கட்டுரைகள்
Published:Updated:

“கோமியம் பற்றிப் பேசுவதால் அவப்பெயர்!”

தமிழிசை சௌந்தர்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழிசை சௌந்தர்ராஜன்

“அப்படிச் சொல்லிவிட முடியாது. பா.ஜ.க-வில் இருந்த காரணத்தால்தான் தற்போது நான் கவர்னராக இருக்கிறேன்.”

பா.ஜ.க-வின் தலைவராக இருக்கும்போது அடுக்குமொழி வசனங்களால் அதிரடி கிளப்பிவந்த தமிழிசை சௌந்தர்ராஜன், தெலங்கானாவின் ஆளுநர் ஆன பிறகு கவிஞர், பாடகர், நடனக்கலைஞர் எனப் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்திவருகிறார். கொரோனாத் தடுப்புப் பணிகளில் பிஸியாக இருந்தவரிடம் ஓர் இளைப்பாறலாக ஜாலியான சில கேள்விகளை முன்வைத்தோம்.

``சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் நடனமாடும் ஒரு வீடியோ வைரலானது, தற்போது நீங்கள் பாடிய கொரோனாப் பாடல் வைரலாகியிருக்கிறது... தமிழகத்தில் இருக்கும்போது ஏன் இதுபோன்ற திறமைகளை வெளிக்காட்டவில்லை?’’

‘`தமிழ்நாட்டில் இருக்கும்போதும் கட்சிப்பணிகளில் நான் வெறியோடு அலைந்தேன். என் தலையைக்கூட பலர் கிண்டல் செய்வார்கள். அந்த அளவுக்கு, என்னைக்கூட சரியாகக் கவனித்துக்கொள்ளாமல் கட்சிப்பணி ஆற்றிவந்தேன். அதனால்தான், இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால், நான் படிக்கும் காலத்தில் இருந்தே பன்முகத் திறமையாளர்தான். பேச்சு, கவிதை மட்டுமல்ல, ஓவியம்கூட வரைவேன். தற்போது அதை வெளிப்படுத்துவதற்கான காலம் எனக்குக் கிடைத்திருக்கிறது.’’

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்

‘` `தனியாக இல்லையென்றால் தவிக்க வைக்கும் கொரோனா’ நீங்களே எழுதிய பாடலா?’’

‘`கண்டிப்பாக மற்ற அரசியல்வாதிகளின் பிள்ளைகளைப் போல மற்றவர் எழுதிக்கொடுத்து அதைப் படித்துப் பெயர் வாங்குபவள் அல்லள் தமிழிசை. எனக்கு இயல்பாகவே கவிதை, பாடல் எழுதும் திறமை உண்டு. இந்தக் கவிதை வெறும் பத்து நிமிடங்களில் நான் எழுதியது. பல கவிதைகள் எழுதித் தயாராக வைத்திருக்கிறேன். விரைவில் என்னுடைய கவிதைத் தொகுப்பை எதிர்பார்க்கலாம்.’’

``ஏதாவது ஒரு கவிதை எங்களுக்காக?’’

‘` `தலைவர்கள் உயிரோடு இருக்கும்போது வழிகாட்டினார்கள் இறந்தபிறகும் சிலையாக நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.’

பல இடங்களுக்குச் செல்வதற்குத் தலைவர் களின் சிலையைத்தான் ஒரு லேண்ட்மார்க்காகப் பயன்படுத்திவருகிறோம். அதுகுறித்து எனக்குத் தோன்றிய கவிதைதான் இது.”

‘` `நாட்டின் பிரதமரைப் பின்பற்றினால் நாட்டை விட்டே ஓடும் கொரோனா’ என நீங்கள் சொன்னது அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே?’’

‘`பிரதமரைப் பின்பற்றி என்றால், சமூகத்துக்கு அவர் தற்போது சொல்லும் விஷயங்களைத்தானே தவிர, அவரின் அரசியலையோ, சிந்தாந்தத்தையோ பின்பற்றினால் கொரோனா நாட்டை விட்டு ஓடிப்போகும் என்று நான் சொல்லவில்லை. அதற்கு அடுத்த வரியில்கூட `மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றினால் மரித்துப்போகும் கொரோனா’ எனச் சொல்லியிருந்தேன். ஆனால், அதைப் பார்க்கத் தவறிவிட்டார்கள் போல.’’

``தெலுங்கில் வாழ்த்து தெரிவித்துத் தெலங்கானா மக்களை அன்பால் கிறங்கடித்துவருகிறீர்கள்... தெலுங்கு முன்பே தெரியுமா?’’

‘`இங்கு வருவதற்கு முன்பு எனக்குத் தெலுங்கு சுத்தமாகத் தெரியாது. நான் தமிழக மக்கள் என்னை ஆராதிப்பார்கள் என நினைத்துதான் அரசியலுக்கே வந்தேன். ஆனால், படித்த, திறமையான தமிழிசையைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பான சகோதரியை ஆதரிக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு. ஆனால், தெலங்கானா மக்கள் என்னைக் கொண்டாடுகிறார்கள். நான் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதாரப் பாராட்டுகிறார்கள். அந்த அன்புதான் அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என என்னைத் தூண்டியது. அவர்களின் மொழியில் அவர்களோடு உரையாடினால் அவர்களும் சந்தோஷ மடைவார்கள். அதனால், தற்போது தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறேன்.”

``ஒருவேளை பா.ஜ.க-வில் இருந்ததால் உங்களுக்கான நல்ல பெயர் தமிழக மக்களிடமிருந்து கிடைக்காமல் போனது என்று சொல்லலாமா?’

“அப்படிச் சொல்லிவிட முடியாது. பா.ஜ.க-வில் இருந்த காரணத்தால்தான் தற்போது நான் கவர்னராக இருக்கிறேன்.”

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்

‘` `ஒருவருக்கொருவர் தனி உழைப்பே தவிர ஒத்துழைப்பு என்று ஏதுமில்லை.’ நீங்கள் அடிக்கடி சொல்லும் வாசகம் கொரோனா காலத்தில் உண்மையாகிவிட்டதே?’’

‘` நான் சொன்ன வாசகம் மட்டுமல்ல; தமிழர் கலாசாரமான வணக்கத்தைத்தான் தற்போது உலகமே பின்பற்றிவருகிறது. ஒருவரைத் தொட்டுப் பேசக்கூடாது, பக்கத்தில் நெருக்கமாக நிற்கக்கூடாது போன்றவை நம் கலாசாரத்தில் அடங்கும். அதுவும் தற்போது அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் கொரோனா, என்னுடைய வாசகத்தை மட்டுமல்ல, தமிழர் கலாசாரம் உலகுக்குத் தேவை என்பதையும் மெய்ப்பித்திருக்கிறது. நம்முடைய கலாசாரம், பழக்கவழக்கங்கள் ஆரோக்கியத்தையும் அறிவிலையும் அடிப்படையாகக் கொண்டவை.’’

``அதுசரி... ஆனால், பசுவின் சிறுநீர் குடித்தால் கொரோனா வராமல் தப்பிக்கலாம் என பா.ஜ.க-வினர் சிலர் பேசி வருகிறார்களே, ஒரு மருத்துவராக அதை ஏப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“கட்சியில் 90 சதவிகிதம் பேர் அப்படிப் பேசுவதில்லை. பத்து சதவிகிதம் பேர் அப்படிப் பேசுவதால் கட்சிக்கு அவப்பெயர்தான், அதேசமயம் கோமியத்தில் சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன. வட இந்திய மக்கள் காலம் காலமாக இதுபோன்ற விஷயங்களை நம்பிவருகிறார்கள். அதன் தொடர்ச்சிதான் இது போன்ற கருத்துகள். அது சரியா, தவறா என்று பார்ப்பதைவிட, அவர்களின் நம்பிக்கை என விலகிச்செல்வதே நல்லது.”

``தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உங்கள் முன்பு பணிவாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானதே?’’

‘`நான் இங்கு ஆளுநராக வருவதற்கு முன்பாக, கே.சி.ஆரை அடக்குவதற்காகத்தான் மத்திய அரசு என்னை அனுப்பி வைத்திருக்கிறது என்பதாகத்தான் பலரும் நினைத்தார்கள். நான் குறிப்பிட்ட அஜென்டாவுடன் வந்திருக்கிறேன் எனப் பத்திரிகைகளும் எழுதின. முதல்வரும்கூட முதல் இரண்டு மாதங்கள் என்னிடம் சரியான தொடர்பில்லாமல்தான் இருந்தார். அதற்குப் பிறகு நான் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து என்னிடம் நன்றாகப் பேசத் தொடங்கினார். என்னி டம் எதைச் சொல்லும்போதும், ஒரு சகோதரியாக உங்களிடம் இதைச் சொல்கிறேன் என்றுதான் பேச ஆரம்பிப்பார். அதனால் நீங்கள் புகைப் படத்தைப் பார்த்ததை, பணிவு என்பதாக இல்லாமல், இயல்பான நட்பு, சகோதரத்துவம் என்றுதான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.’’

``ஆனால், தற்போது பல மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் மிரட்டும் அதிகாரிகளாகச் செயல்பட்டுவருகிறார்களே?’’

“அப்படியெல்லாம் இல்லை. இதுவரை ஆளுநர்களை எந்த மத்திய அரசும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால், மோடி அவர்களின் திறமைகளையும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அதனால்தான், கொரோனாத் தடுப்புக்காக, முதல் நாள் அனைத்து மாநில முதல்வர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அடுத்த நாள் ஜனாதிபதி ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுபோன்ற விஷயங்கள் ஆளுநர்களின் திறமை மாநில நலனுக்காகப் பயன்படுத்துவதற்குத்தானே தவிர ஆட்சியாளர்களை பயமுறுத்த அல்ல.”

``நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் ஆனால், மோடி பிரதமரான பிறகு மாநில சுயாட்சி என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி நிற்கிறதே?’’

‘`நிச்சயமாக இல்லை. இன்று மாநில அரசுகள் செயல்படுத்துகிற பல திட்டங்கள் மத்திய அரசின் நிதியிலிருந்துதான் செயல்படுத்தப்படுகிறது. அதனால், மாநில அரசுகள்தான் மத்திய அரசு செய்யும் நல்ல விஷயங்களை மக்களிடம் சொல்வதில்லை. தவிர மாநில அரசுகளுக்கென சில அதிகாரங்கள் எப்படி இருக்கின்றனவோ, அதுபோல மத்திய அரசுக்கும் சில அதிகாரங்கள் இருக்கின்றன. அதைப் புரிந்துகொண்டால் இதுபோன்ற விமர்சனங்கள் வராது.’’

``தமிழக பா.ஜ.க கூட்டங்களை மிஸ் செய்கிறீர்களா?’’

‘`கண்டிப்பாக என் தொண்டர்களை, அரசியல் கூட்டத்தை, அரசியல் ஆரவாரத்தை மிஸ் செய்கிறேன். தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்குப் போன ஒரு உணர்வு இருக்கிறது. அதேநேரம் இந்தப் பணிக்கு என்னை அடாப்ட் செய்துகொண்டேன்; சிறப்பாகச் செயல்பட்டுவருகிறேன்.’’

 Tamilisai Soundararajan,  Chandrashekar Rao
Tamilisai Soundararajan, Chandrashekar Rao

``நீங்கள் தெலங்கானா போனபின்பு, தாயில்லாப் பிள்ளைபோல, தமிழக பா.ஜ.க தலைமை இல்லாமல் பலகாலம் தவித்துவிட்டதே?’’

‘`எந்தத் தலைவருக்கும் இல்லாத ஒரு பிரச்னை எனக்கு வந்தது. நான் தலைவரான உடனே, இவர் ஒரு மாதம்கூடத் தாங்கமாட்டார் எனப் பலர் என் காதுபடவே பேசியிருக் கிறார்கள்.

ஆனால், தமிழக பா.ஜ.க-வின் தலைவராக அதிக வருடம் பதவிவகித்த நபர் நான்தான். எனக்குப் பிறகு தேர்தல் நடத்தி, தலைவரைத் தேர்ந்தெடுக்கப் பலகாலம் ஆகிவிட்டது. தற்போது, முருகன் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கிறார். அவரின் பெயர் பட்டியலில் இருந்ததாக நான் முன்பே கேள்விப்பட்டேன்.”

``அப்போ, முருகனைத் தமிழிசையின் ஆதரவாளர் என்று சொல்லலாமா, உங்களின் பரிந்துரையில்தான் அவருக்குத் தலைவர் பதவி கிடைத்ததா?’’

“முருகனை என்னுடைய ஆதரவாளர் என்று சொல்ல முடியாது. நல்ல சகோதரர். அவரின் உழைப்பையும் திறமையையும் நான் அறிவேன். முன்னாள் தலைவராக என்னுடைய கருத்துகளும் கட்சிக்குத் தேவைப்பட்டன.”

‘` `தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்கிற வாசகத்தைக் கடைசியாக எப்போது எங்கு சொன்னீர்கள் என ஞாபகம் இருக்கிறதா?’’

``கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கமலாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசும்போது சொன்னதாக ஞாபகம்.”

‘` `நீங்கதான் என் குலசாமி’ என உங்களைப் பற்றி ஒருவர் பேசிய ஆடியோவை சமீபத்தில் உங்கள் முகநூலில் பதிவேற்றியிருந்தீர்களே?’’

“எனக்கு எதிராக இவ்வளவு காலம் தொடுக்கப்பட்ட பல விமர்சன அம்புகளுக்கு அந்த ஒற்றை ஆடியோவில் பதில் இருந்தது. அதனால்தான் அதை என் முகநூல் பக்கத்தில் பதிவு செய்தேனே தவிர, விளம்பரத்துக்காக அல்ல.”