ஐ.நா-வின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ``காஷ்மீரில் மனித உரிமைகளின் கவலைக்குரிய நிலைமை குறித்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் விவாதிக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மனித உரிமைகள்மீதான முன்னேற்றம், கடந்த கால நீதி, பாதுகாப்பு, வளர்ச்சி குறித்து விவாதிக்க இந்த வாய்ப்பு முக்கியமானதாக இருக்கும். மேலும், இரு நாடுகளுக்கும் பிராந்தியத்துக்கான அர்த்தமுள்ள அணுகல் உட்பட அனைத்து விஷயங்களுக்கும் எங்கள் அலுவலகம் எவ்வாறு உதவ முடியும் என்பதை நான் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும்விதமாக சமீபத்தில் நடந்த மனித உரிமைகள் பேரவையின் 52-வது அமர்வின்போது, ஜெனீவாவிலுள்ள ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே, ``ஆகஸ்ட் 2019-ல் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசியலமைப்பு மாற்றங்களுக்குப் பிறகு, முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அரசு ஜனநாயகத்தைக் கொண்டுவருவதிலும், அரசியல் செயல்முறைகளிலும் மக்களின் பங்களிப்பை மேம்படுத்தியிருக்கிறது.
மக்களுக்கு நல்லாட்சி, பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்திருக்கிறோம். சமூக-பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல் பணிகள் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மனித உரிமைகள் நிலைமை குறித்து உயர் ஆணையர் தேவையற்ற மற்றும் உண்மையற்ற முறையில் விமர்சித்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விஷயங்கள் இந்தியாவின் உள் விவகாரம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.