Published:Updated:

சிதறும் பாமக: `பிரிந்துச் செல்ல என்ன காரணம்?!' -மாற்று கட்சிக்கு தாவிய நிர்வாகிகள் சொல்வதென்ன?

"பாமக கட்சி கொடியேற்ற நிகழ்ச்சிக்கோ, தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிக்கோ இதுவரை அன்புமணி வந்தது கிடையாது. இவங்க காருக்குள்ளேயே அமர்ந்து அரசியல் பண்றவங்க. கார் கண்ணாடிக்கு வெளியில என்ன நடக்குதுன்னு இவங்களுக்கு தெரியாது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வசித்துவரும் விழுப்புரம் மாவட்டத்திலிருந்தே பாமக நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிக்கு தாவி வரும் செயல் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தது. இச்செயலால் தைலாபுரம் தோட்டத்து தரப்பு மிகவும் அப்செட்டில் இருக்கிறதாம். பரபரப்பான இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், பாமக-விலிருந்து விலகி மாற்று கட்சியில் இணைவதற்கு காரணம் என்ன என்று மாற்றுக் கட்சி தேடிச்சென்ற வட்டாரத்தில் பேசினோம்.

தனித்துப் போட்டி: கட்சி தாவும் பாமக நிர்வாகிகள்! - ஆட்டம் காண்கிறதா ராமதாஸ் கோட்டை?
ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி
விகடன்

"ஐயாவுக்கு இப்போ உடம்பு முடியாம போனதால, அன்புமணி தலைமை வந்ததிலிருந்து 'அவருக்கு கட்சியில சீனியர் யாரும் இருக்க கூடாது'னு நினைக்கிறார். இதனால் ஐயா கூடவே நெடுங்காலமாக பயணித்த நாங்க எல்லோருமே புறக்கணிக்கப்பட்டு இருக்கிறோம். கட்சி, இப்போ குடும்பமாக மாற ஆரம்பித்துவிட்டது. இப்போ பாமக-வுக்கு ஒரு 6 எம்.பி சீட் ஒதுக்கப்படுகிறது என்றால்... அவங்க குடும்பத்துக்கு மட்டுமே தான் அவை எல்லாமே போகும். தன்ராஜ், ஏ.கே.மூர்த்தி, அன்புமணி... அதோடு ஆற்காடு பக்கமாக பொண்ணு கொடுத்த உறவு வழியில ஒருவருக்கு என்று குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே எம்.பி பதவி போகும். அதற்காக மட்டும்தான் அப்பப்போ கூட்டணி வச்சுப்பாங்க. சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்து, யாரெல்லாம் அவர்களுக்கு ஒத்து வருவார்களோ அவங்களுக்கு எல்லாம் எம்.எல்.ஏ சீட் ஒதுக்கிடுவாங்க.

ஆனா உள்ளாட்சித் தேர்தலின்போது யாரும் உதவி பண்ணுவது கிடையாது. கடை மட்ட தொண்டன் கஷ்டப்பட வேண்டியதுதான். இதற்கு அன்புமணி சொல்கிற காரணம் பார்த்தீங்கன்னா... "இவங்களெல்லாம் பதவி சுகத்தை பாத்துட்டா... கட்சியில வேலை செய்ய மாட்டாங்க. இவங்க உள்ளாட்சித் தேர்தலில் ஏதாவது ஒரு பதவியை ஜெயிச்சுட்டாங்கனா... கார் ஒன்னு வாங்கிட்டு அரசு அலுவலகத்திலேயே இருப்பாங்க. அதனால ஒழுங்கா அரசியல் செய்ய மாட்டாங்க"னு சொல்கிறதா சொல்றாங்க.

இப்படி அவங்க சொல்லும் போது... எம்.எல்.ஏ-வாக பொறுப்பு ஏற்றவர்கள், எம்.பி-யாக பொறுப்பேற்றவர்கள் எல்லாம் அரசியல் பண்ண மாட்டார்களா..! அப்படின்னு எங்களுக்கும் கேள்வி எழும்புதுங்க. மருத்துவர் ஐயாவை எந்த நேரத்திலையும் குறை சொல்லிவிட முடியாது. தொண்டர்களை எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு பேசுவார். இரவு 11 மணி ஆனாலும் நல்லபடியாக பேசுவார். சாதாரண தொண்டன் வீட்டில் காதுகுத்தல், கிரகப்பிரவேசம் என்றாலும் வந்துவிடுவார். இப்போ வெளியில் வர முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகிவிட்டார். ஆனா, அன்புமணியோ இது வரைக்கும் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சிக்கோ, தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிக்கோ வந்தது கிடையாது. யாருனே தெரியாத ஒரு நபர், தன்ராஜ் என்பவருக்கு கொஞ்ச நாளைக்கு மட்டும் வேலை செஞ்சிட்டா போதும், அவங்களுக்கு ஒரு முக்கிய பொறுப்பு கொடுத்துடுவாங்க. இப்படித்தான் பாமக அரசியல் போய்கிட்டு இருக்கு. ஒரு வரியில் சொல்லணும் அப்படின்னா... ஐயா காலத்திலிருந்த சுயமரியாதையும், தன்மானமும் இப்போ எங்களுக்கு இல்லாம போச்சு.

தி.மு.க-வில் இணைந்த பாமக-வினர்.
தி.மு.க-வில் இணைந்த பாமக-வினர்.
அதிமுக - பாமக மோதல்... பின்னணியில் ஸ்டாலின் ஸ்கெட்ச்! | Elangovan Explains

இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கட்சி நிர்வாகிகள் சிலரும் சுயேட்சையாக தான் பதிவு செய்திருக்காங்க. பாமக என்று சொல்லி ஊருக்குள்ள ஓட்டு கேட்க போக முடியாத சூழல். ஏனெனில், இரட்டை இலைக்கு நாங்க ஓட்டு கேட்டு சுவற்றில் வரைந்த சின்னங்களே இன்னும் அழியல. இப்போ மாம்பழத்துக்கு ஓட்டு கேட்கணும். உடனே உதயசூரியனுக்கு ஓட்டு கேளு என்பார்கள்..! இதை மாற்ற முடியாதுங்க. இவங்க காருக்குள்ளையே அமர்ந்து அரசியல் பண்றவங்க. கண்ணாடிக்கு வெளியில என்ன நடக்கிறதுனு இவர்களுக்கு தெரியாது. டீக்கடை வாசல் வரை நின்று அரசியல் பண்றவங்க தொண்டர்களாகிய நாங்கதான். அங்கு ஒவ்வொரு விமர்சனத்தையும் கேட்கும்போது எங்களுக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மாதிரி கட்சி போய்கிட்டு இருக்கு. இதனால மனசுக்கு வருத்தமாகி பிடிக்காமல் போனதால் தான் கட்சியை விட்டு வெளியில வர முடிவு செஞ்சோம். நிறைய பேரு அவங்க அவங்க விருப்பப்பட்ட கட்சியில் போய் சேர்ந்துகிட்டு இருக்காங்க. வருகின்ற 27ம் தேதி விழுப்புரத்திற்கு வரவுள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஆயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் இணைய இருக்காங்க. உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறமாக நிறைய பாமக தொண்டர்கள் கட்சியில் இருந்து பிரிந்து வர இருக்கிறார்கள்" என்றார்.

ஸ்டாலின் - ராமதாஸ் - எடப்பாடி பழனிச்சாமி
ஸ்டாலின் - ராமதாஸ் - எடப்பாடி பழனிச்சாமி

இது தொடர்பாக விளக்கம் கேட்க பாமக தலைவர் ஜி.கே.மணியை அவரது பி.ஏ மூலம் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பின்னர் இது தொடர்பாக விளக்கம் கேட்க விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சம்பத்திடம் பேசினோம். "தமிழ்நாட்டில், தன் கட்சியினரிடம் பேசி பாமக தலைமை ஒரு முடிவு எடுக்கிறது என்றால், அதை மதித்து நடப்பவர் தான் பாமக தொண்டன். ஏதோ திண்டிவனம் பகுதியில் இருந்து ஒரு சிலர் வெளியில் சென்று பேசலாம். கூட்டணி தமிழ்நாடு முழுக்க தானே இருந்தது. ஆனா, இவங்க மட்டும் தானே இப்போ போனாங்க. அது அவங்க தனிப்பட்ட முடிவாக இருக்கலாம். பொதுவாக பார்க்கும் போது தமிழ்நாடு முழுக்க யாரும் அப்படி போகாம, நாங்க எல்லாம் ஒற்றுமையாக தானே இருக்கோம். அது வெளியில போன ஒரு சிலரின் சம்பந்தம் இல்லாத கருத்து." என்றார் சுருக்கமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு