பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

"ஜெயலலிதா இருந்தால் இப்படி நடக்காது!”

செல்லூர் ராஜு
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லூர் ராஜு

‘`பெரியார், அண்ணாவைச் சிறு வயதில் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை.

செல்லூர் ராஜு என்றால் தெர்மாகோல், சயின்டிஸ்ட், மதுரையை சிட்னியாய் மாற்றும் குறிக்கோள் என்று கேலி, கிண்டல் மீம்ஸ் நாயகனாக இருந்தார். ஆனால் ரஜினி - பெரியார் சர்ச்சையில் செல்லூர் ராஜு பேசியதைப் பார்த்ததும், ‘அட செல்லூர் ராஜுவா இப்படி?’ என்று பலருக்கும் ஆச்சர்யம். அதே ஆச்சர்யம்தான் எனக்கும். அந்த ஆச்சர்யம் கொஞ்சமும் குறையாமல் அவரைச் சந்தித்துப் பேசினேன்.

‘`சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘நாங்கள் திராவிட இயக்கத்திலிருந்து வந்தவர்கள்தான், பெரியாரைப் பற்றித் தெரியாமல் ரஜினி பேசியதால் பெரியார் பெயர் மீண்டும் டிரெண்டாகியுள்ளது என்று பேசினீர்கள், பெரியார் மீது அவ்வளவு ஈடுபாடா?’’

“என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், நான் உட்பட பலர் அரசியலில் மேலே வரவும், இன்று கல்வியிலும், அதிகாரமிக்க பதவிகளிலும் சாதாரண மக்கள் உட்காரக் காரணமே பெரியார்தானே! பெரியார் இல்லையென்றால் தமிழகத்தில் சமூக மாற்றமே வந்திருக்காது.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

பெரியாரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட அறிஞர் அண்ணா, அண்ணாவைத் தலைவராக ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், எம்.ஜி,ஆர் வழியில் வந்த ஜெயலலிதா, அவர்கள் வழியில் வந்த நாங்கள் எப்படி பெரியாரை மறக்க முடியும்? அப்படிப்பட்டவரின் முழு வரலாறும் தெரியாமல் யார் பேசினாலும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.’’

‘`திராவிட இயக்கச் சிந்தனை, பெரியார் கொள்கைகள் பற்றிச் சிறு வயதிலேயே தெரியுமா?’’

‘`பெரியார், அண்ணாவைச் சிறு வயதில் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால், பள்ளியில் படிக்கும்போது அவர்களுடைய கருத்துகளைப் படித்துள்ளேன். எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து ரசிகனாக மாறி திராவிட இயக்கச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டேன். எம்.ஜி.ஆர் தன் படங்களில் பிரதிபலித்தது எல்லாம் பெரியார் மற்றும் அண்ணாவின் கொள்கைகளைத்தான். ஆண்டான் அடிமை பிரச்னை, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, சாதி வேறுபாட்டை உடைப்பது என்று எம்.ஜி.ஆர், பெரியார் கொள்கைகளை மிகப்பெரிய ஊடகமான சினிமா மூலம் மக்களிடம் கொண்டு சென்றார். அதைப் பார்த்துப் பார்த்து நாங்கள் வளர்ந்தோம்.’’

‘`பெரியார், பெரும்பாலான மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர் என்று விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?’’

‘`அவர் கடவுள் நம்பிக்கையை ஏன் எதிர்த்தார் என்று பார்க்கவேண்டும். கடவுளின் பெயரால் ஏமாற்றுதல், மூட நம்பிக்கையை வளர்த்தல், சாதிப்பாகுபாடு பார்த்தல், அனைவருக்கும் ஆலயம் செல்லும் உரிமையை மறுத்தல் போன்ற கொடுமைகளைக் களையவே அவர் கடவுள் மறுப்பைக் கையில் எடுத்தார். ஆனால், அவர் கடவுள் மறுப்பாளர் என்ற ஒன்றை மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவரைப்பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. பெண்ணுரிமை, சமத்துவம், அனைவருக்கும் கல்வி என்று பல கொள்கைகளை வகுத்தவர் அவர்.’’

‘`பெரியார் இல்லையென்றால் இந்த மாற்றம் வந்திருக்காதா என்ன?’’

‘`நிச்சயம் வந்திருக்காது. பெரியார் வந்ததால்தான் அனைத்தும் மாறியது. இவர்கள்தான் படிக்க வேண்டும், இவர்கள்தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும், இவர்கள்தான் அதிகாரிகளாக இருக்க வேண்டும், இவர்கள்தான் அரசியலில் இருக்க வேண்டும் என்ற நிலை மாறியதற்குக் காரணம் பெரியார்தான். அவர் சமூக மாற்றத்தை உருவாக்கியவர்.’’

‘`அ.தி.மு.க, திராவிடக் கொள்கைகளிலிருந்து விலகி விட்டது என்று தி.மு.க உட்பட பலரும் அ.தி.மு.க-வை விமர்சிக்கிறார்களே?’’

‘`இது முற்றிலும் தவறானது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் பெரியார் கூறிய பலவற்றைச் சட்டமாக்கினார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார். தெருக்களில் இருந்த சாதிப்பெயர்களை நீக்கினார். பெரியாரின் நூற்றாண்டு விழாவை மாவட்டம் தோறும் நடத்தி, பல இடங்களுக்கு அவர் பெயரைச் சூட்டினார். அதேபோல் ஜெயலலிதாவும் பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகளை ஏற்றுக்கொண்டு பெண்களுக்கான பல திட்டங்களைக் கொண்டு வந்தார். பெரியாரின் சமூகநீதி அடிப்படையில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்கியவர். அவர் திராவிடத் தாயாக விளங்கியவர். அதனால்தான் அவருக்கு ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை ஆசிரியர் வீரமணி வழங்கினார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

தி.மு.க, பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்தபோது சமரசம் பண்ணிக் கொண்டவர்கள் தான். நாங்கள் பா.ஜ.க-வுடன் தமிழக நலனுக்காகக் கூட்டணி வைத்திருந்தாலும் எக்காலத்திலும் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததில்லை. சில திட்டங்களை ஆதரிக்கிறோம், ஆனால் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்க்கிறோம்.’’

‘`பெரியார் பற்றி ரஜினி பேசியதை உங்களைப் போன்றவர்கள் எதிர்த்தபோது, அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் ஆகியோர் ஆதரித்துப் பேசுகிறார்களே?’’

‘`முதலில் பெரியாரைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதன்பிறகு பேச வேண்டும். கட்சியின் கருத்து என்னவென்று பார்க்க வேண்டும். ஜெயலலிதா அம்மா இப்போது இருந்தால் இதுபோன்று நடக்காது. அது அவர்களின் சொந்தக் கருத்துதான்.’’

‘`உங்கள் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வும் பெரியாரின்மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறதே?’’

‘`அதெல்லாம் தமிழகத்தில் எடுபடாது. சும்மா பேசிட்டுப் போக வேண்டியதுதான். பெரியாரின் கொள்கைகள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சேர்த்துதான். வீட்டுக்குள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள பெண்கள் இன்று சுதந்திரமாக வெளியே வரவும், வேலை மற்றும் அரசியலுக்கு வரவும் காரணம் பெரியார்தான். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாடுபட்டவர் பெரியார். இன்று தமிழகத்தில் கோடிக்கணக்கான சுய உதவிக்குழுக்களில் பெண்கள் செயல்பட ஜெயலலிதா காரணம். அதற்குப் பெரியார் காரணம்.’’

‘`பெரியாரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?’’

``வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவர் இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லை. அரசியலில் ஈடுபட்டிருந்தால் எப்போதோ பெரிய பதவிக்கு வந்திருப்பார். ஆனால், சமூக சீர்திருத்தத்தில்தான் தீவிரமாக இருந்தார். 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சமூகத்துக்காக உழைத்தார். தான் பேசுவதையெல்லாம் அப்படியே நம்பிவிட வேண்டாம், எதிர்க்கேள்வி கேளுங்கள் என்று கூறியவர், அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.’’

‘`தஞ்சைப் பெரிய கோயிலில் பெரும் சட்டப் போராட்டத்துக்குப்பின் தமிழிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்று அறநிலையத்துறை கூறியுள்ளதே?’’

‘`இதற்கும் காரணம் பெரியார்தான். அண்ணன் எடப்பாடி பழனிசாமி பெரியார்மீது மரியாதை கொண்டவர். அதனால்தான் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வந்தவுடன் அதற்கு நீதிமன்றத்தில் உறுதி அளித்தார். இப்போது மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், இந்த அரசே பெரியார் வழியில் செல்லும் அரசுதான்.’’