Published:Updated:

நீதா அம்பானியை பணிவாகக் கும்பிட்டாரா மோடி?! வைரலாகும் புகைப்படம் - உண்மை என்ன?! #FactCheck

நீதா - மோடி

உண்மையிலேயே மோடி குனிந்து கும்பிட்டது யாரைத் தெரியுமா?!

நீதா அம்பானியை பணிவாகக் கும்பிட்டாரா மோடி?! வைரலாகும் புகைப்படம் - உண்மை என்ன?! #FactCheck

உண்மையிலேயே மோடி குனிந்து கும்பிட்டது யாரைத் தெரியுமா?!

Published:Updated:
நீதா - மோடி

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பணிவாகக் கும்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கீழ் இயங்கும் பொதுசேவை நிறுவனமான பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஜவஹர் சிர்கார், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தப் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஜவஹர் சிர்கார்
ஜவஹர் சிர்கார்

ஜவஹர் சிர்கார் இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்ட சில மணி நேரத்தில் பலரும் இந்தப் புகைப்படத்தைப் பதிவிடத் தொடங்கினர். அதன் பிறகு, ஜவஹர் சிர்காரின் பதிவின் கீழ் இந்தப் புகைப்படம் போலியானது எனச் சிலர் கமென்ட் செய்ய, அந்தப் பதிவை டெலிட் செய்தார் அவர்.

உண்மையிலேயே யாரைக் கும்பிட்டார் மோடி?

சமூக தொண்டுகள் செய்துவரும் திவ்ய ஜோதி காலச்சரா அமைப்பின் தலைவர் தீபிகா மொன்டாலைத்தான் கும்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி. 2018-ம் ஆண்டு ராஷ்டிரபதி பவனில் நடந்த சந்திப்பின்போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் நீதா அம்பானியின் முகத்தை மார்ஃபிங் செய்து யாரோ பரப்ப, அதை ஜவஹர் சிர்காரும் பதிவிட்டிருக்கிறார்.

இதையடுத்து பா.ஜ.க-வினர் பலரும் ஜவஹர் சிர்காரை விமர்சித்து பதிவிட்டுவருகின்றனர். மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், ``காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர், பிரதமரின் மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அவர் தேசத்திடம் மன்னிப்புக் கேட்பாரா... ட்விட்டர் இந்தியா அவர்மீது நடவடிக்கை எடுக்குமா?'' என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

மோடி, தீபிகா மொன்டால் - உண்மையான புகைப்படம்
மோடி, தீபிகா மொன்டால் - உண்மையான புகைப்படம்

மேலும் சில பா.ஜ.க ஆதரவாளர்கள், ``தீபிகா மொன்டாலின் சமூகப் பணிகளைப் பாராட்டும் வகையில் அவரைக் கைகூப்பி கும்பிட்டிருக்கிறார் பிரதமர். பிரதமரின் இந்தப் பணிவான செயலை பாராட்டக்கூட வேண்டாம். ஆனால், அதைக் கொச்சைப்படுத்தாமலாவது இருக்க வேண்டும். உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே இந்தப் படத்தை ஜவஹர் சிர்கார் பதிவிட்டிருக்கிறார். ட்விட்டர் நிறுவனம் இவருக்கு ப்ளூ டிக் வழங்கியிருப்பதால், இதைப் பலரும் உண்மை என நம்ப வாய்ப்பிருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் இப்படி போலிச் செய்திகளைப் பரப்ப உதவுவது நியாயமா?'' எனப் பதிவிட்டிருக்கின்றனர்.

இந்தநிலையில், பிரசார் பாரதியின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி சசி சேகர், ``சித்திரிக்கப்பட்ட புகைப்படத்தைப் பொதுவெளியில் பதிவிடுவது வெட்கக்கேடு. அதுவும் பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி இவ்வாறு பதிவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது'' என்று கூறியிருக்கிறார்.