Published:Updated:

`காலி பண்ணுங்க, இல்லன்னா தண்ணீர், மின்சாரம் கட்!’ - முன்னாள் எம்.பிக்களுக்கு மத்திய அரசு வார்னிங்

சத்யா கோபாலன்

முன்னாள் எம்.பிக்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அரசு குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

parliament
parliament

இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. பா.ஜ.க வெற்றி பெற்ற பிறகு 16-வது மக்களவையைக் கடந்த ஜூன் 25-ம் தேதி கலைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

parliament
parliament

மக்களவை கலைக்கப்பட்ட தேதியிலிருந்து சரியாக ஒரு மாதத்துக்குள், முன்னாள் எம்.பிக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் புதிய எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில் முன்னாள் எம்.பிக்கள் 200 பேர் இன்னும் தங்கள் குடியிருப்பை காலி செய்யாமல் இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்.பிக்களுக்கு அரசு குடியிருப்பை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய எம்.பிக்கள் 250 பேர் டெல்லியின் வெஸ்டர்ன் கோர்ட் பகுதியில் உள்ள தற்காலிக தங்கும் விடுதிகளிலும், விருந்தினர் மாளிகைகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னாள் எம்.பிக்கள் அரசு குடியிருப்பை ஒரு வாரத்துக்குள் காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

New Mp bungalows
New Mp bungalows

இது தொடர்பாக மக்களவை வீட்டுவசதி கமிட்டியின் தலைவர் சி.ஆர் பாட்டில் கூறியுள்ளதாவது, “முன்னாள் எம்.பிக்கள் அனைவருக்கும் ஒரு வாரகாலம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் அரசு குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும். அந்தக் குடியிருப்புகளுக்குச் செல்லும் தண்ணீர் மற்றும் மின்சார வசதியை மூன்று நாள்களுக்குள் நிறுத்த அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Vikatan

இதற்கிடையில், டெல்லி நார்த் அவென்யூ பகுதியிலிருந்த எம்.பிக்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டு, அதே இடத்தில் மீண்டும் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம், 36 குடியிருப்புகள் உள்ளன. இவை அனைத்தும் குடியரசுத் தலைவர் மாளிகையைப் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தில் நான்கு படுக்கை அறைகள், மாடுலர் கிச்சன், சோலார் பேனல்கள், எல்.இ.டி விளக்குகள், அலுவலகப் பகுதி, அடித்தள கார் நிறுத்துமிடம் ஆகிய நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

modi
modi
Doordarshan

புதிய குடியிருப்புகளை நேற்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். இது பற்றிப் பேசிய அவர், “நாடாளுமன்ற புதிய அமர்வுகள் தொடங்கும்போது, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் தங்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் நிறைய சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். அவர்களின் சிக்கலைச் சமாளிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எம்.பியாக இருந்தால் தங்கள் தொகுதியில் உள்ளவர்களும் எம்.பியைப் பார்க்க வரலாம். அப்படி வருபவர்களுக்குத் தங்கும் இடம் தேவைப்படும். சில எம்.பி குடியிருப்புகளில் சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது வரவேற்கக் கூடிய விஷயம்.

Modi
Modi
Doordarshan

புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் தீர்மானிக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்கப்பட்டுள்ளது. அதன் தரமும் நன்றாக உள்ளது. குடியிருப்புகளை உருவாக்கிய அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.