உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி இன்று மார்ச் 7 வரை நடைபெற்றுவருகிறது.
அவற்றில் உத்தரகாண்ட், பஞ்சாப், கோவாவில் ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடந்து முடிந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்துவருகிறது. இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு என்பதால், உத்தரப்பிரதேசத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மாலை 6 மணிக்குத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த கையோடு, பிரபல செய்தி நிறுவனங்கள் `எக்ஸிட் போல்- Exit Poll' எனும் தேர்தல் முடிவு கருத்துக்கணிப்பை வெளியிடவிருக்கின்றன. அதனால், அரசியல் கட்சியினர், அரசியல் நோக்கர்கள் என அனைவரும் இந்த `எக்ஸிட் போல்' முடிவுகள் எப்படி இருக்கப்போகின்றன என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு, அசம்கர், மௌ, ஜான்பூர், காஜிபூர், சந்தோலி, வாரணாசி, மிர்சாபூர், பதோஹி, சோன்பத்ரா ஆகிய ஒன்பது மாவட்டங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
அது முடிந்த பிறகு இன்று மாலை 6 மணியளவில் அனைத்து முக்கிய ஊடகங்களும் தங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிடப்போவதாக அறிவித்திருக்கின்றன.
