Published:Updated:

"மதவாதமும் தப்பு; மதச்சார்பின்மையும் தப்பு!”

ஜி.கே.வாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.கே.வாசன்

“நாடு என்றால் பிரச்னைகள் வரத்தான் செய்யும். ஆனால், மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு அரசு முன்வரவேண்டும்.

ஜாக்பாட் அடித்த சந்தோஷத்தில் இருக்கிறார் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன். தே.மு.தி.க., புதிய நீதிக்கட்சி மற்றும் மற்ற அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளிடையே கடும்போட்டி நிலவிவந்த சூழலில், யாரும் எதிர்பாராதவண்ணம் ராஜ்யசபா எம்.பி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ஜி.கே.வாசன்!

‘`காங்கிரஸ் கட்சியில் எம்.பி., அமைச்சராகப் பணியாற்றிய நீங்கள், இப்போது பா.ஜ.க கூட்டணியிலிருந்து எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?’’

“2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து 39 தொகுதிகளிலும் பிரசாரம் செய்தோம். அந்தக் கூட்டணியில் பா.ஜ.க-வும் அங்கம் என்பதால், அவர்களுடனான கூட்டணி என்பது எங்களுக்குப் புதிதல்ல. தமிழகத்தில், எங்கள் கூட்டணி வெற்றிபெறவில்லை என்றபோதும், இந்தியா முழுக்க இந்தக் கூட்டணிக்குத்தான் இரண்டாவது முறையாகவும் ஆட்சிப்பொறுப்பை வழங்கியிருக் கிறார்கள் மக்கள். தேசியக் கட்சியான காங்கிரஸ் எதிர்க்கட்சி அங்கீகாரத்தைக் கூடப் பெறமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. பாரம்பர்யமான காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க அங்கம் வகிக்கிற கூட்டணிக்குள் போன சமயத்தில், இரண்டு சதவிகித சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால், தேர்தலுக்குப் பிறகு அகில இந்திய முடிவுகள், அந்த சந்தேகங்களையெல்லாம் களைந்துவிட்டது. ‘நாம் எடுத்த முடிவு சரிதான்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம்!’’

‘`மதவாத எதிர்ப்பு என்பதை அடிப்படையாகக் கொண்ட கட்சியிலிருந்து வந்த நீங்கள், ‘மதவாதக் கட்சி’ என்று விமர்சிக்கப்படும் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து பயணிப்பது முரண்பாடாக இல்லையா?’’

“பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் என்றாலே ‘நேர்மை, எளிமை, தூய்மை மற்றும் வெளிப்படைத் தன்மை’ ஆகியவைதான். இவற்றை முன்னிறுத்திதான் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தலைவர்கள் வாக்கு சேகரித்தனர். காரணம், அன்றைக்கு மக்களின் மனநிலையும் அப்படித்தான் இருந்தது. இந்தத் தலைவர்கள் இறந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. இப்போது மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அரசியல் செயல்பாடு மாறும்போதுதான் கட்சி வெற்றிபெறும். எனவே, இதை மதவாதம் என்பதும் தப்பு; மதச்சார்பின்மை என்பதும் தப்பு. இவையிரண்டுமே பொய். ‘மத நல்லிணக்கம்’ மட்டுமே உண்மை. இதைத்தான் நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம்.’’

‘`மதச்சார்பின்மைக்கும் மத நல்லிணக்கத்துக்கும் அப்படி என்ன வித்தியாசம்?’’

‘`மதங்களுக்கிடையே எந்தவித மோதலும் இல்லாது, அனைவரும் சகோதர - சகோதரிகளாக இருப்பதே மத நல்லிணக்கம். ஆனால், மதச் சார்பின்மை என்பது பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கும் இடையே சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று ஊதுகுழலாக இருப்பதும் என மாறிவிட்டது.’’

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

‘`பா.ஜ.க ஆட்சியில்தான் மதரீதியிலான பிரிவினைகள், போராட்டங்கள் நாட்டில் அதிகரித்துவிட்டன என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?’’

“எதிர்க்கட்சிகள்தான் இம்மாதிரியான போராட்டங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் ‘மதச்சார்பின்மை என்ற பெயரில், மக்களை ஏமாற்றாதீர்கள்; மத நல்லிணக்கம் என்று சொல்லி வெளியே வாருங்கள். அப்போதுதான் ஒற்றுமை வரும்’ என்று நாங்கள் சொல்கிறோம்.’’

மதச்சார்பின்மை என்ற பெயரில்
மக்களை ஏமாற்றாதீர்கள்

“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடைச்சட்டம், சி.ஏ.ஏ என பா.ஜ.க அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறீர்களா?’’

“நாடு என்றால் பிரச்னைகள் வரத்தான் செய்யும். ஆனால், மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு அரசு முன்வரவேண்டும். அதுதான் அரசின் கடமை. ‘இந்திய இஸ்லாமியர்களுக்கு இந்தச் சட்டங்கள் ஒருபோதும் பாதகத்தை ஏற்படுத்தாது; அப்படி ஏற்படுத்தினால், அதைத் த.மா.கா நிச்சயம் எதிர்த்து நிற்கும்’ என்று ஏற்கெனவே நாங்கள் சொல்லியிருக்கிறோம்.’’

“அ.தி.மு.க சார்பில், நீங்கள் எம்.பி வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகச் சொல்கிறார்களே?’’

“105-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட அ.தி.மு.க-வுக்கு மூன்று எம்.பி-களைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு. அந்த வகையில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆட்சி மன்றக்குழுவினர் யாரை வேண்டுமானாலும் எம்.பி-யாகத் தேர்வு செய்யலாம். முறையாக அ.தி.மு.க தலைமையை அணுகி, ‘த.மா.கா-வுக்கு ஒரு எம்.பி பதவி வேண்டும்’ என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துதான் பதவியைப் பெற்றிருக்கிறோம். இதில், பா.ஜ.க-வைச் சம்பந்தப்படுத்தி இழுத்துப் பேசுவது தப்பு!’’

“கடந்த நவம்பரில் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தீர்கள். பிரதமரும் உங்கள்மீது அதிக பாசம் காட்டுகிறாரே?’’

“கடந்த வருடம் மே மாதமே, ‘என்னை நேரில் வந்து சந்தியுங்கள்’ என்று சொல்லிவிட்டார் மோடி. ஆனால், நான் சந்திக்கவில்லை. சீன அதிபர் சந்திப்புக்காகச் சென்னை வந்திருந்த போதும் நினைவு படுத்தினார் பிரதமர். கூட்டணிக் கட்சியின் அகில இந்தியத் தலைவர், பிரதமர் இரண்டுமுறை அழைத்தும்கூட நேரில் சென்று சந்திக்கவில்லையே என்று வருத்தப்பட்டேன். மிகத் தாமதமாக நடைபெற்ற அந்தச் சந்திப்பில்தான், தமிழகத்துக்காகச் சில கோரிக்கைகளையும் பிரதமரிடம் முன்வைத்தேன்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சந்தித்துப் பேசியதைக்கூட, ‘ஏன் சந்தித்தீர்கள்’ என்று கேட்கிறீர்களே... எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர், பதவியில் இல்லையென்றாலும் ஆதாயம் தேடுவதற்காக அங்கேயே உட்கார்ந்திருக்கிறார்களே... அவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது?’’

‘‘ `பா.ஜ.க சிபாரிசினால் எனக்கு எம்.பி பதவி கிடைக்கவில்லை’ என்று மறுக்கிறீர்களா?’’

‘`எதற்குத் தேவையில்லாத அந்த முடிச்சைப் போடுகிறீர்கள்? தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எம்.எல்.ஏ-க்களே இல்லாதபோது, அவர்கள் எப்படி எம்.பி ஆக்க முடியும்? எதற்காக ஆக்க வேண்டும்? இங்கே அவர்கள் வளர்ந்துவருகிற கட்சியாக இருக்கும்போது, அவர்கள் கட்சியைச் சார்ந்த ஒருவரை நியமிக்காமல், என்னை ஏன் எம்.பி ஆக்க வேண்டும், அதற்கு என்ன அவசியம்? அவர்களது கட்சியினரே கேட்க மாட்டார்களா?’’

த.மா.கா சார்பில், அ.தி.மு.க தலைவர்களைத் தொடர்ந்து கேட்டுதான் இந்தப் பதவியைப் பெற்றிருக்கிறோம். நாங்கள் கேட்டாலே கொடுத்து விட வேண்டும் என்ற அவசியம் அ.தி.மு.க-வுக்கும் கிடையாது.
ஜி.கே.வாசன்

‘`த.மா.கா-வைவிட அதிக வாக்குவங்கியைக் கொண்ட தே.மு.தி.க, வெளிப்படையாகக் கேட்டும்கூடக் கிடைக்காத எம்.பி பதவி, உங்களுக்குக் கிடைத்திருக்கிறதே?’’

“தே.மு.தி.க தலைவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். சுதீஷ் என் நண்பர். ‘எங்களுக்கு எம்.பி பதவி வேண்டும்’ என்று அவர்கள் கேட்பது அவர்கள் உரிமை. அதில் எந்தத் தவறும் கிடையாது. அதேசமயம் த.மா.கா சார்பில், அ.தி.மு.க தலைவர்களைத் தொடர்ந்து கேட்டுதான் இந்தப் பதவியைப் பெற்றிருக்கிறோம். நாங்கள் கேட்டாலே கொடுத்து விட வேண்டும் என்ற அவசியம் அ.தி.மு.க-வுக்கும் கிடையாது. ஆனாலும் முறையாகத் தொடர்ந்து கேட்டோம் என்பதை மட்டும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்!’’

‘`விரைவில் த.மா.கா-வை பா.ஜ.க-வோடு இணைக்கவிருப்பதாகப் பேச்சிருக்கிறதே... உண்மையா?’’

“இப்படியொரு வடிகட்டிய பொய்யைச் சொல்வீர்கள் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இருந்தாலும் பதில் சொல்லிவிடுகிறேன். த.மா.கா-வின் வளர்ச்சியைப் பிடிக்காத சில விஷக் கிருமிகள்தான் இப்படியான செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற அவதூறுகளை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அவர்களை எச்சரிக்கிறேன். அடையாளம் கண்டு வழக்கு தொடுக்கும் சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள்.’’