Published:Updated:

`தமிழ்நாட்டில் வாக்கிங் இல்லை ஒன்லி டாக்கிங்தான்!’- மனம்திறக்கும் ஆளுநர் தமிழிசை #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர், இந்நாள் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது இருபது ஆண்டுக்கால அரசியல் பயணத்தின் நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்திலுள்ள ராஜ்பவனில், பல அடுக்கு சோதனைகளைக் கடந்து அவரைச் சந்தித்தோம்.

"ஆளுநர் ஆன பின் உங்களின் ஒரு நாள்?"

"எழுந்ததும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, பத்திரிகை படிப்பது, பின் அலுவலகம் செல்வது. கொரோனாவுக்கு முன்பு பல்வேறு வெளி நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்துகொண்டிருந்தேன். தற்போது வெளி நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில்லை. அலுவலகப் பணிகள், அதிகாரிகளோடு கூட்டம், தினசரி கோயிலுக்குச் செல்வது எனக்கு மிகவும் பிடித்த செயல். நான் வெளியில் சென்றால், எனக்காக வாகனங்களை நிறுத்திவிடுகிறார்கள்; மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதால் முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்க்கிறேன். மாலை வேளையில் இங்குள்ள அம்மன் கோயிலுக்கு தினமும் செல்வதை வழக்கமாகவைத்திருக்கிறேன்."

"தமிழகத்தில் இருக்கும்போதும் நடைப்பயிற்சி செய்தீர்களா?"

"அங்க வாக்கிங் இல்லை ஒன்லி டாக்கிங்தான். காலையில் எழுந்ததுமே எந்த விமானம், எந்த ரயில்... எனக் கட்சிப் பணிகளுக்காக ஓடிக்கொண்டே இருப்பேன். தமிழகத்தில் எனக்கு அவ்வளவாக நேரம் கிடைத்ததில்லை. ஆனால், அடிக்கடி யோகா செய்வதை வழக்கமாகவைத்திருந்தேன். ஆளுநரான பிறகு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளில் இந்த நடைப்பயிற்சியும் ஒன்று."

"நடக்கும்போது, நடந்ததைப் பற்றி நினைப்பீர்களா, நடக்கப்போகிற விஷயங்களைப் பற்றி நினைப்பீர்களா?"

"நடந்ததையும், நடக்கப்போவதையும் நடந்துகொண்டே நினைத்துக்கொள்வேன். நடக்கப்போவது இறைவன் கையில் இருக்கிறது. நடந்தது நினைவுகளாக இருக்கின்றன. எது நடந்தாலும், அது நன்மைக்காகவே நடந்தது என்று நம்புகிறேன். வாக்கிங் போகும்போது, எனது செல்போனில் சில சொற்பொழிவுகளை, நல்ல கருத்துகளைக் கேட்பேன். சில பாடல்களைக் கேட்பேன். சில நேரம் என் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டே நடப்பேன். அதெல்லாம் அந்தந்த நேரங்களைப் பொறுத்தது."

"ஆளுநர் மாளிகையைச் சுற்றிப் பார்க்க உங்களுக்கு எத்தனை நாள்கள் ஆகின?"

"இது 37 ஏக்கர் பரப்பளவுள்ளகொண்ட இடம். கிட்டத்தட்ட ஒரு மாதமானது. ஒவ்வோர் இடமாகப் போய், பொறுமையாகப் பார்த்தேன்."

"ராஜ் பவனில் உங்களுக்குப் பிடித்த இடம் எது, ஏன்?"

"மக்கள் சந்திப்பு நடக்கும் இடம்தான். அதோடு, அந்த இடத்தைச் சுற்றிலும் கடவுள் சிலைகள் இருக்கின்றன. இறைவன் என்னைச் சுற்றி இருப்பதுபோல ஓர் உணர்வு கிடைக்கும். அதனால், அந்த இடம் பிடிக்கும்."

"ஆளுநர் மாளிகையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்?"

"ஆளுநர் மாளிகை முழுவதையும் இ-ஆபிஸாக மாற்றியிருக்கிறேன். யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் கோரிக்கைகளை வைக்கலாம். இங்கிருக்கும் சாமி சிலைகள் அனைத்தும் வெள்ளை வண்ணத்திலிருந்தன. நான் வந்ததும், நம் ஊரில் இருப்பதுபோல வண்ணங்களைத் தீட்டச் சொன்னேன். இங்கிருக்கும் மயில்களுக்கும் குயில்களுக்கும் ஆங்காங்கே உணவுகளை வைக்க ஏற்பாடு செய்தேன். தோட்டத்தில் சில மூலிகைச் செடிகளை வளர்க்கிறேன். அதனால், காலைப்பொழுது மயில்களோடும் குருவிகளோடும் விடிகிறது. காக்கை மட்டும் வருவதில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை." (சிரிக்கிறார்).

"தெலங்கானா முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டீர்களா?"

"கிட்டத்தட்ட முக்கியமான பல இடங்களைப் பார்த்துவிட்டேன். கொரோனா பேரிடர் காரணமாக தற்போது எங்கும் செல்வது கிடையாது."

"தெலுங்கு மொழி கற்றுக்கொண்டுவிட்டீர்களா?"

"கற்றுக்கொண்டேயிருக்கிறேன். தெலுங்கில் அவர்கள் பேசுவதைக் கேட்டுப் புரிந்துகொண்டு பதில் சொல்ல முடிகிறது. இன்னும் சரளமாகப் பேச முடியவில்லை. விரைவில் சரளமாகவும் பேசிவிடுவேன். இவர்கள் மொழியில் பேசுவதால், இங்கிருப்பவர்களிடம் இன்னும் நெருக்கமாக முடிகிறது."

"தெலுங்கு கற்றுக்கொள்ளச் சிரமமாக இருந்ததா?"

"சிரமம்தான். ஆனால், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. ஓர் ஆளுநராக இல்லை... ஒரு மருத்துவராகச் சொல்கிறேன். நீங்கள் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள நினைத்தால் எட்டு வயதுக்கு முன்பே உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்துவிடுங்கள். அந்த வயதில், நம் மூளை அபரிதமான சக்தி கொண்டிருக்கும். அந்த நேரத்தில் எத்தனை மொழிகள் கற்றுக்கொள்ள நினைத்தாலும் நம்மால் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். நிறைய மொழிகளைக் கற்றுக்கொடுங்கள்."

"இப்போது உங்களுக்கு எவ்வளவு மொழி தெரியும்?"

"தமிழ், ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். தெலுங்கு கொஞ்சம் தெரியும். ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கிருக்கும் பணியாளர்கள் அனைவருமே ஹிந்தி பேசுகிறார்கள் அவர்களோடு பேசவும், டெல்லி செல்லும் போதும் ஹிந்தி தேவைப்படுகிறது. ஒரு மொழியைப் படிப்பதால், என் மொழியின் மதிப்பு குறைந்துவிடுவதில்லை அது என் ரத்தத்திலேயே கலந்திருக்கிறது. இன்னொரு மொழி தெரிந்துவைத்திருப்பது அவசியமானது என்று நினைக்கிறேன்."

"தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக இருந்தவர் நீங்கள். இங்கு வந்த பிறகு எதையாவது மிஸ் செய்கிறீர்களா?"

"தமிழகத்திலிருந்தவரை காலையிலிருந்து இரவு வரை பயணம், கட்சிக் கூட்டம், தொடர் சந்திப்புகள் என ஓடிக்கொண்டே இருப்பேன். இந்த அனைத்தையும் கண்டிப்பாக மிஸ் செய்கிறேன். ஆளுநர் பதவியை ஓய்வு என்று சொல்ல மாட்டேன். மிகவும் பரபரப்பாக இருந்ததிலிருந்து, தற்போது பரபரப்பு இல்லாத வாழ்கையில் இருக்கிறேன். அவ்வளவுதான்."

"நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த போது என்ன தோன்றியது?"

"அனைவருக்கும் நன்றாகவே தெரியும், நான் ஒரு சிறந்த மருத்துவர் என்பது. இருந்த போதிலும், தமிழகத்துக்கு ஏதாவது நல்லது செய்துவிட வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்தேன். கடுமையாக உழைத்தேன். என் ஆயுள்காலத்துக்குள் என் நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்துகொண்டேயிருந்தது. ஆனால், தமிழக மக்கள் கொஞ்சம் நம்மை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமோ என்ற ஆதங்கம் இன்னும் இருக்கிறது. தமிழக மக்கள் நம்மைப் புரிந்துகொள்ளவில்லையோ அல்லது என்னால் அவர்களுக்குப் புரியவைத்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லையோ என்ற வருத்தம் இன்றுவரை எனக்குள் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வந்தபோது, இத்தனை பேர் மட்டும்தான் நம்மை நம்புகிறார்களா... இத்தனை நல்ல பின்புலம் இருந்தும், இவ்வளவு நல்ல தன்மை இருந்தும் ஏன் மக்கள் நம்மை நம்பவில்லை என்ற எண்ணம் வரும்."

தமிழிசை  செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

"தமிழக மக்கள் மீது கோபம் இருக்கிறதா?"

"அவர்கள் மேல் எந்தக் கோபமும் இல்லை. தெலங்கானாவிலுள்ள மக்கள் 'எங்கள் ஆளுநரை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். ஏன் இவரைத் தமிழக மக்கள் அடையாளம் காணவில்லை' என்று எழுதுகிறார்கள். இங்கிருக்கும் தொலைக்காட்சியில் தமிழிசை என்பதை 'ஜன இசை' என்று போட்டார்கள். இவையெல்லாம் நானே எதிர்பார்க்காத ஒன்று."

"நிச்சயமாக உங்களுக்கு நேரம் இருக்காது. கடுமையான பணிச்சூழல்களுக்கு இடையே, கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?"

"நிச்சயம் புத்தங்கள்தான். புத்தங்கள் மூலம் என்னை நானே புதுப்பித்துக்கொள்கிறேன். கிடைக்கும் சிறிது நேரமும் நான் புத்தகங்களைப் படிப்பதில்தான் நேரத்தைச் செலவிடுகிறேன். எல்லாரிடமும் நான் சொல்வது இதுதான் 'நன்றாகப் படியுங்கள். படிக்கப் படிக்க வாழ்க்கை உங்களுக்குப் பிடித்துப்போகும். மனதுக்குக் கஷ்டமான நேரங்களிலும் முதலில் புத்தகங்களைத்தான் படிப்பேன். படிப்பே சிறந்தது."

"அப்பா ஒரு கட்சியிலிருக்கும்போதும், மாற்றுக் கட்சியில் சேர என்ன காரணம்?"

"மாற்றத்துக்காகவே ஒரு மாற்றுப் பாதையைத் தேர்வு செய்தேன் என்று சொல்லலாம். உண்மையில் மனதில் ஆழமான காயம் இருக்கிறது. ஒரு வலி இருக்கிறது. இரண்டு விஷயங்கள்... அப்பா பெரும் திறமைசாலி, நேர்மையாளர். அவரைப்போல் உழைக்கும் இன்னொருவரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. ஆனால்,அவர் சார்ந்த இயக்கம், அவரைச் சரியாகப் பயன்படுத்தியதா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி. மற்றொன்று, நான் கனடாவில் உயர்கல்வி படித்து முடித்து தமிழகம் திரும்புகிறேன். அப்போது தஞ்சையில் ஒரு பெண்ணை பிரசவத்துக்கு மாட்டுவண்டியில் அழைத்துவந்ததைப் பார்த்தேன். இதுவே கனடா நாடு என்றால், ஹெலிகாப்டரில் அழைத்து வருவார்கள். நாடு சுதந்திரம் அடைந்து இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் நம் நாட்டில் அப்படியான ஒரு மருத்துவ வசதி கிடைக்கவில்லையே.., இதற்கு யார் காரணம் என்று யோசித்தேன். ஒரு மாற்றம் வேண்டும் என்று அப்போது வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பா.ஜ.க-வில் என்னை இணைத்துக்கொண்டேன்."

"தொண்டர் டு ஆளுநர்... அப்பா என்ன சொன்னார்?"

"அப்பா என்னிடம் நீண்டநாள்களாகப் பேசவே இல்லை. நான் அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்த பெண். அவர் என்மேல் மிகுந்த கோபம்கொண்டிருந்தார். அந்தச் சூழலில் என் அம்மாவும் என் கணவரும் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார்கள். பின்னர், அப்பாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதன் பிறகு கொஞ்சம் இயல்பாகப் பேச ஆரம்பித்தார். ஆனால், பழையபடி பேசியது இல்லை. அதோடு, கட்சி குறித்து நாங்கள் இருவருமே என்றுமே பேசியது இல்லை. அவர் உண்மையான காங்கிரஸ்காரராக இருந்தார். நான் உண்மையான பா.ஜ.க தொண்டராக இருந்தேன். நான் பா.ஜ.க மாநிலத் தலைவரானபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஒரு மாநிலத்தில் அப்பா ஒரு தேசியக் கட்சிக்குத் தலைவராகவும், மகள் மற்றொரு தேசிய கட்சிக்குத் தலைவராகவும் இருந்தது, இதுவே இந்தியாவில் முதன்முறை. ஆளுநர் ஆனதும், அவர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். நேரில் வந்து ஆசீர்வாதம் செய்தார்."

``அப்பா பேச்சைக் கேட்கலாமா கூடாதா?''

"அப்பா பேச்சைக் கேட்காததால்தான் இன்று ஆளுநராக இருக்கிறேன்" என்று பலமாகச் சிரித்தவர். "நிச்சயமாக அப்பா பேச்சைக் கேட்க வேண்டும். அப்பா பேச்சைக் கேட்டு வளர்ந்து, நானே சிந்திக்கும் நிலை வந்ததும், அப்பா பேச்சைக் கேட்காததால் இன்று இந்த நிலையில் இருக்கிறேன். வாழ்க்கை நெறிமுறைகள் அனைத்தையும் ஒரு மகளாக அப்பாவிடமிருந்து கேட்டு வளர்ந்தேன். என்னால், கேட்காமலேயே ஒரு முடிவெடுக்கும் துணிச்சல் ஒரு பருவத்தில் வந்தது. அதன் பிறகு சுயமாக முடிவுகளை எடுக்கத் தொடங்கினேன். ஒரு வயது வரைக்கும் பெற்றோர்களின் பேச்சைக் கேட்டுத்தான் வளர வேண்டும். அப்போதுதான் உங்களின் பேச்சையும் ஒருகட்டத்தில் அவர்கள் கேட்பார்கள்."

"உங்களுக்குப் பிடித்த இசை எது?"

"தமிழிசைதான்...’’ (இடைவிடாமல் பலமாகச் சிரித்தார்.) ``சங்கீதம் என்பது நமது வாழ்க்கையோடு ஒன்றியிருக்க வேண்டும். பக்திப் பாடல்கள் மிகவும் பிடிக்கும், கந்தசஷ்டி கவசம் மிகவும் பிடிக்கும், அபிராமி அந்தாதி பிடிக்கும். இவையனைத்தும் நமக்கான வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்கின்றன. திரைப்படப் பாடல்கள் விரும்பிக் கேட்பதுண்டு, அவற்றிலுள்ள தத்துவங்கள் மிகவும் பிடிக்கும். கண்ணதாசனின் பாடல்கள். நா.முத்துக்குமாரின் பாடல்கள் பிடிக்கும். என் கல்லூரி நாள்களிலிருந்து அடிக்கடி கேட்கும் பாடல் 'ஆடப்பிறந்தவளே ஆடிவா, புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா" இந்தப் பாடல் எனக்கு எப்போதுமே ஒரு உத்வேகத்தைத் தரும். எனக்காகவே இந்தப் பாடல் எழுதியதுபோல் இருக்கும்."

"திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் உண்டா?"

"திரைத்துறையினர் என்னை மன்னிக்க வேண்டும். அரசியல் போன்றே பெரிய துறை திரைத்துறை. ஆனால், எனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கம் கிடையாது. திரைப்படங்கள் மீது பெரிதாக ஈர்ப்பு இருந்ததில்லை. ஒருவேளை நேரம் இல்லாதால், அதில் கவனம் செல்லவில்லை என்று நினைக்கிறேன். தெலங்கானாவுக்கு வந்த பிறகு சிரஞ்சீவி நேரில் வந்து 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தையும் தெலுங்கு தேசத்தையும் இணைக்கும் ஒரு மிகப்பெரிய சுதந்திரப் போராட்டம் குறித்த படம் இது. இப்படி ஒரு சில படங்கள் மட்டும் பார்த்திருக்கிறேன்."

தமிழிசை  செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

"விமர்சனங்களில், தனிமனிதத் தாக்குதல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"நான் மீம்ஸ்களால் அதிகம் விமர்சனம் செய்யப்பட்ட ஒரு நபர். எனது முடியைவைத்து, நிறத்தைவைத்து, உருவத்தைவைத்து, உயரத்தைவைத்து என என்னைப் பல்வேறு முறையில், விதவிதமாக, தனிப்பட்ட முறையில் தாக்கியிருக்கிறார்கள். என்னை நேரடியாக விமர்சிக்கத் திராணியில்லாதவர்கள்தான் இப்படி மறைமுகமாக விமர்சிக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்தால் என் மனநிலையை, என் தன்னம்பிக்கையைக் குறைக்கலாம் என்று நினைத்துச் செய்திருப்பார்கள். நான் நேர்த்தியாக உடை உடுத்துவதில் மிகுந்த ஆர்வம்கொண்டவள். உண்மையைச் சொல்லப்போனால் என் கல்லூரி நாள்களில் நான் என்ன உடை உடுத்துகிறேன் என்பதைப் பார்க்க ஒரு ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது. அரசியலுக்கு வந்த பிறகு அதில் பெரிய கவனம் செலுத்தவில்லை. நான் அடிக்கடி சொல்வேன், 'எனக்குச் சுருட்டை முடிதான். ஆனால், நான் யார் பணத்தையும் சுருட்டியது இல்லை. நான் கறுப்புதான். என்னிடம் கறுப்புப் பணம் கிடையாது. நான் குள்ளம்தான். தன்னம்பிக்கையிலும், படிப்பிலும், ஆற்றலிலும், உழைப்பிலும், மக்களுக்கு உதவுவதிலும் நான் உயர்ந்தவள்' என்று."

“அரசியலுக்கு வரும் பெண்கள் பின்வாங்கவே கூடாது!”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"சரி, விமர்சனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"விமர்சனங்கள்தான் ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றும். அந்த விமர்சனம் வருடிக்கொடுத்து ஒருவரை முன்னேற்ற வேண்டுமே தவிர, காயப்படுத்தக் கூடாது. யாராக இருந்தாலும் மோசமான விமர்சனங்களை வைக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்."

``தலைவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது எவ்வளவு அவசியம்?''

"மிக மிக அவசியமானது. அனைத்துக் கேள்விகளையும் எதிர்கொள்வதுதான் சிறந்த தலைவருக்கான அழகு. தலைவர்களாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் திறமை இருக்க வேண்டும். அது தலைமைப் பண்பு என்று நான் நினைக்கிறேன்."

"சில தலைவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுக்கிறார்களே..?"

"எல்லா தலைவர்களுக்கும் பத்திரிகையாளர்களைக் கையாளும் மனநிலையில், சமநிலையில் இருப்பார்களா என்று தெரியவில்லை. அதனால், அவர்கள் தவிர்க்கலாம். பத்திரிகைகளின் மூலமாகத்தான் தலைவர்கள் மக்களைச் சென்றடைகிறார்கள். பத்திரிகையாளர்களை நிச்சயம் சந்திக்க வேண்டும் என்பது என் அழுத்தமான கருத்து. தனிப்பட்ட கருத்து."

``தமிழக அரசு கொரோனாவை எப்படிக் கையாண்டது?''

``மிகச் சிறப்பாகக் கையாண்டது என்றுதான் சொல்ல வேண்டும். நான் அடிக்கடி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோடு சில ஆலோசனைகளில் ஈடுபடுவதும் உண்டு. மத்திய அரசும் கொரோனாவை முழு முயற்சியோடு சரியாகக் கையாண்டார்கள். அதனால்தான் எண்ணிக்கை இந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது."

``கொரோனா சிகிச்சைக்கு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், அக்குபஞ்சர், ஹோமியோபதி என எல்லாமே சிறந்தது என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது பாரம்பர்ய மருத்துவத்தை நாம் இவ்வளவு நாள்களாக ஏன் கவனிக்காமல் விட்டுவிட்டோம்?''

"கொரோனாவுக்கு மட்டுமல்ல. எல்லா நோய்களுக்கும் ஓர் ஒருங்கிணைந்த மருத்துவம் நல்லது. ஒருசில பிரச்னைகளை யோகா மூலமே சரிசெய்யலாம். சில பிரச்னைகளை இயற்கை மருத்துவ முறையில் சரிசெய்யலாம். சில பிரச்னைகளை இயற்கை மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவமும் சேர்த்தால் சரிசெய்ய முடியும். ஒருங்கிணைந்த மருத்துவ முறை வர வேண்டும் என்று ஒரு மருத்துவராக நான் விரும்புகிறேன். அதேபோல் முன்பிருந்த குடும்ப மருத்துவர் முறை மீண்டும் வர வேண்டும்."

``விகடனுக்கு உங்களுக்குமான தொடர்பு பற்றிக் கூறுங்களேன்?''

``விகடனுக்கு எனக்குமான தொடர்பு மிக முக்கியமானது. எனது முதல் பேட்டியே விகடனில்தான் வெளிவந்தது. எனது கணவரும் `துப்பரவுத் தொழிற்சாலை' தொடர் எழுதியிருக்கிறார். அவள் விகடன் மற்றும் டாக்டர் விகடனில் நான் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். மக்களோடு ஒரு நெருக்கமான இணைப்பை விகடன் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. விகடன் நடத்திய பல விருது விழாக்களுக்கும் வந்திருக்கிறேன்.''

``மருத்துவர் தமிழிசை, பா.ஜ.க தலைவர் தமிழிசை, ஆளுநர் தமிழிசை இதில் உங்கள் மனசுக்கு நெருக்கமானது எது?''

``சகோதரி தமிழிசை, மகள் தமிழிசைதான் நெருக்கமானது. படிப்பைவைத்தும், பதவியைவைத்தும் நான் மக்களிடம் நெருக்கமாக விரும்பவில்லை. ஒரு சாமானியப் பெண்ணாக, அனைவரும் எளிமையாக அணுகக்கூடிய நபராக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். பதவிகள் நிரந்தரமல்ல."

``வசந்தகுமாரின் இழப்பு மற்றும் அவர்களுடனான உங்களின் நினைவலைகள்..."

``என் வாழ்க்கையில் மிகவும் வேதனைப்பட்டது என் சித்தப்பாவின் இறப்பில்தான். சில நாள்களுக்கு என்னால் உணவுகூட அருந்த முடியவில்லை. பல வருடங்கள் நாங்கள் ஒன்றாக வளந்திருக்கிறோம். கடுமையான உழைப்பாளி, சுறுசுறுப்பான மனிதர். என் ஆதங்கமெல்லாம் அவர் உழைத்துக் கட்டிவைத்த அந்த சாம்ராஜ்யத்தை இன்னும் சில காலமிருந்து அனுபவித்திருக்க வேண்டும் என்பதுதான். ஆளுநரான பிறகு பேசும்போது `நீ சொன்ன மாதிரியே சாதிச்சுக் காட்டிட்ட' என்றார். அவர் இறப்பு மறக்க முடியாதது."

``தமிழக மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?''

``அனைவரும் கவனமாக இருங்கள். முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். உங்கள் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உறவுகளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு