இருக்கு. நாட்டுல பா.ஜ.க அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகுது... அதை ஒழிக்க நானும் ஏதாவது செய்யணும்கிற வேகத்துலதான் மறுபடியும் தீவிரமா இறங்கியிருக்கிறேன்” என்று நம்மை வரவேற்றபடியே பேசத் தொடங்கினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். சென்னையில் அவரின் வீட்டில் நடந்த சந்திப்பின்போது நாம் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்...

``’பாஜக-வின் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகுது’ என்று சொல்கிறீர்கள். அதை எப்படி முறியடிக்கப்போகிறீர்கள்?”

``மதச்சார்பின்மையைப் போற்றக்கூடிய கட்சிகள் ஏதோ ஓரளவுக்கு தமிழ்நாட்டில் ஒன்றாக இருக்கின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற சக்திகள் சிதறிக் கிடக்கின்றன. இது கடந்த எட்டு வருடங்களாக பா.ஜ.க-வுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. வரவிருக்கிற 2024 தேர்தலில் நிச்சயமாக பா.ஜ.க முறியடிக்கப்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், மதச்சார்பற்ற கட்சிகளெல்லாம் ஒன்று சேரும் என மனதார நம்புகிறேன். அது சேர வேண்டுமென்றும் விரும்புகிறேன்.”

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

``காங்கிரஸ் அதற்கான முன்னெடுப்பை எடுக்குமா... ஏனென்றால், குடியரசுத் தலைவர் தேர்தலில் பல குழப்பங்கள் உண்டானதே?”

``நாடு முழுவதும் இருக்கக்கூடிய கட்சியாக காங்கிரஸ் இருப்பதால், காங்கிரஸ் தலைமை அதை முன்னெடுக்கும். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சில கஷ்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மம்தா போன்றோரைச் சரிசெய்வது கொஞ்சம் கஷ்டமான காரியம். நாட்டு நலனுக்காக அதைச் செய்தாகவேண்டிய நிலையில் காங்கிரஸ் இருக்கிறது.”

``மாநிலக் கட்சிகள் மறைமுகமாக பாஜக-வுக்கு ஆதரவளிக்கின்றன என்று சொல்லப்படுகிறதே?”

``பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால், இவர்களால் மதச்சார்பற்ற கூட்டணியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை. காரணம், அவர்களை மிகப்பெரியவர்களாக நினைத்துக்கொண்டிருப்பதால் இது தடைப்படுகிறது. இருந்தாலும் ஒட்டுமொத்த நாட்டின் நலனைக் கருதி, வரவிருக்கிற 2024 பாராளுமன்றத் தேர்தலில்  இந்தச் சக்திகள் ஒன்று சேரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.”

ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்
ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்

``தமிழ்நாட்டில் பாஜக-வின் வளர்ச்சிக்கு எது காரணம்... அதிமுக-வின் பலவீனம், திமுக-வின் பலவீனம், காங்கிரஸின் பலவீனம் இவற்ரில் எது முதன்மையானது?”

``தி.மு.க-வின் பலவீனமோ அல்லது மற்ற கட்சிகளின் பலவீனமோ பா.ஜ.க-வின் வளர்ச்சிக்குக் காரணம் கிடையாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்வதைப்போல் ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்காகப் பணத்தை ஆறாகக் கொட்டுகிறார்கள். பொதுநல விரோதிகள், குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ரெளடிகளை ‘எந்தவிதமான வழக்கும் வராமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று கட்சியில் சேர்க்கிறார்கள். அப்படிச் சேர்ந்தவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று துணிகிறார்கள். அவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், டெல்லியில் அமைச்சர் முருகன் அலுவலகத்திலிருந்து ‘பி.ஏ’ போன் செய்து அந்த ரெளடிகளை தப்பிக்க வைக்கிறார்கள். அகில இந்தியக் கட்சியாக இருக்கக்கூடிய பா.ஜ.க., தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட மாவட்டக் கட்சியாகச் சுருங்கியிருப்பதுதான் உண்மை.”

``முதல்வர் துறையாக இருக்கும் காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அந்தத் துறை பலவீனமாக இருக்கிறதா?”

``காவல்துறை சரியில்லை என்பதைத்தான் சொல்லவருகிறேன். ஏனென்றால், முதல்வர் எவ்வளவு பாடுபட்டு நல்ல காரியங்கள் நடைபெற வேண்டும் என்று முயற்சி எடுத்தாலும்கூட, அவருக்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு தருகின்றனரா அல்லது பா.ஜ.க பக்கம் சாய்ந்து நிற்கிறார்களா என்கிற சந்தேகம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.”

மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்

``தி.மு.க., பா.ஜ.க-வோடு சில சமரசங்கள் செய்கிறது’ என்கிற பேச்சுகள் அடிபடுகின்றன. அப்படியிருக்க வரும் 2024 தேர்தலில் உங்கள் கூட்டணி தொடருமா?”

“கொள்கையில் சமரசம் செய்கிறார்கள் என்று நம்பவில்லை. முதலமைச்சர் என்கிற முறையில் ஒரு பிரதமர் வரும்போது அவருக்கு மரியாதை செய்வது தவறு கிடையாது. ஜனநாயக நாட்டில் அதுதான் சரியான வழி. அதேநேரத்தில், தன்னுடைய உறுதியான கொள்கையிலிருந்து ஸ்டாலின் சிறிதுகூட நழுவுவது கிடையாது. தமிழ்நாட்டில் சாதியால், மதத்தால் வேறுபாடு வந்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அப்படித்தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க., ம.தி.மு.க என கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. எனவே, கூட்டணியில் எந்தவொரு பிளவும் வராமல் நிச்சயம் 2024 தேர்தலிலும் தொடரும்.”

``ஒருவேளை தி.மு.க., பா.ஜக-வோடு சமரசம் செய்தால் அ.தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா?”

``அ.தி.மு.க என்பது விபத்தில் பிறந்த கட்சி. எம்.ஜி.ஆர் இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில் இருக்கிற முக்கியமான மந்திரிகள், தலைவர்களிடம் ‘ஜெயலலிதாவோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. அவரை கட்சியிலிருந்து நீக்கப்போகிறேன்’ என்று தொலைபேசியில் சொன்னவர். அ.தி.மு.க-வில் இருந்த பழைய தலைவர்களிடம் கேட்டால் உண்மை தெரியும். அதேநேரத்தில் அ.தி.மு.க-வை திராவிட இயக்கங்களில் ஒன்றாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை பெரியார் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள். இப்படி இருக்கும்போது எப்படி அவர்களோடு மதச்சார்பற்ற கூட்டணி அமைக்க முடியும்?”

``50 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அனைவரின் இல்லங்களிலும் தேசியக்கொடி கொண்டு செல்லாத நிலையில், பாஜக இன்று அதைச் சாத்தியப்படுத்தியிருப்பதாகச் சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தேசியக்கொடியை வீட்டில் ஏற்ற வேண்டும் என்று சொல்வதை நான் வரவேற்கிறேன். ஆனால், தேசத்துக்கு துரோகம் செய்தவர்கள், இந்த மூவர்ணக்கொடியை கீழ்த்தரமாகப் பேசியவர்களெல்லாம் சொல்வதை ஏற்க முடியாது. ஏனென்றால், இன்று மூவர்ணக்கொடி செங்கோட்டையில் உயரப் பரக்கிறது என்று சொன்னால் அதற்கு காங்கிரஸ் மட்டும்தான் காரணம். பா.ஜ.க-வைச் சேர்ந்த யாரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாக வரலாறு கிடையாது.”

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

“ஆளுநர் தேனீர் விருந்தில் உங்கள் கூட்டணிக் கட்சியான தி.மு.க., வி.சி.க கலந்துகொண்டபோது, காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டும் கலந்துகொள்ளாதது ஏன்?”

“அவர்கள் ஒரு மரியாதை நிமித்தமாகச் சென்றிருக்கலாம். ஆளுநர், பொன்முடியை மதிக்காமல் பேசினார். அதை எதிர்த்து அறிக்கைவிட்ட பொன்முடிகூட அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனால் எப்போது எதிர்க்க வேண்டுமோ, எப்போது கொஞ்சம் உறவோடு இருக்க வேண்டுமோ அதைப் பின்பற்றுகிறார்கள். மனிதநேயத்தைப் பொறுத்தவரையில் அதில் ஒன்றும் தவறு இல்லை. பழனிசாமி ஏன் வரவில்லை என்பதுதான் கேள்வி. பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் பார்ப்பதற்காக நேரம் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் பழனிசாமி இருக்கிறாரா என்று தெரியவில்லை. பன்னீர்செல்வத்திடம் ‘முடிந்தால் வாங்க’ என்று சொன்னால்கூட உடனே வரக்கூடிய ஆள். எது எப்படியோ, இவர்கள் இரண்டு பேரில், இரட்டை இலைக்கு ஓட்டுப்போடும் மக்களை யார் கையில் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.”

`` `துடிப்போடு வேலை செய்ய வரும் இளைஞர்களுக்கு காங்கிரஸில் இருக்கும் மூத்த தலைவர்கள் கோஷ்டி அமைத்துக்கொண்டு வளர்ச்சிக்கு உதவ மறுக்கிறார்கள்’ என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?”

“கோஷ்டிப்பூசல் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. இளைஞர்கள் காங்கிரஸில் இல்லை அல்லது காங்கிரஸ் இளைஞர்களுக்கு வழிவிடுவதில்லை என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள்தான்.”

காங்கிரஸ் எம்.பி-க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன்
காங்கிரஸ் எம்.பி-க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன்

“பாரம்பர்ய அரசியல் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் திருமகன் ஈ.வே.ரா-வின் செயல்பாடுகள் இன்னும் வெளியே தெரியவில்லையே?”

“அவரிடம் எப்போது எதிர்பார்க்கலாம் என்று ஜோசியம் சொல்ல முடியாது. அவருடைய நடவடிக்கைகள் மூலம் ஆக்கபூர்வமானவர் என்கிற பெயர் எடுப்பார். தன்னுடைய கடமையை முழுமையாகச் செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.”