சினிமா
Published:Updated:

“பிரசாந்த் கிஷோரை நம்பி மட்டும் தி.மு.க. இல்லை!”

தமிழச்சி தங்கப்பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழச்சி தங்கப்பாண்டியன்

தமிழைச் செம்மொழியாக்கிய ஒரு தலைவர், தமிழுக்காகத் திருக்குறளிலிருந்து சங்கம் முதற்கொண்டு அனைத்தையும் தனது மூச்செனக் கருதி முன்னெடுத்துச் சென்ற ஒரு தலைவர் கலைஞர் கருணாநிதி.

‘இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க’ என்ற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு ஒருபுறம், ‘நாட்டார் தெய்வ வழிபாட்டை முன்னிறுத்தப்போகிறது தி.மு.க’ என்று கிளம்பும் செய்திகள் இன்னொருபுறம்.நாட்டார் தெய்வ வழிபாட்டில் ஆர்வம் கொண்டவரும் தென்சென்னைத் தொகுதி எம்.பி-யுமான தமிழச்சி தங்கபாண்டியனிடம் பேசினேன்...

‘‘வலுவான பிரசார உத்திகளின் மூலம் திராவிடக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்ற தி.மு.க., இன்று பிரசாந்த் கிஷோர் போன்ற தேர்தல் வியூக ஆலோசகர்களை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறதே?’’

‘‘இதில், ‘நம்பி’ என்ற இந்த வார்த்தையை ஊடகத்தினர் நீங்களாகப் போட்டுக்கொள்கிறீர்கள். தி.மு.க-வைப் பொறுத்தவரையில், இதுவரை தலைவர்கள் வளர்த்தெடுத்த கொள்கை பலத்தாலும், சொல்வதைச் செய்கின்ற, செய்வதைச் சொல்கின்ற செய்நெறிகளாலும்தான் நிலைத்து நிற்கிறது. இன்றைய காலகட்டத்தில், எல்லாக் கட்சிகளுமே தேர்தலை எதிர்கொள்வதற்காக இதுபோன்ற தேர்தல் வியூக ஆலோசகர்களை நியமித்துக்கொள்கின்றன. அந்தவகையில் மக்களைச் சென்றடையும் ஊடகமாக பிரசாந்த் கிஷோரை தி.மு.க பயன்படுத்திக்கொள்ளும்... அவ்வளவுதான்!’’

‘‘உள்ளாட்சித் தேர்தலில், சொந்தக் கட்சியினரிடமே ‘சீட் பேரம்’ பேசிய ஆடியோ வெளியான பிறகும்கூட, சம்பந்தப்பட்டவர்கள்மீது தி.மு.க கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லையே?’’

‘‘நடவடிக்கை எடுக்கவில்லை என மேம்போக்காகச் சொல்லிவிட முடியாது. ஊராட்சித் தேர்தலுக்குப் பின்பு நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்கு மாறாக நடந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க ஜனநாயக அடிப்படையில் எல்லோரையும் வரவழைத்துப் பேசியிருக்கிறார் தலைவர் ஸ்டாலின். அதோடு, சம்பந்தப்பட்டவர்களை மிக வெளிப்படையாகக் கண்டித்துப் பேசியதோடு, தனிப்பட்ட முறையிலும் அவர்களோடு பேசி நடவடிக்கை எடுத்துள்ளார். ஆக, பகலில் நட்சத்திரங்களைப் பார்க்க முடியவில்லை என்பதற்காக, நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லிவிடக்கூடாது!’’

தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழச்சி தங்கப்பாண்டியன்

‘‘சமீபத்தில், ‘தாழ்த்தப்பட்டவர்களை நீதிபதிகளாக நியமித்தது, தி.மு.க போட்ட பிச்சை’ என்ற ஆர்.எஸ்.பாரதியின் பேச்சையும்கூட தி.மு.க தலைமை பெரிய அளவில் கண்டித்த மாதிரி தெரியவில்லையே?’’

‘‘சம்பந்தப்பட்ட பேச்சுக்காக ஆர்.எஸ்.பாரதி, மன்னிப்பு கேட்டுவிட்டார். ‘தான் பேசியது தவறுதான்’ என்று முறையான விளக்கமும் கொடுத்துவிட்டார். தி.மு.க தலைவரும்கூட அந்தப் பேச்சைக் கண்டித்து அறிக்கையின் வாயிலாக எதிர்வினையாற்றிவிட்டார். எனவே, இதற்குமேல் இந்தக் கேள்விக்கு விரிவாக பதில் கொடுக்க விரும்பவில்லை!’’

‘‘துக்ளக் விழாவில் ரஜினி பேசிய பேச்சுக்கு எதிராக, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள்கூடக் கடும் எதிர்ப்பு தெரிவித்த சூழலில், தி.மு.க மென்மையான போக்கைக் கடைப்பிடித்ததே... பயமா?’’

‘‘ ‘நன்கு மூடிய கதவு, தாழ்ப்பாளைப் பயன்படுத்துவதில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு. தெளிவான, திடமான பலம் வாய்ந்த கட்சியாக தி.மு.க இருக்கும்போது, இதுபோன்ற சிறுசிறு சலசலப்புகளுக்கெல்லாம் தேவையே இல்லாமல், அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை. ரஜினியின் அந்தப் பேச்சுக்குப் பதிலாக, ‘துக்ளக் படிக்கிறவர்கள் வேண்டுமானால், அறிவாளியாக இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால், முரசொலி படிக்கிற ஒவ்வொருவரும் போராளிகள்’ என்று நானே பேசியிருக்கிறேன். போராளி முக்கியமா, அறிவாளி முக்கியமா என்பதைத் தலைமுறை தெரிந்துகொள்ளட்டும். எங்களுக்கு மக்கள் பணி நிறைய இருக்கிறது.’’

‘‘தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தி.மு.க குரல் கொடுத்தது. ஆனால் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த 1997-ல், இதே தஞ்சைப் பெரிய கோயிலில் சமஸ்கிருதத்தில்தானே குடமுழுக்கு நடைபெற்றது?’’

‘‘தமிழைச் செம்மொழியாக்கிய ஒரு தலைவர், தமிழுக்காகத் திருக்குறளிலிருந்து சங்கம் முதற்கொண்டு அனைத்தையும் தனது மூச்செனக் கருதி முன்னெடுத்துச் சென்ற ஒரு தலைவர் கலைஞர் கருணாநிதி. எனவே, ‘தமிழில் எங்களுக்குக் குடமுழுக்கு வேண்டும்’ என இப்போது எழுந்தது போன்று ஒரு கோரிக்கை, அந்தக் காலகட்டத்திலும் எழுந்திருந்தால், நிச்சயம் அதைப் பரிசீலித்து நடைமுறைப் படுத்துவதற்கான முன்னெடுப்புகளைக் கலைஞர் எடுத்திருந்திருப்பார்.’’

“பிரசாந்த் கிஷோரை நம்பி மட்டும் தி.மு.க. இல்லை!”

‘‘கருணாநிதி காலகட்டத்தில், கடவுள் மறுப்பு பேசிவந்த தி.மு.க., இன்றைக்கு ‘தி.மு.க-வில் 90 சதவிகிதத்தினர் இந்துக்கள்தான் இருக்கிறார்கள்’ என்று சொல்லுகிற இடத்துக்கு வந்துவிட்டதே?’’

‘‘இன்று நேற்றல்ல, என்றைக்குமே, ‘எந்த மதத்தினரையும் புண்படுத்தக்கூடாது. அனைத்து மதத்தினரையும் ஏற்றுக்கொண்டு நடந்துகொள்ள வேண்டும்’ என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை; நிலைப்பாடு. தி.மு.க தலைவர்களில் சிலர் ‘கடவுள் மறுப்பு’ கொள்கை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், அதற்காக கடவுளர்களை நிந்திப்பவர்களாக இருந்தது கிடையாது. ‘நாட்டார் வழிபாட்டில் நம்பிக்கைகொண்டவள் நான்’ என்று ஏற்கெனவே விகடன் பேட்டியிலும் கூறியிருக்கிறேன். ஆனாலும்கூட பா.ஜ.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அரசியலுக்காக ‘இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டினால், இந்துக்கள் பயன்பெறும் வகையிலான முன்னெடுப்புகளை எடுத்தது தி.மு.க தான்.’’

தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழச்சி தங்கப்பாண்டியன்

‘‘2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்விதமாக, ‘நாட்டார் வழிபாடு, கிராம கோயில் பூசாரி நலத்திட்ட’ விவகாரங்களை தி.மு.க முன்னெடுத்து வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றனவே... உண்மைதானா?’’

‘‘உண்மையா, உண்மையில்லையா என்ற செய்திகளுக்குள் எல்லாம் நான் போகவில்லை. ஆனால், கிராம கோயில் பூசாரிகளின் எண்ணற்ற கோரிக்கைகள் தி.மு.க ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. நாட்டார் கலைஞர்களை, நாட்டார் கலைகளை ஊக்குவிக்கும்விதமாக ‘சங்கமம்’, நல வாரியம் என நாட்டார் பண்பாடு, கலை, இலக்கியத்தில் மிகக் கவனமாகச் செயல்பட்டு வந்திருக்கிறது தி.மு.க. எனவே, இவையெல்லாம் ஏற்கெனவே தி.மு.க செய்துவருகிற விஷயங்கள்தான். ஓட்டுக்காகத்தான் இவற்றைச் செய்கிறோம் என்பதை உறுதியாக மறுக்கிறேன்!’’