Published:Updated:

உள்ளாட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம்... கணவரின் ஆதிக்கமின்றி சுதந்திரமாகச் செயல்பட முடியுமா?!

உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகள் ( மாதிரிப் படம் )

உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. ஆனால், கணவர் உள்ளிட்ட குடும்ப ஆண்களின் ஆதிக்கமின்றி பெண் பிரநிதிகளால் சுதந்திரமாகச் செயல்பட முடியுமா?

உள்ளாட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம்... கணவரின் ஆதிக்கமின்றி சுதந்திரமாகச் செயல்பட முடியுமா?!

உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. ஆனால், கணவர் உள்ளிட்ட குடும்ப ஆண்களின் ஆதிக்கமின்றி பெண் பிரநிதிகளால் சுதந்திரமாகச் செயல்பட முடியுமா?

Published:Updated:
உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகள் ( மாதிரிப் படம் )

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் பெண்களுக்கு அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது பல தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகள்
உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகள்

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில், 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைக் கடந்துள்ளது. சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளில் மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவைபோக, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றால், மேயர் பதவிக்கு நேரடியாகப் பெண் வேட்பாளர்களை நிறுத்துவது அல்ல. இது மறைமுகத் தேர்தல் என்பதால், வெற்றிபெறும் கவுன்சிலர்களில் ஒருவர்தான் மேயராக வர முடியும். அப்படி வெற்றிபெறுபவர்களில் மேற்கண்ட 11 மாநகராட்சிகளிலும் பெண்களை மட்டுமே மேயராகத் தேர்வுசெய்ய முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆவடி உட்பட மற்ற 10 மாநகராட்சிகளில் இருபாலரில் யாரை வேண்டுமானாலும் மேயராகத் தேர்வுசெய்யலாம். பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற சமத்துவப் பார்வையும், கொள்கையும்கொண்டவர்கள் அரசின் இந்த நடவடிக்கையைப் பாராட்டினாலும், உள்ளாட்சி அமைப்புகளில் முக்கியப் பதவிக்காக காய்நகர்த்திக்கொண்டு இருந்த ஆண்கள் பலருக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். எம்.பி., எம்.எல்.ஏ தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்களும் இந்த எதிர்பார்ப்புப் பட்டியலில் இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட எப்படியாவது சீட் வாங்கிவிடலாம் என்று பல வழிகளிலும் முயன்றுவந்த நிலையில்தான், தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது. இனி தங்களுக்கு சீட் கிடைக்காது என்பதைத் தெரிந்துகொண்ட அவர்கள், தங்கள் மனைவி, சகோதரி, மகள் என தங்கள் வீட்டுப் பெண்களில் யாருக்காவது சீட் வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த இடத்தில்தான், வேறொரு முக்கியமான பிரச்னையைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பெண்கள் போட்டியிட்டு வெற்றிபெறுகிறார்கள். ஆனால், அந்த இடங்களில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற பிரச்னை ஆரம்பம் முதல் இருந்துவருகிறது. பெண்களை டம்மி ஆக்கிவிட்டு கணவன், தந்தை, சகோதரர் என குடும்பத்து ஆண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்தும் போக்கு நடைமுறையில் இருக்கிறது.

உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்
உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்

பெண்களுக்கு அதிகாரமளித்தலில் பெரும் தடையாக இது இருப்பதாகப் பேசப்பட்டுவருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டத்தில் இது பெரிய பிரச்னையாக எழுந்து, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளில் கணவர் உட்பட ஆண் உறவினர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று அப்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி எச்சரித்தார்.

ஆட்சியர் உமா மகேஸ்வரி அப்போது வெளியிட்ட அறிக்கையில், ``கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994-ன்படி சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு 2016-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது” என்ற விவரத்தைக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்தப் பிரச்னை தொடர்பான புகார்களை அளிக்கும் வகையில், இலவச தொலைபேசி எண்களையும் உமா மகேஸ்வரி வெளியிட்டிருந்தார்.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடங்கள் அதிக அளவில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஆண் உறவினர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றியும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் குறித்தும் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம்.

செந்தில் ஆறுமுகம்
செந்தில் ஆறுமுகம்

``குடும்பத்தை நிர்வாகம் செய்வதால், இயல்பாகவே பெண்கள் நிர்வாகத்திறன் படைத்தவர்கள். ஒரு பிரச்னை வருகிறதென்றால், அதை எப்படிச் சரிசெய்வது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து, பிரச்னைகளின்போது அவர்களுக்கு துணை நின்று, அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

சமூகத்தில் கடைசி மனிதனின் கையில் அதிகாரம் போக வேண்டும் என்ற கனவுடன் நாம் இருக்கிறோம். பஞ்சாயத்து அமைப்புகள் மூலமாக அதைச் செய்வதற்காக முயல்கிறோம். இப்படிப்பட்ட நேரத்தில், பெண்களின் அதிகாரத்தை ஆண்கள் அபகரிப்பது என்பது வருத்தத்துக்குரியது.

கடைசி மனிதனின் கையில் அதிகாரம் வர வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில், பஞ்சாயத்துத் தலைவருக்கே இன்னும் அதிகாரம் வரவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. இன்னொருபுறம் பெண்களின் கைகளுக்கு அதிகாரம் செல்லவிடாமல், குடும்பத்து ஆண்கள் குறுக்கே நிற்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் சாதிக்கும் பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களின் திறமைகளையும் சாதனைகளையும் வெளிச்சம்போட்டுக் காட்டும் பணியை அரசு செய்ய வேண்டும். ஏனென்றால், பல சவால்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில்தான் அவர்கள் சாதிக்கிறார்கள். அவர்களை அரசு கைதூக்கிவிட வேண்டும்.

எல்லாவற்றையும் தாண்டி சாதியப் பாகுபாடு, தீண்டாமையும் உள்ளாட்சியில் பெரும் பிரச்னையாக இருக்கின்றன. அதுவும் ஒடுக்கப்பட்ட, பழங்குடியினப் பெண்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்களின் நிலைமை இன்னும் மோசம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்களையும் கவுன்சிலர்களையும் பஞ்சாயத்து அலுவலகங்களில் தரையில் அமரவைக்கும் கொடுமை இன்றைக்கும் இருக்கிறது.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

இந்தப் பிரச்னையை உணர்ந்துதான். `அனைவரும் தரையில் சமமமாக அமர்ந்து கூட்டம் நடத்த வேண்டும்’ என கிராமசபை விதிகளில் ஒரு விதியையே கொண்டுவந்துள்ளனர். ஆணாதிக்கமும் சாதியக் கட்டுமானம்கொண்ட சமுதாயமாக இருக்கும்போது, நாம் பேசுகிற இந்தப் பிரச்னைகளைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. சமூக, பண்பாட்டு அளவில் முழுமையான மாற்றம் வந்தால், இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படும்.

பெண்களின் அதிகாரத்தை குடும்பத்து ஆண்கள் பறிப்பதாக இருக்கட்டும், சாதியப் பாகுபாடு பிரச்னையாக இருக்கட்டும்... இவை குறித்து அரசியல் தலைவர்கள் வெளிப்படையாகப் பேச வேண்டும். பெண் பிரதிநிதிகளின் செயல்பாடுகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது. அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் கட்சியினரை அறிவுறுத்த வேண்டும். பேனர் வைக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுப்பதைப்போல, இதையும் செய்ய வேண்டும்” என்றார் செந்தில் ஆறுமுகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism