Published:Updated:

"ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ இந்தியா உதவ வேண்டும்!" - விக்னேஷ்வரன் கோரிக்கை

கடந்த ஒரு மாத காலமாகவே, பேரணிக்கான ஏற்பாடுகள் தயாராகின. உலகெங்கிலும் இருந்து பேரணிக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்தன. இந்தியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதே தினத்தில் பேரணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டது.

Ezhuga Tamil Rally
Ezhuga Tamil Rally

6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி, இன்று யாழ்ப்பாணத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அதேசமயம், போரின்போதும் போருக்குப் பிறகும், இலங்கை அரசிடம் சரணடைந்த பல்லாயிரக்கணக்கானோரின் நிலை என்னவென்று இன்னமும் தெரியவில்லை. அரசால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களின் நிலையும் இதுதான்.

Ezhuga Tamil Rally
Ezhuga Tamil Rally

போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும், தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம், ராணுவமயமாக்கல் என தமிழ் மக்கள் அடையும் துயரம் மட்டும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. 

தமிழ் மக்கள், அவரவரின் பாரம்பர்ய இடத்தில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகுந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்; தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்; சர்வதேச விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்... ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, 'தமிழ் மக்கள் பேரவை'யின் சார்பாக மாபெரும் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டது. பேரணி குறித்து, 'தமிழ் மக்கள் பேரவை'யின் துணைத்தலைவர் விக்னேஷ்வரன், கடந்த மாதத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில்,

''நாம் இந்த நிகழ்ச்சியை மேற்கொள்ளும் காலம் மிகவும் முக்கியமானது. ஒன்றன்பின் ஒன்றாகத் தேர்தல்கள் வரும் நிலையில், தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகள், மனோநிலை மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பது மிகவும் அவசியமானது. அதி அவசரமான கோரிக்கைகளையே உடனடியாக முன்னிறுத்த உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலில் நிற்கப்போகும் வேட்பாளர்கள், நம் கோரிக்கைகளை இலகுவாக அனுமதிக்க முடியும். அவற்றைச் செய்யுமாறு நாம் அரசை, ஜனாதிபதி வேட்பாளர்களை வேண்டுவது எல்லா விதத்திலும் நியாயமானது.
விக்னேஸ்வரன்
Ezhuga Tamil Rally
Ezhuga Tamil Rally

ஆகவே, கடந்த முறையைவிட கூடுதலான மக்களை இம்முறை நாம் அணிதிரட்ட வேண்டும். கிழக்கு மற்றும் ஏனைய இடங்களில் நாம் தொடர்ந்து செய்யவிருக்கும் 'எழுக தமிழ்' பேரணிக்கு, எமது முதலாவது பேரணி நிகழ்ச்சி உத்வேகம் ஊட்டும் வகையில் அமைய வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த ஒரு மாத காலமாகவே பேரணிக்கான ஏற்பாடுகள் தயாராகின. உலகெங்கிலும் இருந்து பேரணிக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்தன. இந்தியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதே தினத்தில் பேரணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இந்தப் பேரணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடமான, யாழ் முற்றவெளி மைதானத்துக்கு, காலை முதலே மக்கள் பதாகைகளை ஏந்தி வரத் தொடங்கினர்.

Ezhuga Tamil Rally
Ezhuga Tamil Rally

கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பேரணியில் கலந்துகொண்டனர். தமிழ் மக்கள் பேரவையின் துணைத் தலைவர் விக்னேஷ்வரன், பேரணியில் வந்து கலந்துகொண்ட மக்களுக்கு மட்டுமல்லாது, உலகெங்கிலும் குறிப்பாக தமிழகத்தில் மிக வெளிப்படையாகப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவரும் தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.

பேரணியில் கலந்துகொண்ட எழுத்தாளர் லதா கந்தையா நம்மிடம் பேசும்போது,

''முக்கியமான ஆறு கோரிக்கைகளோடு, இனப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும், வடக்கு-கிழக்கில் உள்ள அரச பதவிகளுக்கு தென்னிலங்கையைச் சேர்ந்த யாரையும் நியமிக்கக்கூடாது எனவும், இலங்கை அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதோடு, ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், இந்தியா ஐ.நா சபையில் தீர்வு ஒன்றைக் கொண்டுவர வேண்டும்.

Latha Kanthaija
Latha Kanthaija

இலங்கை இனப் பிரச்னையில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்கு நிலையிலிருந்து விலகி, தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளைத் தாமதமின்றி எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டது. எந்தவொரு கட்சியையையோ தலைவர்களையோ குற்றம் சுமத்தாமல், மக்களுடைய நலன் சார்ந்ததாகவும் இறுதிக்கட்ட போரில் வீரமரணமடைந்த போராளிகளின், உயிர் நீத்த மக்களின் கனவை நிறைவேற்றும் வகையிலும் கூட்டம் நடைபெற்றது.

கட்சிப் பாகுபாடின்றி, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள், மத குருமார்கள் என எல்லாத் தரப்பினரும் இதில் பங்கேற்றனர். எந்தவொரு தலைவரின் தலைமையின் கீழும் இல்லாமல், மக்கள் முன்னெடுத்த போராட்டமாக ‘எழுக தமிழ் எழுச்சிப் பேரணி’ அமைந்தது. இனிவரும் காலங்களிலும் பல பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இது மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்'' என்றார் லதா.

போராடுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ்மக்கள். முக்கியமான ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் முக்கியத் தீர்மானமும் இடம்பெற்றிருந்தது. பேரணியைப் பிரமாண்டமாக நடத்திக்காட்டியதன் காரணமே, இந்திய அரசு இந்த விஷயத்தில் தங்களுக்கு சாதகமாக, சர்வதேச சமூகத்திடம் குரல் எழுப்ப வேண்டுமென்பதுதான்.

``பாரதிராஜா, சீமானால் எங்கள் சினிமாவை உருவாக்க முடியாது!'' - ஈழ இயக்குநர் ரஞ்சித்

முதற்கட்டமாக நடந்துள்ள இந்தப் பேரணி, சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்திருப்பதில் ஈழத்தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் எல்லோர் மத்தியிலும் மீண்டும் நம்பிக்கை விதையூன்றப்பட்டிருக்கிறது. இதை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதிலும் ஒருங்கிணைந்து இறுதிவரை ஒற்றுமையுடனிருந்து தேர்தலுக்கு முன்பே, கோரிக்கைகளை வென்றெடுப்பதிலும்தான் இந்தப் பேரணியின் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது.

இந்தியாவும் சர்வதேச சமூகமும் என்ன செய்யப்போகின்றன?