Published:Updated:

ராஜேந்திர பாலாஜி போலீஸுக்குப் போக்கு காட்டிவருவது எப்படி?! - விருதுநகர் மாவட்ட உள்ளடி அரசியல்

ராஜேந்திர பாலாஜி.
News
ராஜேந்திர பாலாஜி.

``முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உள்வட்டத்தில் இருப்பவர் யார் யார் என்று போலீஸுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், அவர்கள் பக்கமே போலீஸ் போகவில்லை. அதன் பின்னணிக் காரணம் தெரியவில்லை.''

மோசடி வழக்கில் தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த ஐந்து நாள்களாக தலைமறைவாக இருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் உட்பட சிலரிடம் ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி, 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துவிட்டதாக விருதுநகர் போலீஸில் புகார் பதிவானது. இது குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதுவரை 8-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர் போலீஸார். ஆனால், அவர் எங்கேயிருக்கிறார் என்று தெரியவில்லை. அடுத்தடுத்த சட்ட ஆலோசனைகளைத் தலைமறைவாக இருந்தபடி ராஜேந்திர பாலாஜி செய்துவருகிறார் என்ற தகவல்கள் மட்டும் வெளிவருகின்றன. எப்படிச் சிக்காமல் இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி? அதற்கு சில சம்பவங்களை அடுக்கிறார்கள் விருதுநகர் மாவட்ட உள் அரசியல் தெரிந்த சிலர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

சம்பவம் 1:

டிசம்பர் 17-ம் தேதியன்று விருதுநகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அதேநாளில், முன்ஜாமீன் மனுவும் விசாரிணைக்கு வந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில், நீதிமன்ற உத்தரவு எதுவாக இருந்தாலும் ராஜேந்திர பாலாஜியைக் காலை முதலே மாவட்ட உளவுத்துறை போலீஸார் பின்தொடர்ந்திருக்க வேண்டும். இது வழக்கமாக செய்யும் பணி. அதை ஏனோ செய்யத் தவறிவிட்டார்கள். காலை 11 மணிக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்கிற தகவல் தெரிந்ததும், அங்கிருந்து காரில் புறப்பட்டு, கார் மாறி மாறி பயணித்து தப்பிவிட்டார். அதன் பிறகு, மாலை 4 மணிக்குத்தான் ராஜேந்திர பாலாஜி எங்கேயிருக்கிறார் என்று போலீஸ் அதிகாரிகளிடம் சொல்லி, இருப்பிடத்தை விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி. இந்த இடைப்பட்ட நேரத்தில் வெவ்வேறு கார்களில் சிட்டாகப் பறந்துவிட்டாராம் ராஜேந்திர பாலாஜி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சம்பவம் 2:

விருதுநகரில் உள்ள தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது, ``இந்த மாவட்டத்தில் தி.மு.க வி.ஐ.பி-களில் சிலரும், அ.தி.மு.க வி.ஐ.பி-கள் சிலரும் நகமும் சதையுமாக இருக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜிக்கு மாவட்ட அளவில் தி.மு.க-வின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் நெருக்கமானவர்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, மாவட்ட தி.மு.க பிரப்முகர் ஒருவர் கைகாட்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருக்கு முக்கிய பதவியை வாங்கிக்கொடுத்தார் ராஜேந்திர பாலாஜி. அந்த விசுவாசத்தை இப்போது காட்டுகிறார். அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மாத மாமூலும் தவறாமல் எதிர்முகாமில் உள்ள சிலருக்குப் போனதாம். இப்போது அரசியல் காட்சிகள் மாறிவிட்டன. தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. எதிர்க்கட்சியானது அ.தி.மு.க. ஆனாலும், பழையபடி, நட்புகள் தொடர்கின்றன. அப்படிருக்கும்போது, எப்படி ராஜேந்திர பாலாஜியைப் பிடிப்பார்கள்?'' என்கிறார் அவர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

சம்பவம் 3:

``ராஜேந்திர பாலாஜி, அமைச்சராக இருந்தபோது ராஜபாளையம் அருகில் 30 கோடி ரூபாய் அளவுக்கு இடம் வாங்கியதாகப் புகார் எழுந்தது. இதை விசாரித்த மாவட்ட அளவில் முக்கியப் பதவியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக 'அது பொய்யான புகார்' என்று போலீஸ் மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பினாராம். அப்போது சென்னையிலிருந்து ஸ்பெஷலாக அதிகாரிகளை அனுப்பி விசாரித்தபோது, அந்த போலீஸ் அதிகாரி சொன்னது தவறு என்று தெரியவந்தது. அதையடுத்து, அந்த போலீஸ் அதிகாரியை எந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியிலும் உட்கார வைக்கக்கூடாது என்று சொன்னார்களாம். அந்த போலீஸ் அதிகாரி ராஜேந்திர பாலாஜிக்கு வேண்டப்பட்டவர்தான். அவர்தான், தற்போது ராஜேந்திர பாலாஜி மீது பதிவான மோசடிப் புகாரை விசாரிக்கும் அதிகாரிகளில் ஒருவராம். `இவர் எப்படி முக்கியப் பதவிக்கு வந்தார்?' என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த ரூட்டில்தான் போலீஸ் நடவடிக்கைகள் ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு உடனுக்குடன் போகிறது'' என்று சொல்கிறார் விருதுநகரில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

சம்பவம் 4:

``விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் எப்போதும் ஆகாது. ஆனால், திடீரென ஒரு கட்டத்தில் இருவரும் நட்பு பாராட்டினர். நட்பு பிரியக் கூடாது என்று பாலில் சத்தியம் வாங்கியதாகக் கட்சிக்காரர்கள் பேசிக்கொள்வார்கள்.

டிசம்பர் 17-ம் தேதியன்று ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நேரத்தில் அவர் உடன் இருந்திருக்கிறார். காரில் அவர் தப்பிச் சென்ற பிறகு, நிச்சயமாக அந்த நபரிடம் தொடர்பில் இருந்திருக்கலாம். இது போலீஸாருக்கும் தெரியும். ஆனால், அந்த நபரை சரிவர இன்னும் போலீஸ் விசாரிக்கவில்லை. தேவையில்லாமல், ராஜேந்திர பாலாஜியின் சகோதரியின் மகன்கள் இருவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ராஜேந்திர பாலாஜியின் உள்வட்டத்தில் இவர்கள் இல்லையாம். ராஜேந்திர பாலாஜியுடன் உள்வட்டத்தில் இருப்பவர் யார் யார் என்று போலீஸுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், அவர்கள் பக்கமே போலீஸ் போகவில்லை. அதன் பின்னணிக் காரணம் தெரியவில்லை?’’ என்று சந்தேகம் எழுப்புகிறார்கள் அ.ம.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள்.

இப்படிப் போகிறது ராஜேந்திர பாலாஜியைத் தேடும் காண்டம்! ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் எப்படியும் ராஜேந்திர பாலாஜியைப் பிடித்தே ஆக வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில இருந்தபடி உத்தரவு வந்த வண்ணம் இருக்கிறதாம். ஆனால் அதைச் செயல்படுத்தவேண்டிய விருதுநகர் அரசு இயந்திரம் சரியாக இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள்!