Published:Updated:

Fact Check: `உ.பி பந்தேல்கண்ட் பகுதியில் புதிய அணை' - பாஜக தலைவர்கள் பகிர்ந்த புகைப்படம் உண்மையா?!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பந்தேல்கண்ட் பகுதியில் நீர் மேலாண்மை குறித்த திட்டங்களை நவம்பர் 19-ம் தேதி அன்று அறிவித்தார் மோடி. அதே நாளில், அந்தப் பகுதியில் புதிய அணை கட்டப்பட்டிருப்பதாக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் ட்விட்டரில் பதிவிட்டனர்... உண்மை என்ன?!

மூன்று நாள்கள் (நவம்பர் 19-21) அரசு முறைப் பயணமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு வந்திருந்தார் பிரதமர் மோடி. இதில் நவம்பர் 19-ம் தேதி அன்று, பந்தேல்கண்ட் பகுதியை மேம்படுத்துவதற்காக சுமார் 6,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தினார் அவர். அந்தப் பகுதியிலிருக்கும் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்கும் வகையிலான திட்டங்களும் இதில் அடங்கும். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார் மோடி.

மோடியுடன் யோகி: `புதிய இந்தியா' கவிதை! - வைரல் புகைப்படங்களின் பின்னணி?

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ அவதேஷ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் படமும், ஓர் அணைக்கட்டின் படமும் இடம்பெற்றிருந்த ஒரு போட்டோ கார்டைப் பகிர்ந்து, ``அரசியல்வாதிகள், பாரம்பர்யமாகத் தங்களது தனிப்பட்ட நலனுக்காகப் பயன்படுத்திவந்த பந்தேல்கண்ட், இன்று கடல் அளவு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது'' என்று பதிவிட்டிருந்தார். இவரைத் தொடர்ந்து பல்வேறு பா.ஜ.க ஆதரவாளர்களும், ``புதிய அணை வந்துவிட்டது. இனி பந்தேல்கண்ட் பகுதியில் வறட்சியே இருக்காது'' என்று பதிவிட்டுவருகின்றனர்.

இந்தப் புகைப்படத்தை உ.பி-யைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான பம்பா லால் திவாகர், ரவீந்திரநாத் திரிபாதி, சுரேஷ் குமார் கண்ணா ஆகியோரும் பகிர்ந்திருந்தனர். பீகார் பா.ஜ.க எம்.எல்.ஏ அனில் குமாரும் இதே புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ``பிரதமர் மோடி நவம்பர் 19-ம் தேதி அன்றுதான், பந்தேல்கண்ட் பகுதிக்கான நீர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்து அறிவித்தார். அதே நாளில் எப்படி அந்தப் பகுதியில் ஒரு புதிய அணை கட்டப்பட்டிருக்கும்'' என்று சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பப்பட்டன.

உண்மை என்ன?

இதையடுத்து, இந்த விவகாரத்தில் உண்மை என்னவெனத் தெரிந்துகொள்ள, பா.ஜ.க தலைவர்கள் பகிர்ந்த படத்திலுள்ள அணைக்கட்டின் புகைப்படத்தைவைத்து, கூகுளிலுள்ள ரிவர்ஸ் இமேஜ் வசதிகொண்டு தேடிப் பார்த்தோம். அதில், நமக்கு சில செய்திகள் கிடைத்தன. அந்தப் புகைப்படத்திலிருப்பது ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கிடையே கட்டப்பட்டிருக்கும் `ஶ்ரீசைலம் அணை' என்பது தெரியவந்தது. இந்தப் புகைப்படம் 2014-ம் ஆண்டே சில செய்தித் தாள்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.

ஶ்ரீசைலம் அணை குறித்து `Deccan Chronicle' செய்தித் தளத்தில் வெளியான செய்தி
ஶ்ரீசைலம் அணை குறித்து `Deccan Chronicle' செய்தித் தளத்தில் வெளியான செய்தி
பிரியங்கா டு சந்திரசேகர் ஆசாத் - உ.பி தேர்தல் களத்தில் உதயமாகும் புதிய அரசியல் சக்திகள் யார் யார்?

மேலும், இதே அணைக்கட்டின் புகைப்படம், தெலங்கானா போக்குவரத்துக் கழக இணையதளத்தில், `சுற்றுலா' பிரிவின்கீழ் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் , பா.ஜ.க தலைவர்களும், ஆதரவாளர்களும் பகிர்ந்த அணைக்கட்டின் புகைப்படம் பந்தேல்கண்ட் பகுதியிலுள்ள அணையின் புகைப்படம் இல்லை என்பதும், அது ஆந்திரா - தெலங்கானா இடையே அமைந்திருக்கும் `ஶ்ரீசைலம்' அணையின் புகைப்படம் என்பதும் உறுதியாகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு