Published:Updated:

``அம்மா இருந்திருந்தால் எனக்கு இவ்வளவு பிரச்னைகள் இருந்திருக்காது!” - கலங்கும் எஸ்.பி.வேலுமணி

வேலுமணி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஜெயலலிதா நினைவுநாளில் சந்தித்து, அவருடனான நினைவு, ஊழல் புகார் உள்ளிட்டவை குறித்து சில கேள்விகளை முன் முன்வைத்தோம்.

``அம்மா இருந்திருந்தால் எனக்கு இவ்வளவு பிரச்னைகள் இருந்திருக்காது!” - கலங்கும் எஸ்.பி.வேலுமணி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஜெயலலிதா நினைவுநாளில் சந்தித்து, அவருடனான நினைவு, ஊழல் புகார் உள்ளிட்டவை குறித்து சில கேள்விகளை முன் முன்வைத்தோம்.

Published:Updated:
வேலுமணி

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கான தேர்தல், உட்கட்சித் தேர்தல் என படு பிஸியாக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஜெயலலிதா நினைவுநாளில் சந்தித்து அவருடனான நினைவு, வேலுமணி மீதான ஊழல் புகார் உள்ளிட்டவை குறித்து சில கேள்விகளை முன் வைத்தேன்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்கள் மீது தொடர்ச்சியாகக் கடுமையான விமர்சனங்களை வைக்கிறாரே?

``5 முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அவர் இருக்கும்போது சட்டசபையில் நேரடியாக அவர்மீது கடுமையான விமர்சனங்கள் வைத்திருக்கிறேன். அப்போதெல்லாம் இப்படி எந்தப் பிரச்னையும் எங்களுக்கு வரவில்லை. இவர் ஒரு தலைவரின் மகன், நான் ஒரு சாதாரண விவசாயி. தற்போதைய அரசில் எனக்கும் சில அதிகாரிகள் இருக்கிறார்கள், தி.மு.க-விலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். `கோவையில் அவ்வளவு செய்திருக்கிறீர்கள். ஆனால், உங்களை முதல்வர் விமர்சிக்கிறார். எப்படியாவது கைது செய்ய வேண்டும் என நினைக்கிறார்' எனச் சொல்லி ஆதங்கப்பட்டார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடியை ஸ்டாலின் விமர்சித்த அளவு வேறு யாரும் விமர்சனம் செய்ததில்லை. ஆனால், பிரதமர் மோடி ஸ்டாலின் அளவுக்கு யாரையும் பழி வாங்கவில்லை. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இவருக்கு இல்லை. அதனால் என்னைத் தொடர்ந்து விமர்சிக்கிறார். அரசியலில் விமர்சனத்துக்கு எதிர் விமர்சனம் வைக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் அ.தி.மு.க. அப்படியான ஓர் அமைப்பில் இருந்துகொண்டு நான் விமர்சிக்காமல் இருக்க முடியுமா?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்
Jerome

சென்னை மழை வெள்ளத்துக்குக் காரணம் நீங்கள் முறைப்படி எந்தப் பணியையும் செய்யாததுதான் என முதல்வர் குற்றம்சாட்டியிருக்கிறாரே?

``சென்னையை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்திலேயே மழை நீர் வடிகால்களைத் தூர்வாரத் தொடங்கியிருப்போம். ஒவ்வொரு மண்டலத்துக்கும் 8 - 10 கோடி வரை நிதி ஒதுக்கு அந்தப் பணிகளை மேற்கொள்வோம். அந்த வேலை செய்யும் ஒப்பந்ததாரர்தான் முழுமையாகத் தூர்வாரி மழை வரும்போது அதைச் சரி செய்து கொடுப்பது வரை அனைத்துப் பணிகளையும் செய்வார். இந்த முறை தூர் சரியாக வாரவில்லை. சில இடங்களில் மேம்போக்காகத் தூர் வாரியிருக்கிறார்கள். எதற்கு இதைச் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். தி.நகர் பகுதியில் மாம்பலம் கால்வாய் இருக்கிறது. அதைத் தூர்வார நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆனால், அதை இவர்கள் ரத்து செய்திருக்கிறார்கள். மழை நீர் வடிகால்களில் நடக்கும் பணிகளை மழை காலத்தில் நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும். ஆனால், இவர்கள் தொடர்ந்து வேலை செய்ய அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் தி.நகரில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. இப்படிச் செய்ய வேண்டிய எதையும் முறையாகச் செய்யாமல் சென்னையை மழைக்குத் தாரை வார்த்து கொடுத்துவிட்டு என் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவைக்காக போடப்பட்ட சாலை ஒப்பந்தத்தில் நீங்கள் சொன்னது பொய் என்றும், உடனடியாக நிரூபிக்க வேண்டும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறாரே?

``கோவை மாநகராட்சியில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டது. உண்மைதான். ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் அவருக்குத் தவறான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களை அந்த விவரங்களை எல்லாம் அமைச்சரிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். அதைப் பார்த்துவிட்டு உண்மை என்ன என்பதைப் புரிந்து கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார் என எதிர்பார்க்கிறேன். எனக்கு விமர்சனம் செய்யும் நோக்கமெல்லாம் இல்லை. வேலை நடக்க வேண்டும். அவ்வளவுதான்.”

வேலுமணி - செந்தில் பாலாஜி
வேலுமணி - செந்தில் பாலாஜி

எடப்பாடி ஆட்சி சிறப்பாக நடந்ததற்கு நான் தான் காரணம் என நீங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பது ‘நான் தான் மையம். என்னால்தான் எல்லாம்’ என்பதாக இருக்கிறதே?

``இல்லை... இல்லை... நான் மட்டுமல்ல. என்னுடன் இன்னும் சிலர் உடனிருந்தார்கள். ஆனால், அம்மாவின் மறைக்குவுக்குப் பிறகு ஆட்சியும் கட்சியும் நிலைபெற என்னுடைய பங்கு அதில் கூடுதலாக இருந்தது என்கிறேன். இதை எடப்பாடி, ஓ.பி.எஸ் மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த தலைவர்களை கேட்டார்களே சொல்வார்கள்”

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி

நீங்களே கூட எடப்பாடி பக்கம் இருந்து ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்ததாகவும் அதனால்தான் கடந்த கூட்டத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்ததாகவும் சொல்லப்பட்டதே?

``நான் இருவர் பக்கமும்தான் இருக்கிறேன். சில பிரச்னைகளில் என்னுடைய கருத்தைத் தனிப்பட்ட முறையில் இருவரிடமும் சொல்லியிருக்கிறேன். கூட்டத்தில் எப்போதும் நான் பேசியதே இல்லை. அ.தி.மு.க-வில் அணியே இல்லை. அண்ணா தி.மு.க., அதன் தலைவராக எம்.ஜி.ஆர்., அவரைத் தொடர்ந்து அம்மா, இவர்கள் வழியில் இப்போது இரண்டு தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களை நான் இரட்டைச் சகோதரர்களாகத்தான் பார்க்கிறேன்.”

கட்சிக்காக இவ்வளவு பேசுகிறீர்கள். ஆனால், வருமான வரித்துறை சோதனையில் கட்சி அறிக்கை மட்டும் கொடுத்து விலகிக்கொண்டதாக மூத்த அமைச்சர்களே குற்றம்சாட்டினார்களே?

எடப்பாடி பழனிசாமி - வேலுமணி
எடப்பாடி பழனிசாமி - வேலுமணி

``அறிக்கை அளித்தது மட்டுமல்ல. ஒருவருக்குப் பிரச்னை என்றால் வழக்கறிஞரை அனுப்பி வேண்டிய உதவியையும் தலைவர்கள்தான் செய்தார்கள். என்னை முதலில் அழைத்தது எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் தான். 'அரசியல் உள்நோக்கத்தால் போடப்படும் இப்படியான வழக்குகள் அம்மா காலத்திலிருந்தே இருப்பதுதான். அதையெல்லாம் கடந்துதான் நாம் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது’ என ஆறுதலாகவும் பேசியிருக்கிறார்கள்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்போதும் உங்கள் சட்டைப் பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருக்கிறீர்கள். அவர்களுடனான ஒரு நல்ல நினைவை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

``புரட்சித் தலைவி அம்மா எனக்கு எப்போதும் தெய்வம்தான். இப்போது எனக்கு இருக்கும் அனைத்து கஷ்டங்களையும் அவர்களுக்காகத்தான் பொறுத்துக் கொண்டிருக்கிறேன். மாவட்டம் தொடங்கி, மாநிலத் தலைமை வரை எனக்கு பல்வேறு பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்தவர் அம்மா. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தி.மு.க-விலிருந்து விலகி வந்ததிலிருந்து அவருடன் என்னுடைய தந்தை இருந்திருக்கிறார். பல்வேறு பொறுப்புகளிலிருந்தாலும் அவரைப் பற்றி அம்மாவுக்குத் தெரியாது. நான் கல்லூரி படிக்கும் காலகட்டத்திலிருந்தே வேகமாக இருப்பேன். அப்போதே மாணவர் அணி, இளைஞர் அணி எனப் பல்வேறு பொறுப்புகளை எனக்குக் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு ஒன்றியச் செயலாளராகவும் 2001-ம் ஆண்டில் சேர்மனாகவும் ஆக்கினார்கள். 2006-ல் என்னை அழைத்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்கினார்கள். எனக்கு வேண்டாம். நீங்கள் யாரை நிறுத்தினாலும் நான் வெற்றி பெறச் செய்கிறேன் என்றேன். இல்லை இல்லை நீங்கள்தான் நிற்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி என்னை எம்.எல்.ஏ-வாகப் போட்டியிடச் செய்தார். 2006-ல் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனேன். கோவையில் செம்மொழி மாநாடு நடத்தத் திட்டமிட்டபோது கோவையில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி வேண்டும். யாராவது ஒரு தலைவரை அனுப்புங்கள் எனக் கேட்டிருந்தேன். ஆனால், அம்மா நானே வருகிறேன் எனச் சொல்லி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் அது. அதுவரை தி.மு.க-தான் ஆட்சி அமைக்கும் என்றிருந்த நிலைமை மாறி அதன் பின் அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய அந்த ஆர்ப்பாட்டம் ஒரு காரணமாக இருந்தது. அப்போது என்னை அழைத்துப் பாராட்டினார்கள். 2011-ல் வெற்றி பெற்றபின் அமைச்சராக்கினார், அதன்பின் 2014-ல் உள்ளாட்சி உள்ளிட்ட சில துறைகளுக்கு அமைச்சராக்கினார். கேரளாவின் பொறுப்பாளராக நியமித்தார்கள். அங்கே 8 கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற வைத்தேன். என் பெயரைச் சுட்டி அறிக்கை வெளியிட்டார். சாதாரணமான என்னை இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இன்று முதல்வர் என்னை விமர்சிக்கிறார் என்றால் அந்த இடத்துக்கு என்னை அழைத்து வந்தவர் அம்மா தான். இப்போதில்லை எப்போதும் தி.மு.க எதிர்ப்பில் மிகத் தீவிரமாக இருப்பேன்.”

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஜெயலலிதா இல்லாதது உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்த வகையில் இழப்பு?

``அம்மா இல்லாதது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பு. தனிமையில் இருக்கும் போதெல்லாம் அவருடனான என்னுடைய நாள்களை நான் நினைத்துக்கொள்வேன். அவர் இருந்திருந்தால் எனக்கு இந்த துன்பங்கள் எதுவுமே இருந்திருக்காது. எனக்கு வரும் எல்லாப் பிரச்னைகளையும் அவரே பார்த்து கொள்வார். அம்மா இல்லாத இந்தச் சூழலில் கட்சியைக் காக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன். அதற்காகச் செயலாற்றி வருகிறேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism