Published:Updated:

“நான் முதலமைச்சரே இல்லை!”

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

ஜெயலலிதா மறைந்து மூன்றாவது ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவர் இல்லாமலே மூன்று ஆண்டு காலத்தை ஆளுங்கட்சியாக நகர்த்தியிருக்கிறது அ.தி.மு.க. 'பெரிய ஆளுமை இல்லை, ஆட்சி அனுபவமும் இல்லை' என்றெல்லாம் ஒருபக்கம் விமர்சனங்கள் றெக்கைக் கட்டினாலும், எல்லாவற்றையும் அனாயசமாக எதிர்கொண்டபடி தமிழக முதல்வராக நடைபோட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனந்த விகடனுக்காக அவரைப் பிரத்யேகமாக பேட்டி எடுக்க நேரம் கேட்டோம். முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரும்படி அழைப்புவந்தது. 'ஜூனியர் விகடன்' ஆசிரியர் ச.அறிவழகன், 'செய்தி ஆசிரியர்' ஆர்.பாலகிருஷ்ணன் இருவரும் முதல்வரைச் சந்தித்தபோது, அவர் அளித்த பேட்டியிலிருந்து...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலை, செவ்வந்தி இல்லம்... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரபூர்வ இல்லம். பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே இந்த இல்லத்தில்தான் வசிக்கிறார். 2017-ம் வருடம் ஜூன் 12-ம் தேதியன்று முதல்வருடன் ஒரு நாள் கவரேஜுக்காகச் சென்றிருந்தோம். அது, முதல்வராக எடப்பாடி பதவி ஏற்ற 116-வது நாள்!

2019 நவம்பர் 16. அவர் பதவியேற்று மூன்றாண்டுகள் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் அவர் வீட்டிற்குச் சென்றோம். நம்மை வரவேற்ற முதல்வரின் உதவியாளர் கிரிதரன், அருகில் இருந்த கேன்டீனுக்கு அழைத்துச் சென்றார். முதல்வர் வீட்டுக்கு வரும் வி.ஐ.பி-க்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இங்கே கை நனைத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்பது எடப்பாடியின் அன்புக்கட்டளை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மொபைல்போன், பல்முனை தாக்குதலுக்குரிய ஓர் ஆயுதமாக இருப்பதால், முன்னெச்சரிக்கையாக முதல்வர் வீட்டு வாசலிலேயே போலீஸார் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். கடந்த முறை சென்றபோது, தான் வளர்க்கும் சீஸர் என்கிற நாயிடம் அழைத்துச் சென்று அதன் திறமைகளையெல்லாம் அடுக்கினார் எடப்பாடி. அப்போது குட்டியாக இருந்த சீஸர், இரண்டு வருடங்களில் நன்கு வளர்ந்து நின்று கம்பீரமாக முறைத்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முதல்வரிடமிருந்து அழைப்பு வர, உள்ளே நுழைந்தோம்.

இந்த இரண்டு ஆண்டுகளில் எடப்பாடியின் முகத்தில் நிறைய வித்தியாசங்கள். வழக்கமான டிரேட் மார்க் சிரிப்பையும் தாண்டி, டென்ஷன் ரேகைகளும் எட்டிப்பார்க்கவே செய்கின்றன. ஆட்சியிலும் கட்சியிலும்தான் எத்தனை எத்தனை பிரச்னைகள். ஆனால், எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் யதார்த்தமாகவே பேசினார்.

தமிழகத்தில் நீட் தேர்வுகூடாது என்பதில் இன்றுவரை உறுதியாகவே இருக்கிறோம். காங்கிரஸும் தி.மு.கவும் இதை ஆரம்பித்து வைக்காமலிருந்தால், இப்போது இந்தப் பிரச்னையே வந்திருக்காதே.... தமிழகத்தில் இவ்வளவு போராட்டங்களுக்கும் தேவையிருந்திருக்காதே!

கடந்த முறை வந்தபோது, வீட்டின் பின்புறத்தில் இருக்கும் காய்கறித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று காட்டினீர்களே... இப்போது எப்படி இருக்கிறது தோட்டம்?

‘‘எங்கே... தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அதையெல்லாம் பராமரிக்க முடியவில்லை. இங்கே நான் தனியாகத்தான் இருக்கிறேன்.அவ்வப்போது, குடும்பத்தினர் வந்துசெல்கிறார்கள். அதனால் பராமரிப்பதும் சிரமமாக இருந்தது. நிலத்தடிநீர் உப்பாக இருக்கிறது. அதை ஊற்றினால், செடிகள் பட்டுப்போய்விடும். அதனால் தோட்டத்தைக் கைவிட்டுவிட்டேன்’’ என்று வருத்தத்துடன் முதல்வர் சொன்னபோது, அவர் முகத்தில் கவலை ரேகைகள்.

நாட்டுக்கோழிகளையும் வளர்த்து வருகிறார் எடப்பாடி. அவற்றின் முட்டைகளை பத்திரப்படுத்தி, சொந்த ஊருக்குச் எடுத்துச் சென்று, மகன் வயிற்றுப் பேரனுக்குத் தருகிறாராம். ஊரில் நாட்டுக்கோழி முட்டை கிடைத்தாலும், தனக்காகவே தாத்தா கொண்டுவருவதை ரசித்துச் சாப்பிடுவாராம் பேரன். இதை அமைச்சரவை சகாக்களிடம் சொல்லிச் சொல்லிப் பூரிக்கும் எடப்பாடி, எங்களிடமும் சொன்னார், பாசமுள்ள தாத்தாவாக!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இடையில் உதவியாளர் போனை நீட்ட, வாங்கிப் பேசிவிட்டு நம் பக்கம் திரும்பினார். அப்போதும் சரி, இப்போதும் சரி செல்போனை கையில் வைத்துக்கொள்வதில்லை! 63 வயதில் சந்தித்தது... இப்போது 65 வயதில். அப்போது 89 கிலோவாக இருந்த உடல் எடையை 80 கிலோவாகக் குறைத்தி ருக்கிறார், இந்த 5 அடி 10 அங்குல உயர மனிதர்.

‘‘சர்க்கரை, பிளட் பிரஷர் என எதுவும் இல்லை’’ என்று உற்சாகமாகச் சொல்கிறார்.

வீட்டுக்குப் பின்னால் பெரிதாக எட்டு வரைந்துவைத்து அதில் நடந்து கொண்டிருந்தீர்களே... இப்போதும் தொடர்கிறது தானே?

‘‘இல்லை. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், எட்டு போடுவதிலிருந்து புரமோஷன் கொடுத்துவிட்டார். அவருடைய வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. அதற்குப் பின்புறம் சுமார் இரண்டு ஏக்கர் அளவுக்கு காலியிடம் இருக்கிறது. புதர் மண்டிக்கிடந்த அந்த இடத்தை சுத்தம்செய்து, மண்ணைக் கொட்டி நடைப்பயிற்சிக்கான பாதையாக மாற்றி வைத்துள்ளார். இருவரும் அங்கேதான் வாக்கிங் செல்கிறோம்.’’

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வி. ஆனால், தற்போது சட்டமன்றத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. எப்படிச் சாத்தியமானது?

‘‘தமிழக மக்கள், இரண்டு வகை மனோநிலையை உடையவர்கள். நாடாளுமன்றத் தேர்தல் வேறு... சட்டமன்றத் தேர்தல் வேறு என்று பிரித்துப் பார்ப்பார்கள். அதன் காரணமாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் சரிவு ஏற்பட்டது. அதைவைத்து சட்டமன்றத் தேர்தல்ளை ஒப்பிட்டு பேச முடியாது. 2016-ல் அம்மா உயிருடன் இருந்தபோதே, விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியைச் சந்தித்தோம். ஆனால், இப்போது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறோம். நாங்குநேரி எப்போதும் காங்கிரஸ் கோட்டை என்பார்கள். அதையும் இப்போது உடைத்திருக்கிறோம்.

குடிமராமத்துத் திட்டம், ஏரிகள், தடுப்பணைகள் போன்ற பல திட்டங்கள் சரியான வழியில் அந்த இரண்டு தொகுதிகளுக்கும் போய்ச் சேர்ந்ததால் ஜெயித்திருக்கிறோம். மாநிலத்தின் எல்லா வளர்ச்சி திட்டங்களும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. எதிலும் தொய்வு கிடையாது. அம்மா வழியில் ஆட்சி நடப்பதால், மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்பட்டார்கள். கட்சித் தொண்டர்களும் அரும்பாடு பட்டார்கள். அதனால்தான் இமாலய வெற்றி.’’

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், `அடிமை அரசு’ என்றே விமர்சிக்கிறார். மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும், பி.ஜே.பி-தான் உங்கள் அரசைப் பின்னணியில் இயக்குவதாகவும் குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறாரே?

‘‘நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல! ஸ்டாலின் அப்படித்தான் பேசுவார். அரசியலில் எங்களைவிட்டால் அவருக்கு வேறு என்ன வழி இருக்கிறது? ஆட்சியைக் கவிழ்க்க எவ்வளவோ முயன்று பார்த்தார். எங்கெங்கோ தூண்டிவிட்டுப்பார்த்தார். அதையெல்லாம் சமாளித்தோம். எங்கள் அரசு மீது வேறு குற்றம்சாட்டுகளை வைக்க முடியவில்லை. அதனால் இப்படிப் பேசுகிறார். எங்களைப் பொறுத்தவரையில், தமிழகத்துக்கு நன்மை கிடைக்கிறபோது ஆதரிப்போம். மாநிலத்துக்குப் பிரச்னை என்கிறபோது எதிர்க்கிறோம். இதுதான் எம்.ஜி.ஆர் காலத்திலும், அம்மா காலத்திலும் பின்பற்றப்பட்ட கொள்கை. முத்தலாக் பிரச்னை, காவிரிப் பிரச்னை வந்தபோது நாங்கள் எப்படிக் கையாண்டோம் என்பதை மக்கள் அறிவார்கள். ஆனால், தி.மு.க. அப்படி அணுகியதா?

பதவி அதிகாரம்தான் அவர்கள் குறிக்கோள். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கும் அதிகாரத்துக்கும் வரவேண்டும் என்ற நோக்கத்தோடு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார்கள். கடந்த காலத்தில் நாங்கள் பதவியில் இருந்தோமா... இல்லையே? ஆனால், அதிக காலம் தி.மு.க-தான் மத்திய ஆட்சியில் பங்குபெற்றது. பதவியும் அதிகாரமும் அவர்களிடம்தான் இருந்தது. அதைவைத்து முல்லை பெரியாறு, காவிரிப் பிரச்னைகளைத் தீர்த்தார்களா... பாலாறு பிரச்னையைத் தீர்த்தார்களா? எந்தப் பெரிய திட்டத்தையும் தமிழகத்துக்குக் கொண்டுவர முயலவே இல்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சுயநலம்தான் அவர்களுக்கு முக்கியம். மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது ஐந்து ஆண்டுகாலமும் அமைச்சரவையில் இருந்தது தி.மு.க. அப்போதெல்லாம் அது மதவாதக் கட்சி என்று தெரியாதா? முரசொலி மாறன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஓராண்டுக்காலம் முழுக்க மந்திரி பதவியைக் கொடுத்துதானே வைத்திருந்தது பி.ஜே.பி. ஆக, மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சிதான் தி.மு.க. நாங்கள் அப்படி அல்ல. மக்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்குதான் முழு அக்கறையைச் செலுத்துகிறோம்.’’

நீங்கள் சொல்லும் அரசியல் இருக்கட்டும். மக்கள் திட்டங்களில் உதாரணத்துக்கு, நீட் தேர்வு போன்ற சில திட்டங்களில் பி.ஜே.பி-யின் ஊதுகுழலாக அவர்கள் சொல்வதைத்தானே ஃபாலோ செய்கிறீர்கள்?

‘‘காங்கிரஸ், தி.மு.க கூட்டணி ஆட்சி செய்தபோதுதான் நீட் தேர்வுக்கு பிள்ளையார்சுழி போட்டார்கள். அவர்கள் கொண்டுவந்துவிட்டு மக்களிடம் எதிர்ப்பு வந்தவுடன் இப்போது நல்லவர்கள்போல் நடிக்கிறார்கள். எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள். ஆனால், நாங்கள் முழுமையாகத்தான் முயற்சித்தோம். நீதிமன்றம் வரை போய்விட்டதால் எங்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. ஆனாலும், தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது என்பதில் இன்று வரை உறுதியாகவே இருக்கிறோம். காங்கிரஸும் தி.மு.கவும் இதை ஆரம்பித்துவைக்காமலிருந்தால், இப்போது இந்தப் பிரச்னையே வந்திருக்காதே.... தமிழகத்தில் இவ்வளவு போராட்டங்களுக்கும் தேவையிருந்திருக்காதே!’’

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற முடியாதா என்று உங்கள் அரசைப் பார்த்து உயர் நீதிமன்றம் சமீபத்தில் கேட்டிருக்கிறதே?

ஏற்கெனவே, நீட் தேர்வு தமிழகத்துக்கு வேண்டாம் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி யிருக்கிறோம். தொடர்ந்தும் வலியுறுத்திதான் வருகிறோம்.’’

``ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது குழந்தைகளுக்கு அதிக சுமை கொடுப்பதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறதே... உங்கள் கருத்து என்ன?

நீங்கள், நான் படித்த காலத்தில் ஒன்றாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு எல்லாவற்றிலுமே நன்றாகப் படிக்காதவர்களை ஃபெயில் செய்வார்கள். அப்போது இருந்த ஸ்டாண்டர்டு என்ன... இப்போது இருக்கும் ஸ்டாண்டர்டு என்ன? ஒரு குழந்தையின் கல்வித்தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? தரத்தை எப்படி ஒப்பீடு செய்வது? எட்டாம் வகுப்பு வரை அப்படியே சென்றுவிட்டு, திடீரென பொதுத்தேர்வுக்காகப் படி என்றால், எப்படிப் படிக்கும்?

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் என்று எடுத்துக்கொண்டால், அதில் முதலாவது வருகிறவர், இரண்டாவது வருகிறவர் என்று ஓடவிட்டுத்தானே கண்டுபிடிக்கிறோம். எட்டாம் வகுப்புக்கு வரும்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் தரத்தில் இருந்தால், மேற்கொண்டு எப்படி புத்திசாலி மாணவராக உருவாக முடியும்? நாமே அவர்களுக்கு துரோகம் இழைத்த மாதிரி ஆகிவிடும். பொதுத்தேர்வுகள் நடந்தால்தான் கல்வித்தரத்தை கண்டுபிடிக்க முடியும். அப்போதுதான் தேவைப்படும் கல்விக்கான பயிற்சியை ஆசிரியரால் தர முடியும். மக்களுக்கு குவாலிட்டியான கல்வி கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தில்தான் அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

பேசிக்கொண்டிருக்கும்போதே, ‘‘சார், முதலமைச்சர் போர்டுடன் போட்டோ எடுக்கவேண்டும்’’ என்று புகைப்படக்காரர் கேட்க, ‘`நன்றாக எடுங்கள்’’ என்றவர், உதவியாளரை அழைத்து தன் டேபிளில் இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை முதலமைச்சர் என்கிற போர்டுக்கு இருபக்கமும் வைக்கச் சொல்லிவிட்டு, ‘`இப்போது எடுங்கள். நான் முதலமைச்சரே இல்லை. அவர்கள் இருவரும்தான் உண்மையான முதலமைச்சர்கள். நான், பணியாள்’’ என்று சொல்லியபடி நிமிர்ந்து உட்கார்ந்தார்.

கொடுத்த நேரத்தைத் தாண்டி கேள்விக் கணைகளை நாம் தொடுத்துக்கொண்டேயிருக்க, முதல்வரும் ஆச்சர்யம், பெருமை என உணர்வுக் கலவையாய் பதில்களைக் கொட்டிக்கொண்டே இருந்தார். இடையிடையே, ‘`சார் நேரமாகி விட்டது... வெளியில் வேறு வி.ஐ.பி-க்கள் வெயிட்டிங்’’ என்று உதவியாளர்கள் குறுக்கிட்டதெல்லாம் அவருடைய கவனத்தைப் பெறவே இல்லை.

அடுத்த வாரம்

  • தமிழக அமைச்சர்கள் ஊழலில் திளைப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே?

  • உங்கள் டேபிளில் ஃபைல்கள் மலைபோல் குவிகின்றனவா?

  • `கோ பேக் மோடி’ என்று தமிழகத்தில் அரசியல்ரீதியில் தாக்குவதாகச் சொல்கிறீர்கள். உண்மையிலேயே தமிழக மக்களுக்கு அவரிடமிருந்து நல்ல திட்டங்களை கேட்டுப் பெற்றுள்ளீர்களா... அவர் தந்திருக்கிறாரா?

  • ரஜினி பற்றி இப்போது திடீர் தாக்குதல் நடத்த ஆரம்பித்திருப்பது ஏனோ?

  • கமலிடமிருந்து அடிக்கடி உங்களை நோக்கி அம்புகள் பாய்கின்றனவே?

  • ரஜினி திரும்பத் திரும்பச் சொல்லும் வெற்றிடம் உண்மையா?

  • 2021-ல் உங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்?

- பேட்டி தொடரும்.