Published:Updated:

``அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்!'' - அதிமுக ஜெயக்குமார் சூசகம்

ஜெயக்குமார்
News
ஜெயக்குமார்

``ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் மட்டுமே சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஓர் இந்தியக் குடிமகனாக, சட்டம் தனக்கு அளித்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றுவருகிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.''

தமிழக அரசியலில், ஆஃப் மோடில் இருந்துவந்த அ.தி.மு.க., அண்மைக்காலமாக 'உட்கட்சித் தேர்தல், கண்டன ஆர்ப்பாட்டம், கவர்னர் சந்திப்பு' என சுறுசுறுப்பு காட்டிவருகிறது.

இதற்கிடையே, நகைக்கடன் தள்ளுபடி, ராஜேந்திர பாலாஜி சேஸிங், சசிகலா விவகாரம் என தொட்டுத்தொடரும் அரசியல் கேள்விகளோடு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்தேன்...

``தன்மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக சட்டப் போராட்டத்தைத் தொடங்காமல், ஓடி ஒளிந்துவரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமீது அ.தி.மு.க-வும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையே?''

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``ராஜேந்திர பாலாஜிமீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது... அவ்வளவுதான். அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையானதா, அவர் குற்றவாளியா என்பதையெல்லாம் நீதிமன்றம்தான் விசாரணை செய்து ஊர்ஜிதப்படுத்த வேண்டும். அப்படி ஊர்ஜிதப்படுத்தப்பட்டால்தான் கட்சி அவர்மீது நடவடிக்கை எடுக்கும்.

இன்றைய சூழலில், அவர்மீது குற்றம் மட்டுமே சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஓர் இந்தியக் குடிமகனாகச் சட்டம் தனக்கு அளித்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முயன்றுவருகிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.''

``அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், ஸ்காட்லாந்து போலீஸுக்கு நிகராக தமிழக காவல்துறை இருந்தது என்கிறீர்களே... ஆனால், அப்போதும்கூட நடிகர் எஸ்.வி.சேகரை தமிழக காவல்துறையால் பிடிக்க முடியவில்லைதானே?''

``அப்படியெல்லாம் கிடையாது... அவரைப் பிடிப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எங்கள் அரசு எடுத்தது. ஆனால், எஸ்.வி.சேகர் நீதிமன்றத்திலேயே ஆஜராகி மன்னிப்புக் கேட்டுவிட்டதால், அந்தப் பிரச்னை அத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது.

இன்றைய தி.மு.க அரசு, தீவிரவாதிகள், வன்முறையாளர்களிடம் மென்மையான போக்கு காட்டிவருகிறது. அதேசமயம் அரசியல்வாதிகளிடமோ கடுமை காட்டிவருகிறது. இதைத்தான் நான் விமர்சித்தேன்.''

அண்ணாமலை
அண்ணாமலை

`` 'முடிந்தால், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை தி.மு.க அரசு கைதுசெய்யட்டும் பார்க்கலாம்' என்று சி.வி.சண்முகம், தி.மு.க அரசைச் சீண்டுகிறாரே?''

``அ.தி.மு.க என்பது வலிமையான பேரியக்கம். ஆரம்ப காலந்தொட்டு, எத்தனையோ வழக்குகளுக்கு எதிராகப் போராடி வெற்றி கண்டுள்ளது. ஆனால், தி.மு.க-வைப்போல், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலை, ஆளுங்கட்சியாக வந்த பிறகு வேறு நிலை என்று இருந்ததில்லை.

அண்மையில்கூட, மாநிலங்களவையில் 'தேர்தல் சீர்திருத்த மசோதா' கொண்டுவரப்பட்டபோது, உள்ளிருந்து எதிர்ப்பு தெரிவிக்காமல், வெளிநடப்பு செய்திருக்கிறது தி.மு.க. இதேபோல், தமிழக நிதியமைச்சர் சொல்லியிருக்கும் கருத்தை, 'அவரது தனிப்பட்ட கருத்து' என்று தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கருத்து சொல்கிறார். ஆக, இன்றைய தி.மு.க அரசு, கொத்தடிமை அரசாகத்தான் இருந்துவருகிறது. இதைத்தான் சி.வி.சண்முகமும் வெளிப்படுத்துகிறார்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவை வைத்துத்தான் அ.தி.மு.க-வின் அனைத்துவிதமான செயல்பாடுகளும் நடந்தன. ஆனால், தற்போது சசிகலாவை யார் என்று அக்கட்சியினரே கேட்பது கேலிக்கூத்தானது என்கிறாரே பழ.கருப்பையா?''

``பரமசிவன் கழுத்தில் பாம்பு இருந்ததுதான். நாம் பரமசிவனைத்தான் கும்பிட்டோம்... பாம்பைக் கும்பிடவில்லை. 'நமக்குத்தான் வணக்கம் வைக்கிறார்கள்' என்று பாம்பு வேண்டுமானால் நினைத்திருக்கலாம். இந்த உண்மை பழ.கருப்பையாவுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.''

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

`` 'ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து சசிகலாவுக்குப் பொருந்தாது' என்றெல்லாம் எதிர்க்கருத்து சொல்கிறீர்களே... அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளரைவிடவும் வலிமையானவரா ஜெயக்குமார்?''

''அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி ஒன்றின்போது, பத்திரிகையில் வெளிவந்த ஒரு கதையைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார் ஒருங்கிணைப்பாளர். அதாவது, 'மன்னிக்கிற மனப்பான்மை எல்லோருக்கும் வர வேண்டும்' என்று அவர் பேசியது பொதுமக்களுக்கானது. மற்றபடி இந்தக் கருத்துக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஆனால், செய்தியாளர்கள் இந்தக் கருத்தை சசிகலாவோடு இணைத்துக் கேள்வி கேட்டபோது, 'சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சிக்குள் வரக் கூடாது' என்று எங்கள் கட்சி ஏற்கெனவே எடுத்திருந்த நிலைப்பாட்டைத்தான் பதிலாகக் கூறினேன்.''

``அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆதரவு நிலையில் சூசகமாகப் பேசிவருவது இது முதன்முறை அல்லவே?''

``நீங்கள்தான் அப்படிப் புரிந்துகொள்கிறீர்கள். மற்ற கட்சிகளில் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் பார்க்காமல், அ.தி.மு.க விவகாரங்களை மட்டும் நீங்கள் உற்று கவனிப்பதே, நாங்கள் வலிமையான இயக்கமாக இருக்கிறோம் என்பதைத்தான் உணர்த்துகிறது. அந்தவகையில் எங்களுக்குப் பெருமைதான்.''

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``அ.தி.மு.க தலைமைகள் எதிரெதிர் கருத்துகளைக் கூறுவதும், இறுதியில் இணை ஒருங்கிணைப்பாளர் முடிவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதும் நாடகமாக இருக்கிறதே?''

``அப்படியெல்லாம் நாடகம் நடத்தவேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. உதாரணமாக, கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்காக ஒரு முடிவு எடுப்பதோ அல்லது கட்சியின் 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாட தீர்மானிப்பதோ கட்சி சார்ந்த விஷயங்கள். இதில், பொதுக்குழு அதிகாரப்படிதான் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியை ஒன்றாக வழி நடத்திவருகிறார்கள். எனவே, இந்தக் கேள்வியில் எள்ளளவும் உண்மை இல்லை.''

``கூட்டணிக் கட்சியினர் காலை வாரியதால்தான் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை என பா.ம.க தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டிவருகிறதே?''

``நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று அன்புமணி ராமதாஸே பேசியிருக்கிறார். எனவே, அவர்கள் அ.தி.மு.க-வைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மேலும், 'அ.தி.மு.க அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அதேபோல் நல்ல முறையில் செய்து கொடுத்தது' என்றும் பாராட்டிப் பேசியிருக்கிறார்.''

ராமதாஸ்
ராமதாஸ்

``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க சார்பில் மேயர்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்களே தமிழக பா.ஜ.க-வினர்?''

``அவர்களுடைய கட்சித் தொண்டர்களை குஷிப்படுத்தி, கட்சியை வளர்ப்பதற்காக இது போன்று பேசிவருகிறார்கள். இதில் நான் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.''

``அப்படியென்றால், வரவிருக்கிற உள்ளாட்சித் தேர்தலில், தமிழக பா.ஜ.க-வுக்கு மேயர் தொகுதிகள் ஒதுக்கப்படாது என்கிறீர்களா?''

``நீங்கள் ஏன் அப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? ஊரக உள்ளாட்சித் தேர்தலில், எங்கள் கூட்டணியில் எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் வரவிருக்கிற தேர்தலிலும் இருக்கும். ஒவ்வொரு கட்சிக்குமே அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்தான். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான், பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டு, பேசி, இறுதி முடிவெடுக்கப்படும். எனவே, இதுகுறித்தெல்லாம் இப்போதே நான் எப்படி கருத்து சொல்ல முடியும்?''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரே தேர்தல் வந்ததும் தி.மு.க ஆட்சி போய்விடும் என்று எடப்பாடி பழனிசாமி சந்தோஷப்படுகிறாரே... ஒரே தேர்தலை அ.தி.மு.க ஆதரிக்கிறதா?''

``அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே அவர் சொல்வதில் மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை.''

``அப்படியென்றால், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற பா.ஜ.க-வின் கொள்கையை அ.தி.மு.க-வும் ஆதரிக்கிறதா?''

``கொள்கை சார்ந்த முடிவு இது. எனவே, அரசியலில் இந்தக் கேள்வி ஏற்படுகிற சூழல் வரும்போதுதான் எங்கள் கட்சியின் கருத்தை நான் சொல்ல முடியும்.''