Published:Updated:

“நானும் சொல்கிறேன், தாமரை மலரும்!”

எல்.முருகன்
பிரீமியம் ஸ்டோரி
எல்.முருகன்

அவர்கள் என்ன நினைத்து என்னைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது.

“நானும் சொல்கிறேன், தாமரை மலரும்!”

அவர்கள் என்ன நினைத்து என்னைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது.

Published:Updated:
எல்.முருகன்
பிரீமியம் ஸ்டோரி
எல்.முருகன்
தமிழிசை சௌந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநர் ஆனபிறகு பா.ஜ.க-வினர் மட்டுமல்லாது, தமிழக அரசியலைக் கவனிக்கும் பலரின் கேள்வி, ‘அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யார்?’ என்பதுதான்.

அவரா, இவரா என்ற யூகங்களுக்கு மத்தியில் யாரும் எதிர்பாராத விதமாகத் தமிழக பா.ஜ.க தலைவர் ஆகியிருக்கிறார் எல்.முருகன். வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு, கேள்விகளை முன்வைத்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனின் குடும்பப் பின்னணி என்ன?’’

‘‘நாமக்கல் அருகில், கோனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமான்ய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். என் பாட்டனார் செருப்பு தைக்கிற வேலை செய்து வந்தார். தந்தைக்கு விவசாய வேலை. இப்போதும் அம்மா, அப்பா கிராமத்தில் தான் இருக்கிறார்கள். உடன்பிறந்தவர் ஒரேயொரு தம்பி; விபத்தொன்றில் தவறிவிட்டார்.

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் உதவி பேராசிரியராகப் பணிபுரியும் என் மனைவி, இரண்டு மகன்கள் என எளிய குடும்பமாக சென்னையில் வசித்துவருகிறேன்!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘அரசியல் பணிகளில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?’’

‘‘பரமத்தியில் மேல்நிலைக்கல்வி படிக்கும்போது, எங்கள் ஊருக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கப் பணிகளுக்காகப் பிரசாரகர்கள் வந்திருந்தார்கள். கிராமத்தில், பட்டியலின மக்களான நாங்கள் ஊரை விட்டுத் தள்ளி, சேரியில்தான் வசித்துவந்தோம். நாங்கள் யார் என்று தெரிந்திருந்தும்கூட, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் எந்தவித வேற்றுமையும் பாராமல், எங்களுடனே சேரிப்பகுதியில் தங்கியிருந்து ஒன்றாக உணவருந்தி, செய்துவந்த இயக்கப் பணிகள் என்னை ஈர்த்தன.

எல்.முருகன்
எல்.முருகன்

1996-ல் சென்னை சட்டக்கல்லூரியில் படித்தபோது, அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அதன்பின்னர், சுவாமி தயானந்த சரஸ்வதி உருவாக்கியிருந்த தர்ம ரக்ஷன சமிதியில் இணைந்து கிராமந்தோறும் மதமாற்றங்களைத் தடுக்கும் பணிகளை மேற்கொண்டேன்.

2006-ல் தமிழக பா.ஜ.க-வின் எஸ்.சி - எஸ்.டி அணியின் மாநிலத் துணைத்தலைவர் பொறுப்பேற்றேன். பின்னர் தலைவர், தேசியச் செயலாளர் என அடுத்தடுத்த வாய்ப்புகளைக் கட்சித் தலைமை அளித்தது. மத்தியில் பா.ஜ.க அரசு வந்தபிறகு, சென்னை உயர் நீதிமன்ற மத்திய அரசு வழக்கறிஞர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத்தலைவர் எனப் பதவியுயர்வுகள் கிடைத்தன. இப்போது, தமிழக பா.ஜ.க-வின் தலைவராகவும் கட்சி என்னை அறிவித்திருக்கிறது. இதுதான் என் அரசியல் பயணம்!’’

‘‘மாநிலத் தலைவருக்கான தேர்வுப்பட்டியலில்கூடப் பெயர் இடம்பெற்றிராத எல்.முருகன், திடீரெனத் தலைவராக அறிவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?’’

‘‘எங்கள் கட்சி எப்போதுமே கட்டுப்பாடான கட்சி. யாருக்கு எப்போது பதவி கொடுக்கலாம் என்பதைக் கட்சியின் மேலிடத் தலைமைதான் முடிவுசெய்யும். என்னைத் தலைவராக அறிவிப்பதற்கு முந்தைய நாள்தான், ‘உங்களைத் தமிழ் மாநிலத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்; எஸ்.சி - எஸ்.டி ஆணையப் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள்’ என்று தலைமையிலிருந்து கூப்பிட்டுச் சொன்னார்கள்.

“நானும் சொல்கிறேன், தாமரை மலரும்!”

எல்லாவிதங்களிலும் ஆலோசித்துதான் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். அவையெல்லாம் கட்சியின் தலைமைக்கு மட்டுமே தெரிந்த விஷயம். தமிழகத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் 21 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரையே தலைவராக்கலாம் எனக் கட்சி முடிவு செய்திருக்கலாம்!’’

‘‘படித்த, நல்ல அனுபவமுள்ள உங்களையும்கூட, ‘பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்குத் தலைவர் பதவி அளித்திருக்கிறோம்’ என்றே அடையாளப்படுத்துகிறார்கள். அப்படியென்றால், சாதி அடையாளம்தான் உங்களுக்கான தகுதியா?’’

‘‘இல்லையில்லை... இது ஒரு கூடுதல் அனுகூலம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். நான் ஏ.பி.வி.பி-யில் இருந்திருக்கிறேன். 42 வயதாகிறது. இயக்கப் பணிகளுக்காக நிறைய சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். கட்சிக்காக இன்னும் வேகமாக வேலை செய்யக்கூடிய தகுதி இருக்கிறது என்று நினைத்து மேல்மட்டத்தினர் எனக்கு இந்தப் பதவியை அளித்திருக்கலாம். அவர்கள் என்ன நினைத்து என்னைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது.

பொதுவாக பா.ஜ.க என்றாலே, ‘அது உயர் சாதியினருக்கான கட்சி’ என்று வெளிப் படையாகப் பலரும் பேசும் சூழல், 90-களில் இருந்தது. ஆனால், உண்மை நிலை அதுவல்ல. அதனால்தான் காலமாற்றத்தில் அந்தக் கருத்தெல்லாம் காலாவதியாகிப்போனது. அடித்தட்டு வரையிலும் கட்சியைக் கொண்டுபோக வேண்டும்; பட்டியலின மக்களைப் பெரும்பான்மையாகக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்!’’

‘‘ ‘கட்சியின் மீதான விமர்சனங்களைக் களைய மட்டுமே பிற்படுத்தப்பட்டோரை, தாழ்த்தப்பட்டோரைப் பயன்படுத்திக்கொள்கிறது பா.ஜ.க’ என்ற விமர்சனம் இருக்கிறதே?’’

‘‘அவையெல்லாம் தவறான விமர்சனங்கள். அந்த மாதிரியான நிலைமைகள் ஒருநாளும் எங்கள் கட்சியில் இருந்ததில்லை.’’

‘‘ஆனால் ‘கட்சிக்குள் சாதிப் பாகுபாடு பார்க்கப் படுகிறது’ என்று, மறைந்த முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் கிருபாநிதி வருத்தப்பட்டிருக்கிறாரே?’’

‘‘அப்படி எந்தவிதப் பாகுபாட்டையும் நான் உணர்ந்ததில்லை. ஏனெனில், 96-லிருந்தே நான் கட்சியில் இருந்துவருகிறேன். ஆர்.எஸ்.எஸ்-ஸில் ஆரம்பித்து எங்களுடைய எந்த அமைப்பிலும் கட்சியிலும் சாதியை வைத்துப் பாகுபாடு பார்ப்பதென்பதே கிடையாது. இப்போதும்கூட, கட்சி அலுவலகத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம்; ஒன்றாகத் தூங்குகிறோம்.’’

‘‘திராவிடக் கட்சிகள் வலுவாக இருக்கும் தமிழ்நாட்டில், தாமரையை எப்படி மலரவைக்கப்போகிறீர்கள்?’’

‘‘ஏற்கெனவே தமிழ்நாட்டிலிருந்து லெட்சுமணன், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் என பா.ஜ.க-விலிருந்து எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் ஜெயித்திருக்கிறார்கள். எங்களோடு கூட்டணியில் உள்ள தலைவர்களும் ஜெயித்திருக்கிறார்கள். கடந்த உள்ளாட்சித் தேர்தலில்கூட, எல்லா மாவட்டத்திலும் கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் என அதிக எண்ணிக்கையில் ஜெயித்திருக்கிறோம். வருகிற தேர்தல்களில், இன்னும் அதிக எண்ணிக்கையில் இடங்களைப் பிடிப்பதற்கான கட்டமைப்புப் பணிகளைத்தான் இப்போது நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். எனவே, நிச்சயம் தமிழ்நாட்டில் தாமரை மலரும்!’’

‘‘ ‘தமிழ்நாட்டு மக்கள், மதம் சார்ந்து வாக்களிப்பதில்லை’ என்ற நிலைதானே கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது?’’

‘‘தமிழ்நாட்டில் இப்போது சூழல் மாறியிருக்கிறது. நாங்கள் எப்போதுமே சாதி, மதம் பாராமல், அனைவரையும் அரவணைத்துத்தான் போய்க்கொண்டிருக் கிறோம். ஆனால், சிலர் திட்டமிட்டு சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் நடுத்தர மக்கள் மற்றும் நடுநிலையான இந்துக்களுக்குக் கோபத்தை உருவாக்கிவிடுகிறது.

எல்.முருகன்
எல்.முருகன்

‘சி.ஏ.ஏ-வினால் என்ன பாதிப்பு...’ என்று கேட்டால், யாருக்குமே சொல்லத் தெரியவில்லை. ஏனெனில், இந்தியாவிலுள்ள யாருக்கும் இந்தச் சட்டத்திருத்தத்தால் எந்த பாதிப்பும் இல்லை. சி.ஏ.ஏ-வினால் பலனடையப் போகிறவர்களில் 68 சதவிகிதத்தினர் பட்டியிலின மக்கள்தான்.’’

``உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ரஞ்சன் கோகோய்க்கு பா.ஜ.க அரசு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கியிருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?’’

‘‘ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெற்றவர்தானே... ஏற்கெனவே மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசு, ஓய்வுபெற்ற மூத்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்தபோது யாரும் அதுகுறித்து விமர்சிக்கவில்லையே ஏன்?’’

‘‘ரஜினிகாந்த்தின் ஆன்மிக அரசியலுக்கும் பா.ஜ.க.வின் அரசியலுக்கும் என்ன வேறுபாடு?’’

‘‘தேசியத்துக்கும் தெய்விகத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுதான் பா.ஜ.க-வின் நிலைப்பாடு. பசும்பொன் முத்துராமலிங்கனார் சொன்னதுபோல், தேசியமும் தெய்விகமும் எங்களுக்கு இரு கண்கள். அதாவது, தெய்விகம் கலந்த தேசம்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism