மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது குறித்து விசாரிக்க கடந்த ஆட்சிக்காலத்தில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 26-ம் தேதி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. அதன் பின்னர் தற்போது மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் விசாரணையைத் தொடங்கியது.

அதில் முதற்கட்டமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்துவந்த அப்போலோ மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதையடுத்து ஓ.பி.எஸ்., சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் அடுத்த விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்போலோவில் அனுமதித்திருந்தபோது, 75 நாள்களும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றுவந்த சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி, ``அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது ஓரிரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்திருக்கிறேன்" என ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் இன்று வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வாக்குமூலத்தில், ``சசிகலா மூலமாக கடந்த 1992-ம் ஆண்டு முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தங்கியிருந்தாலும், என்னிடம் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் பகிர்ந்தது இல்லை. ஆனால் வீடு, குடும்பம் தொடர்பாக மட்டும் பேசுவார். கடந்த 2014-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சிறைக்குச் சென்றேன். அப்போது அவர் உடல்நலக் குறைவாகவும், மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார். 2016 தேர்தலின்போதும் உடல் நலக்குறைவாக இருந்தார்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துக்கொண்டார். நான் தினமும் சென்று பார்த்து வருவேன். 75 நாளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவைப் பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாகத்தான் பார்த்திருக்கிறேன்" என சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி கூறியுள்ளார்.