Published:Updated:

`ரேஷன்கடை சேல்ஸ்மேன்களை தவிர யாரும் டோக்கன் வழங்கக்கூடாது!’ - அமைச்சர் சக்கரபாணி கண்டிப்பு

Ration Card
Ration Card

``எங்கள் ஏரியாவை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, ' நிவாரண டோக்கன்களை நாங்கள் மக்களிடம் கொடுக்க இருக்கிறோம். நீங்கள் ஒரு ஏரியாவுக்கு கொடுங்கள். நாங்கள் இன்னொரு ஏரியாவில் கொடுக்கிறோம் என்று கேட்டார்கள்”

`நல்ல ஆட்சி நடத்த வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், தி.மு.கழகத்தின் கீழ்மட்ட கட்சி நிர்வாகிகளில் ஒருசிலரின் நடவடிக்கைகள் வேறு விதமாக இருக்கிறது. அம்மா உணவகங்களை தாக்கிய கட்சி பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின். அதேபோல், அரசு அமல்படுத்தும் முக்கிய திட்டங்களில் கட்சி நிர்வாகிகளின் தலையீடு லேசாக தலைதூக்குவதாக குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. ஆரம்பத்திலேயே, இவர்களை கண்டித்து வைக்கவேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.

உதாரணத்துக்கு, கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ. 2,000 பெறும் வகையில் இன்று (மே 10) முதல் வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ரேஷன்கடை பணியாளர்கள் அந்த பகுதியிலுள்ள வீடுகளுக்கு தினம் ஒன்றிற்கு 200 டோக்கன் கொடுக்க இருக்கிறார்கள். மே 15 முதல் இந்த டோக்கன்களில் உள்ள விவரங்கள் அடிப்படையில் ரேஷன்கடைகளுக்கு நேரில் போய் ரூ. 2,000 பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது.

 2000 ரூபாய் வழங்கும் திட்டம்
2000 ரூபாய் வழங்கும் திட்டம்
வி.ஸ்ரீனிவாசுலு

இந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 2.7 கோடி பேர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்போகிறார்கள். இதற்கு அரசு செலவு ரூ.4,153.39 கோடி ஆகிறது. தி.மு.கழக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த இந்த திட்டத்தை மே 7-ம் தேதியன்று முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு உத்தரவிட்டார். இந்த நிலையில், மே 9-ம் தேதியன்று மாலை, ரேஷன்கடை பணியாளர் சங்கத்தை சேர்ந்த ஒருசிலர் ஜூ.வி. அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பேசினார்கள்.

''சென்னை கீழ்பாக்கம் ஏரியாவில் ரேஷன் கடைகளில் பணிபுரிகிறோம். எங்கள் ஏரியாவை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, ' நிவாரண டோக்கன்களை நாங்கள் மக்களிடம் கொடுக்க இருக்கிறோம். நீங்கள் ஒரு ஏரியாவுக்கு கொடுங்கள். நாங்கள் இன்னொரு ஏரியாவில் கொடுக்கிறோம் என்று கேட்டார்கள். இது குழப்பத்தை உண்டு பண்ணிவிடும். நிர்வாகப் பிரச்னைகள் வரும் ' என்று எடுத்துச் சொன்னோம். அவர்கள் கேட்பதாக இல்லை. அதுமட்டுமல்ல.. ரேஷன்கடைகளுக்கு வரும் கரைவேஷ்டிக்காரர்கள், அண்ணன் சொன்னார்.. தலைவர் சொன்னார் என்று சொல்லி, ரேஷன் பொருட்களை இலவசமாக கேட்டு நச்சரிக்கிறார்கள். ஒருவர் பின் ஒருவராக பலரும் இப்படி ரேஷன்கடைகளை முற்றுகையிடுகிறார்கள். இவர்கள் நிஜமாகவே ஆளுங்கட்சிக்காரர்களா? அல்லது, ஆளுங்கட்சியின் பெயரை சொல்லிக்கொண்டு சமூக விரோதிகள் யாரவது இப்படி செய்கிறார்களா? என்று தெரியவில்லை '' என்றார்கள்.

நியாய விலைக்கடை
நியாய விலைக்கடை

அதையடுத்து, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை தொடர்புகொண்டு இந்த பிரச்னை பற்றி தெரிவித்தோம்.. அதற்கு அவர், ''மே 15-ம் தேதியில் இருந்துதான் பணப் பட்டுவாடா செய்ய இருக்கிறார்கள். ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை அந்தந்த ஏரியா ரேஷன்கடைகளின் சேல்ஸ்மேன்கள்தான் வினியோகிக்கவேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ வேண்டுமானால் போகலாம். வேறு யாரும் டோக்கன்களை வினியோகிக்க கூடாது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு