Published:Updated:

முதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்... யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்?

முதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கொரோனா வார் ரூம் டீமில் யார் யார் இருக்கிறார்கள், அது எப்படிச் செயல்படுகிறது... விவரமறிய சில வட்டாரங்களில் விசாரித்தோம்.

Published:Updated:

முதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்... யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கொரோனா வார் ரூம் டீமில் யார் யார் இருக்கிறார்கள், அது எப்படிச் செயல்படுகிறது... விவரமறிய சில வட்டாரங்களில் விசாரித்தோம்.

முதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா அச்சுறுத்தல் படிப்படியாக குறைந்து, `டயர் 1’ நகரங்கள் என்றழைக்கப்படும் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் தன் கோர முகத்தைக் காட்டிவருகிறது. இம்மாநகரங்களில் சமூகப் பரவல் அதிகமாவதை தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, ட்ரோன் கிருமி நாசினி தெளிப்பான், மொபைல் காய்கறி ஊர்திகள் எனப் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து, கண்காணிப்பது எல்லாமே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் `வார் ரூம்’ டீம் தான். இதில் யாரெல்லாம் இருக்கிறார்கள், அவர்களின் பணி என்ன... பார்ப்போம்.

மகன் உடையான் படைக்கு அஞ்சான்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வார் ரூமை முழுவதுமாக மேற்பார்வையிடுவது சாட்சாத் அவரது ஒரே மகன் மிதுன்தான். பொறியியல் பட்டதாரியான மிதுன், மாவட்ட வாரியாக எடுக்கப்படும் கொரோனா தடுப்புப் பணிகளை முதல்வரின் முகாம் அலுவலகத்திலிருந்து கண்காணித்து வருகிறார். தினமும் கொரோனா பாதித்தவர்களின் ரிப்போர்ட் கிடைத்தவுடன், எந்தெந்தப் பகுதிகளில் பரவியிருக்கிறது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை எவை என்கிற விவரங்களை தனி சாஃப்ட்வேரில் பதிவேற்றிக் கொள்கிறார். இதிலிருந்து கிடைக்கும் டேட்டாவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கிறாராம்.

மிதுன்
மிதுன்

கடந்தமாதம், ஒடிசா மாநிலத்தில் ஊரடங்களை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டிருந்தார். இதுதெரியாமல் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் திணறிவிட, `நம்மளைச் சுத்தி என்ன நடக்குதுனு ஒரு அப்டேட் கூட பண்ண மாட்டீங்களா?’ என்று அதிகாரிகளுக்கு கடும் `டோஸ்’ விழுந்துள்ளது.

இச்சம்பவத்திலிருந்து வெளிமாநிலங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன, மத்திய அரசின் அறிவிப்புகள் என்ன என்பதையெல்லாம் கண்காணித்து அப்டேட் அளிக்கும் பொறுப்பையும் மிதுனே ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தும் ஐடியாவையும் மிதுன்தான் கொடுத்தாராம். கொரோனா விவகாரத்தில் அப்பாவின் பெயருக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மிதுன் தீவிரமாகச் செயலாற்றுகிறார். இந்த இக்கட்டான நேரத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு இவற்றையெல்லாம் செய்தாலும், அப்பாவின் துறை ரீதியிலான நிர்வாகத்தில் எக்காரணம் கொண்டும் அவர் தலையிடுவதில்லையாம்.

முதல்வரின் தளபதி நம்பர் 1

டாக்டர். விஜயகுமார் ஐ.ஏ.எஸ்
டாக்டர். விஜயகுமார் ஐ.ஏ.எஸ்

இன்று முதல்வரின் தளபதி நம்பர் ஒன் யாரென்றால், முதல்வர் அலுவலகத்தின் செயலாளரான டாக்டர்.விஜயகுமார் ஐ.ஏ.எஸ்தான். 1993 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் கட்டுப்பாட்டில்தான் சுகாதாரத்துறையின் கொரோனா தடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன. முதல்வரை எந்நேரம் வேண்டுமானாலும் தொடர்புகொள்ளும் ஒருசில அதிகாரிகளில் இவர் முதன்மையானவர்.

இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை கொரோனா பற்றிய அப்டேட்டுகள் இவர் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மருந்து சப்ளையில் ஆரம்பித்து, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, புதிதாக கண்டறியப்பட்டுள்ள நோயாளிகள் வரையில் அனைத்தையும் மேற்பார்வையிடுவது விஜயகுமார்தான். இதுபோக, சட்டம் ஒழுங்கு தொடர்பான அப்டேட்டுகளையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார். தமிழக அரசியல், நிர்வாகம் தொடர்பான அனைத்துத் தரவுகளுக்கும் விஜயகுமாரையே முதல்வர் நாடுவதால், அவரது இருப்பு முதல்வர் அலுவலகத்தில் சக்தி வாய்ந்ததாக மாறியிருக்கிறது.

முதல்வரின் அமைதிப் புயல்!

திரிபாதி
திரிபாதி

எவ்வளவு பெரிய நெருக்கடிகள், டென்ஷனான சூழல்கள் வந்தாலும் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதியாக நிலைமையைச் சமாளிக்கத் தெரிந்தவர் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யான திரிபாதி. டெல்லி தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தமிழகம் வந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. கச்சிதமாக திட்டம் வகுத்து சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிந்து மருத்துவமனைக்கு கொண்டுவந்துவிட்டார். அத்தியாவசியப் பொருள்கள் சப்ளை செய்யும் லாரிகளை போலீஸார் ஆங்காங்கே மடக்குவதாக வந்த தகவலை அடுத்து, எந்தத் தடையும் செய்யக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பி பதற்றத்தை தணித்தார்.

போலீஸாரிடையே கொரோனா தொற்று ஆங்காங்கே பரவுவதைக் கண்டு, காவல்நிலையத்தில் புகார் மனுக்களை பெற்றுக்கொள்வதிலும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். மக்கள் ஒழுங்கின்றி வெளியே சுற்றித் திரிவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததே பெரிய சாதனைதான். தினமும் காலை 8 மணிக்கு தமிழக சட்டம் ஒழுங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வருக்கு திரிபாதி அப்டேட் கொடுக்க வேண்டும். இதற்காக காலை 6 மணிக்கே தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் இவர்.

``நிதிநிலையை நீங்கதான் பார்த்துக்கோணும்..!” - முதல்வரின் நம்பிக்கை நட்சத்திரம்

தலைமைச் செயலாளர் க.சண்முகம்
தலைமைச் செயலாளர் க.சண்முகம்

நிதித்துறைச் செயலாளராக இருந்த சண்முகம், தலைமைச் செயலாளராக அமர்ந்திருப்பது முதல்வருக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட்டாக அமைந்துவிட்டது. கொரோனா முடக்கத்தால் தொழில்வளர்ச்சி பெருமளவு முடங்கிப் போயுள்ள நிலையில், சமூக விலகலோடு மீண்டும் தொழில் சக்கரத்தை சுற்றும் இமாலயப் பொறுப்பும் சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்கான குழுவும் சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள எல்லாத் தொழிற்சங்கங்களோடும் சண்முகத்துக்கு நேரடி தொடர்பு உண்டென்பதால், அந்தந்த தொழில்கள் சந்தித்துள்ள சவால்கள், உடனடி நிவாரணம் தேவைப்படும் இடங்களைக் கண்டறிந்து தனியாக ஒரு கோப்பு தயார் செய்துவருகிறார்.

மே 3-ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்பட்டு மே 17 வரை மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் என்னென்ன தொழில்களை மீண்டும் அனுமதிக்கலாம், எப்படி கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என ஆலோசகர்கள், தொழிற்சங்கவாதிகள் எனப் பலதரப்பிலும் கலந்தாலோசித்து முதல்வருக்கு அப்டேட் செய்துவருகிறார் சண்முகம். ``தமிழ்நாட்டோட நிதிநிலையை நீங்கதான் சரி செய்யோணும்” என்று முதல்வரே நேரடியாகக் கேட்டுக் கொண்டதால், அதீத பொறுப்புணர்ச்சியோடு வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் சண்முகம். இவர் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதற்கு மேலும் இவருக்குப் பணிநீட்டிப்பு வழங்கி, தமிழக நிதிநிலையை மீட்டெடுக்கும் பொறுப்பையும் சேர்த்து அளிக்க முதல்வர் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

``என்ன மேடம், இன்னைக்கு என்ன அப்டேட்?”

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

முதல்வரே நேரடியாக தினமும் அப்டேட் கேட்கும் ஒரு துறை செயலாளர் என்றால், அது சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்தான். காலை 8 மணிக்கு டி.ஜி.பி. திரிபாதியிடம் அப்டேட் கேட்ட கையோடு, சில நிமிடங்களில் முதல்வரே பீலாவின் போனுக்கு லைனில் வந்துவிடுகிறாராம். `என்ன மேடம், இன்னைக்கு என்ன அப்டேட்?’ என முதல்வர் கேட்டவுடன், முதல்நாள் எடுத்த நடவடிக்கைகள், இன்று எடுக்கவுள்ள நடவடிக்கைகள், எதிர்பார்க்கப்படும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை முதல்வருக்கு பீலா அளிக்கிறார். மதியம் 2 மணிக்கெல்லாம் அன்று உறுதியாகியுள்ள கொரோனா நோயாளிகளின் பட்டியல் தயாராகி, முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது.

தமிழகம் கொரோனா ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை திருப்பி அனுப்பியுள்ள சூழலில், பரிசோதனை முடிவுகள் வருவதிலும் அதிகப்படியானோருக்கு டெஸ்ட் செய்வதிலும் கடும் சவால்களை சுகாதாரத்துறை எதிர்கொள்கிறது. இதுதொடர்பான ஆலோசனைகளை பீலாவுக்கு முதல்வரே நேரடியாக அளிக்கிறார். இரவு 11 மணிவரையில் முதல்வர் அலுவலகத்தோடு நேரடி தொடர்பில் இருந்து அப்டேட் கொடுத்துவிட்டுதான் வீட்டுக்குக் கிளம்புகிறார் பீலா ராஜேஷ்.

``சென்னை நமக்கு முதுகெலும்பு.. விட்டுடாதீங்க!”

சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்

முதல்வரின் வார் ரூமில் லேட்டஸ்ட்டாக இணைந்து கொண்டவர் சென்னை மாநகராட்சி கமிஷனரான பிரகாஷ் ஐ.ஏ.எஸ். தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகமாக கொரோனா கேஸ்கள் ரிப்போர்ட் ஆகின்றன. இங்குதான் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகம். இந்தத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள், மருந்து மாத்திரைகளை விநியோகிப்பதோடு, இப்பகுதிக்குள் இருப்பவர்களுக்குக் கொரோனா டெஸ்ட் எடுத்து உரிய சிகிச்சை அளிப்பதும் சென்னை மாநகராட்சிதான். இந்த நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் பிரகாஷ் அப்டேட் அளிக்கிறார்.

`சென்னை நமக்கு முதுகெலும்பு.. கவனக்குறைவா விட்டுட்டாதீங்க’ என முதல்வரே உஷார்படுத்தியிருப்பதால், பிரகாஷின் வேகம் சமீபநாள்களாக அதிகரித்துள்ளது. இந்தப் பரபரப்புகளுக்கு இடையில், சென்னையிலுள்ள அம்மா உணவகங்கள் மூலமாக ஒருநாளைக்கு நான்கரை லட்சம் பேருக்கு உணவளிக்கப்படுவது தெரிந்து, முதல்வரே நேரடியாக சாந்தோம் அம்மா உணவகத்துக்கு விசிட் அடித்துப் பாராட்டியது தனிக்கதை.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான பொருள்களை வழங்குவது, மாநகராட்சியின் சமூக நலக் கூடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு உணவளிப்பது, சமூகப் பரவலைத் தடுப்பது எனப் பல சவால்களை சென்னை மாநகராட்சி எதிர்கொள்கிறது. இந்த அப்டேட்டுகளும் முதல்வருக்கு தினமும் அனுப்பப்படுகின்றன. கொரோனா தடுப்புப் பணியில் உள்ளாட்சித்துறைதான் பெரும்பாலான பணிகளை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் செய்கிறது. இத்துறையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறையின் அமைச்சரான எஸ்.பி.வேலுமணியுடன் முதல்வர் அவ்வப்போது கலந்தாலோசித்துக் கொள்கிறார். கொரோனா பரவலைத் தடுக்க `தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்’ ஐடியா இப்படி ஆலோசனையில் உதித்ததுதானாம்.

`முதல்வரின் ட்விட்டர் மேன்'

முதல்வரின் ட்விட்டர் கணக்கு சமீபகாலமாக படு ஆக்டிவாக இருக்கிறது. `மென்ஷன்’ செய்து யார் பதிவு செய்தாலும் உடனடியாக பதிலளிக்கப்படுகிறது. இதன்மூலமாக உணவு கிடைக்காமல் பசியில் வாடிய பல வெளிமாநில தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. இடையிடையே, கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடுவோரை பாராட்டவும் எடப்பாடியின் ட்விட்டர் கணக்கு தவறுவதில்லை. சமூக வலைதளத்தை ஆக்கப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துவது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர் அ.தி.மு.கவின் ஐ.டி.விங் செயலாளரான சிங்கை ராமச்சந்திரன். முதல்வரின் ட்விட்டர் கணக்கை தனிநபர் ஒருவர் கவனிக்க முடியாது என்றாலும் தேவையான ஆலோசனையை மட்டும் ராமச்சந்திரன் அளிக்கிறார். முதல்வரின் மற்றொரு தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை அ.தி.மு.க ஐ.டி. விங்தான் கவனித்துக்கொள்கிறது.

சிங்கை ராமச்சந்திரன்
சிங்கை ராமச்சந்திரன்

சமூக வலைதளங்களில் ஆட்சிக்கு எதிராக தி.மு.கவினர் பதிவிடும் செய்திகளுக்கு பதிலடி கொடுப்பதில் தொடங்கி, ட்ரெண்ட் செட் செய்வது வரை அனைத்தையும் சிங்கை ராமச்சந்திரன்தான் மேற்பார்வையிடுகிறார். பெரம்பலூரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் அய்யாதுரை என்பவர், தன் தாய் இறந்த சில மணி நேரத்திலேயே சோகத்தை மறந்து கொரோனா பணியில் தன்னை இணைத்துக்கொண்டதை அறிந்து முதல்வர் பாராட்டி ட்வீட் செய்தது ஆயிரக்கணக்கான லைக்குகளை அள்ளியது. 30 லட்சம் பேரிடம் இந்த ட்வீட் கொண்டு செல்லப்பட்டதாம். `இதுல இவ்வளவு விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமா?’ என்று முதல்வரே ஆச்சர்யப்பட்டுள்ளார்.

இந்த டீமில் உள்ளவர்கள் போக, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தொழில்துறைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோருடனும் முதல்வர் நேரடித் தொடர்பில் இருக்கிறார்.

நாம் அதிகாரிகளின் `வார் ரூம் டீம்’ பற்றி மட்டும்தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம். அமைச்சர்கள் டீம் தனி. அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ என எடப்பாடிக்கு ஆலோசனை அளிக்க அமைச்சர்கள் டீம் தனியாக உள்ளது.

இந்த அமைச்சர்கள் டீமும், மேற்சொன்ன `வார் ரூம்’ டீமும்தான் இரவு பகல் பார்க்காமல், கொரோனா தடுப்புப் பணியிலும் தமிழக தொழில் இயக்கத்தை மீண்டும் சுழற்றவும் உழைத்து வருகிறது.