Published:Updated:

``அந்த ஆடியோ உண்மைதான்; சின்னம்மா வரப்போறாங்க!" - சசிகலாவுடன் பேசியவர் Exclusive பேட்டி

சசிகலா மற்றும் வினோத் சுரேஷ்
சசிகலா மற்றும் வினோத் சுரேஷ்

அந்த ஆடியோக்கள் உண்மைதானா, அதில் பேசியது சசிகலாதானா என்றும் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இந்நிலையில் அதை உறுதிசெய்வதற்காக களமிறங்கினோம்.

எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா என்று அ.தி.மு.க-வுக்குள் நடந்துகொண்டிருக்கும் ரேஸில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஸ்கோர் செய்துகொண்டிருந்தாலும் அவர்களுக்கிடையே நிலவும் பனிப்போர் இன்னும் ஓயவில்லை. இப்படியான சூழலில், ``நான் விரைவில் வந்துவிடுவேன் கவலைப்படாதீங்க” தன் விசுவாசிகள் சிலரிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியாகி அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சசிகலா
சசிகலா

மொத்தம் மூன்று ஆடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. ஒரு ஆடியோவில், ``வினோத் சுரேஷ்… நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா? கொரோனா மோசமா இருக்கு. ஜாக்கிரதையா இருங்க. விரைவில் நல்ல முடிவு இருக்கு. நான் சீக்கிரம் வந்துருவேம்ப்பா கவலைப்படாதீங்க. அவங்களெல்லாம் சண்டை போட்டுக்கிட்டிருக்காங்க. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. இந்தக் கட்சியை நாங்களெல்லாம் ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்த்தோம்ப்பா. அது வீணாவறதை என்னால பார்த்துகிட்டிருக்க முடியாது. விரைவில் வந்துருவேன். கொரோனா தாக்கமெல்லாம் குறைஞ்சதும் எல்லாரையும் வந்து பாக்குறேன். தைரியமா இருங்க” என்கிறார் சசிகலா.

இன்னொரு ஆடியோவில், ``லாரன்ஸ் நல்லா இருக்கீங்களா… வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா? கண்டிப்பா வந்திருவேன். கட்சியையெல்லாம் சரி பண்ணிரலாம் கவலைப்படாதீங்க. எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க. கொரோனா ரொம்ப மோசமா இருக்கு.” என்கிறார்.

இன்னொரு ஆடியோவில், ``மனசை விட்ர வேண்டாம். தைரியமா இருங்க. மிக விரைவில் வந்துருவேன். அம்மா வழியில் கட்சியைக் கொண்டுபோயிருவேன். இவ்வளவு தொண்டர்கள் என்னை நம்பி இருக்கீங்க. நிச்சயம் நான் அதைச் செய்வேன் கவலைப்படாதீங்க. மிக விரைவில் வந்துருவேன். கொரோனாவால் எல்லா தொண்டர்களுடைய உடல்நலம் கருதிதான் நான் பாக்கலை. இது முடிஞ்சதும் நான் வந்து உங்களையெல்லாம் சந்திக்கிறேன். கவலைப்படாதீங்க” என்கிறார்.

வினோத் சுரேஷ்
வினோத் சுரேஷ்

இந்த மூன்று ஆடியோக்கள்தான் அ.தி.மு.கவில் புயலைக் கிளப்பியிருக்கின்றன. ``பன்னீரா, பழனிசாமியா என்பதெல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது; இனிமேல் சின்னம்மாதான்" என்று சிலர் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்நிலையில், அந்த ஆடியோக்கள் உண்மைதானா, அதில் பேசியது சசிகலாதானா என்றும் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இந்நிலையில் அதை உறுதிசெய்வதற்காக களமிறங்கினோம்.

முதல் ஆடியோவில் உள்ள பெயரான வினோத் சுரேஷ் என்பவர் பேராவூரணியைச் சேர்ந்தவர். பேராவூரணி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவராக இருக்கும் வினோத் சுரேஷிடம் இந்த ஆடியோ குறித்துப் பேசினோம். ``உண்மைதான். நான் சின்னம்மகிட்ட பேசினது உண்மைதான்” சந்தோஷம் குறையாமல் பேச ஆரம்பித்த வினோத் சுரேஷ், ``நேத்துதான் எனக்கு கால் வந்துச்சு. சின்னம்மா வீட்ல இருந்து பேசுறோம். அம்மா உங்ககிட்ட பேசணும்ங்கிறாங்கன்னு சொன்னாங்க. யாரோ கலாய்க்கிறாங்கன்னுதான் முதல்ல நினைச்சேன். அப்புறமா சின்னம்மா குரலைக் கேட்டதும் என்ன பேசறதுன்னே தெரியலை. அதீத சந்தோஷத்துல பதற்றமாகிட்டேன். எத்தனையோ லட்சம் தொண்டர்கள் இருக்காங்க. அவங்க என்கிட்ட கால் பண்ணி பேசறது பெரிய விஷயம் இல்லையா?

வினோத் சுரேஷ் ஒட்டிய போஸ்டர்
வினோத் சுரேஷ் ஒட்டிய போஸ்டர்

எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து அ.தி.மு.கவுல இருக்கேன். அம்மாவுக்கு அப்புறம் சின்னம்மாதான் அ.தி.மு.க-வை வழி நடத்த தகுதியானவர்ங்கிறதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை என்னனென்னவோ ஆகிருச்சு. ஆனா, நிச்சயம் சின்னம்மா திரும்பி வருவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. சின்னம்மா சிறையில இருந்து வரும்போது பேராவூரணியில இருந்து ஆட்களைத் திரட்டிக்கிட்டு வரவேற்பு கொண்டுக்க போயிருந்தேன்.

நிரந்தர பொதுச்செயலாளர் அவங்கதான்னு போஸ்டர் ஒட்டியிருந்தேன். ஆனா அவங்க அரசியல்ல இருந்து ஒதுங்குறேன்னு அறிவிச்சது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துச்சு. ஆனால், எங்கள் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படலை. நீங்க ஒதுங்கியிருக்க கூடாதும்மா… உங்களாலதான் இந்தக் கட்சியை காப்பாத்த முடியும்னு கட்சியோட நிலைமை குறித்தும் தோல்விக்கான காரணம் குறித்தும் சின்னம்மாவுக்கு அவ்வப்போது கடிதம் எழுதுவேன்.

அதை சின்னம்மா கைகளுக்குச் சேர்ந்ததும் சின்னம்மா சார்பில யாரவது ரிப்ளை கொடுப்பாங்க. ஆனா நேத்து திடீர்ன்னு சின்னம்மாவே என்கிட்ட போன்ல பேசினதை என்னால இப்போ வரையும் நம்ப முடியலை. பெரிய சந்தோஷமா இருக்கு. ஒரு சாதாரண தொண்டனையும் நினைவுல வச்சு கூப்பிட்டு நம்பிக்கை கொடுக்கிறாங்கன்னா பாருங்க. அவங்கதான் இந்தக் கட்சியை வழிநடத்தறத்துக்கு சரியான ஆள்.

அ.தி.மு.க பிளவுபடாமல் சின்னம்மா தலைமையில் ஒன்றுபட்ட அ.தி.மு.கவாக இருந்திருந்தால் இந்தமுறையும் அ.தி.மு.கதான் ஆட்சிய அமைச்சிருக்கும். இப்போ அதைப்பத்தியெல்லாம் பேசி பிரயோஜனம் இல்லை. கட்சியை வலிமைப்படுத்தணும். அதற்கு சின்னம்மா வரப்போறாங்க. என்கிட்ட மட்டுமில்லை என்னைப் போல இன்னும் நிறைபேர்கிட்ட சின்னம்மா கூப்பிட்டு பேசியிருக்காங்க. அவங்களோட அரசியலை இனிமேதான் பார்ப்பீங்க” என்றார் நம்பிக்கையுடன்.

sasikala
sasikala
ம.அரவிந்த்

இக்கட்டான சூழலிலும் தனக்கு ஆதரவாக இருக்கும் விசுவாசிகளிடம் தனித்தனியாக போனில் பேசிவரும் சசிகலா `கட்சியை நான் வழிநடத்துவேன்’ என்று உறுதியுடன் சொல்கிறார். அ.தி.மு.க-வில் அதிரடிகள் காத்திருக்கின்றன. அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு