Published:Updated:

``போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய ரஜினி, எழுச்சி பற்றிப் பேசலாமா?'' - மல்லுக்கட்டும் மல்லை சத்யா!

ரஜினி

ரஜினிகாந்தின் அரசியல் பேச்சுக்குப் பலரும் புதுப்புது அர்த்தம் கற்பித்துவருகின்றனர். "வயதானவர்கள் போராட்டத்துக்கு வரவேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதைத்தான் இன்று ரஜினியும் சொல்லியிருக்கிறார்" என்கிறார் வி.சி.க-வைச் சேர்ந்த வன்னி அரசு!

``போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய ரஜினி, எழுச்சி பற்றிப் பேசலாமா?'' - மல்லுக்கட்டும் மல்லை சத்யா!

ரஜினிகாந்தின் அரசியல் பேச்சுக்குப் பலரும் புதுப்புது அர்த்தம் கற்பித்துவருகின்றனர். "வயதானவர்கள் போராட்டத்துக்கு வரவேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதைத்தான் இன்று ரஜினியும் சொல்லியிருக்கிறார்" என்கிறார் வி.சி.க-வைச் சேர்ந்த வன்னி அரசு!

Published:Updated:
ரஜினி

'ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கி தமிழக முதல்வராக நல்லாட்சி தருவார்' என்ற ரசிகர்களின் உற்சாக எதிர்பார்ப்புகளுக்கும், `அரசியல் கட்சி தொடங்கவேமாட்டார்', 'பா.ஜ.க-வின் ஊதுகுழலாக இருப்பார்' என்ற எதிர்ப்புக் குரல்களுக்கும் விளங்கும்படியாக, தன் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக உடைத்துப் பேசிவிட்டார் ரஜினிகாந்த்.

ஆனால், இப்போதும்கூட அவரது பேச்சுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தமிழக அரசியல் களத்தில், சூடு பறக்கிறது விவாதங்கள்.... ரஜினிகாந்தின் முடிவு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்த கருத்துகள் இங்கே அப்படியே...

கே.பாலகிருஷ்ணன் - மல்லை சத்யா - டாக்டர் கிருஷ்ணசாமி
கே.பாலகிருஷ்ணன் - மல்லை சத்யா - டாக்டர் கிருஷ்ணசாமி

கே.பாலகிருஷ்ணன் (மாநிலப் பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ரஜினிகாந்த், தன் கட்சியில் செய்யவிருக்கிற மாற்றங்கள் மட்டுமே அரசியல் மாற்றம் ஆகிவிடாது. அது அவரவர் சொந்தக் கட்சிப் பிரச்னைகள். அதைக் கட்சிப் பொதுக்குழுவில்தான் பேசவேண்டும். இப்படிப் பொதுவெளியில் வந்து பேசுகிற அளவுக்கு அது ஒன்றும் பொதுமக்களின் பிரச்னை அல்ல.

மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வாக என்னென்ன நல்ல மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான் உண்மையான அரசியல் மாற்றம். அந்த வகையில், இன்றைய பிரச்னைகளான சாதி - மதக் கொடுமைகள், வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சரிவு, மக்கள் விரோத சட்டத் திருத்தங்கள் பற்றி ரஜினி ஒருவார்த்தைகூட பேசாத நிலையில், அவரைப்பற்றி என்ன கருத்து சொல்லமுடியும்?''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டாக்டர் கிருஷ்ணசாமி (தலைவர், புதிய தமிழகம் கட்சி )

''தி.மு.க. - அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்பது இங்கே நீண்டகாலமாக இருந்துவருகிற கருத்துதான். இதற்கு அடித்தட்டிலிருந்தே மாற்றம் வரவேண்டும் என்ற ரஜினிகாந்தின் எதிர்பார்ப்பும் சரிதான். அடுத்ததாக அவர் சொல்லுகிற 'கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு இன்னொரு தலைவர்' என்பது ரஜினிகாந்தின் அரசியல் பாதையாக இருக்கிறது. இதைப்பற்றி நாம் விமர்சனம் ஏதும் செய்யமுடியாது. மற்றபடி இதையெல்லாம் அவர் எப்படிச் செயல்படுத்தப்போகிறார் என்றுதான் பார்க்கவேண்டும்!''

ரஜினி
ரஜினி

மல்லை சத்யா (துணைப் பொதுச்செயலாளர், ம.தி.மு.க)

"ஸ்டெர்லைட்டுக்காக மக்கள் உயிரைக்கொடுத்துப் போராடியதைக் கொச்சைப்படுத்திப் பேசியவர் ரஜினிகாந்த். ஆனால், இப்போது `மக்களிடையே எழுச்சி உருவாகவேண்டும்' என்கிறார்."

"நாடு யாரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது? யாருக்கு எதிராக எழுச்சி - புரட்சி உருவாகவேண்டும்? லெனின், மாவோ, ஃபிடல் காஸ்ட்ரோ, யாசர் அராஃபத் என உலக வரலாற்றில் அத்தனை தலைவருமே புரட்சிக்குத் தலைமையேற்றுத்தான் ஆட்சிப் பொறுப்பிலும் வந்தமர்ந்தனர். எனவே, 'இது நியாயம், அது அநியாயம்' என்று சுட்டிக்காட்டி மக்களிடையே எழுச்சியை ரஜினிகாந்த்தான் உருவாக்கவேண்டும். அப்படியான புரட்சிக்கு வடிவமோ கருத்தோ கொடுக்காமல், வெறுமனே திரைப்படத்தில் மட்டுமே வந்துபோவதல்ல அரசியல்!

எனவே, 'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார், நமக்கு வாழ்வு கிடைக்கும்' என்று இதுநாள்வரையிலும் நம்பியிருந்தவர்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு மேலும் மன அழுத்தத்தை உண்டாக்கும். அதேசமயம், 'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், அரசியலில் நமக்கு அழிவு உண்டாகிவிடுமோ' என்று அஞ்சிக்கொண்டிருந்த சிறு கட்சியினர் இனி அந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடுவர்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வானதி சீனிவாசன் ( பொதுச்செயலாளர், தமிழக பா.ஜ.க)

"தெளிவான, தீர்க்கமான அரசியல் முடிவை ரஜினிகாந்த், இன்னும்கூட எடுக்கவில்லை. துண்டு துண்டான தன்னுடைய கருத்துகளைச் சொல்லக்கூடிய நபராக மட்டுமே இருக்கிறார். அரசியல் கட்சி ஆரம்பிப்பதில் உள்ள சவால் மற்றும் சுற்றியுள்ள அரசியல் சூழல்களை எல்லாம் புரிந்து வைத்திருக்கிறார். ஆனால், 'சிஸ்டம் சரியில்லை' என்ற ஒற்றை வார்த்தையின் வாயிலாக எல்லாவற்றையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படிதான் ஓர் அரசாங்கம் இயங்கமுடியும், தேர்தல் நடத்தமுடியும், அரசியல் கட்சிகள் இயங்க முடியும். ஆக, சிஸ்டம் மாறவேண்டும் என்றால், எந்த சிஸ்டத்தை அவர் குறிப்பிடுகிறார்? நடைமுறையில் இருக்கக்கூடிய தேர்தல் குறைபாடுகளைக் களையச் சொல்கிறாரா அல்லது இன்று இயங்கிக்கொண்டிருக்கிற இந்த அரசாங்கத்தின் அமைப்பையே மாற்றச் சொல்கிறாரா?

கம்யூனிஸ்டுகள் சொல்கிற 'சிஸ்டம்' மாற்றம் என்பது புரட்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ரஜினிகாந்த் சொல்கிற சிஸ்டம் மாற்றம் என்ன என்பது பற்றி நம்மால் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுதான் இங்கிருக்கிற தேர்தல் அரசியல் வாயிலாக ஆட்சி அதிகாரத்தைப் பெற்று மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால், இதுகுறித்து ரஜினிகாந்தின் பார்வை எப்படியிருக்கிறது என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

தி.மு.க - அ.தி.மு.க என இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தவேண்டும் என்கிறார். அப்படியான ஒரு மாற்றத்தை எதிர் நோக்கித்தான் ஒரு மாபெரும் கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற கடந்த நான்கைந்து தேர்தல்கள், 'ஆட்சி அதிகாரத்துக்கு யார் வரக்கூடாது' என்ற அடிப்படையில்தான் நடந்து முடிந்திருக்கிறது. எனவே, ரஜினிகாந்த் தனது நிலையை இன்னும் முழுமையாகத் தெளிவாக்கவில்லை என்பதுதான் என் கருத்து!''

வானதி சீனிவாசன் - வன்னி அரசு - ஆர்.பி.உதயகுமார்
வானதி சீனிவாசன் - வன்னி அரசு - ஆர்.பி.உதயகுமார்

வன்னி அரசு (துணைப் பொதுச்செயலாளர்,வி.சி.க)

"அண்மையில், 'வயதானவர்கள் போராட்டத்துக்கு வரவேண்டாம்; பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்துகொள்ளுங்கள்' என்ற அர்த்தத்தில், உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் ஒரு பதிவு போட்டார். அப்போது, 'ரஜினிகாந்தைக் குறிப்பிட்டுத்தான் இந்தப் பதிவு' என்று அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இப்போது ரஜினிகாந்தே, 'வயதானவர்கள் அரசியலுக்குள் வரவேண்டாம்' என்று ஒப்புக்கொள்கிறார். மக்களுக்கு நல்லது செய்வதற்காக, பொதுச்சேவையில் ஈடுபட வயது என்பது தடையே இல்லை. இதுகாலம்வரையிலும் ரஜினிக்குத் தரகு வேலை பார்த்துவந்த தரகு வியாபாரிகளுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றம்."

ஆர்.பி.உதயகுமார் (தமிழக வருவாய்த்துறை அமைச்சர்)

''1972-ல் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. அவருக்குப் பிறகு ஜெயலலிதா, இப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எனத் திறமைமிக்க தலைவர்களால் கட்சியும் ஆட்சியும் வலிவோடும் செறிவோடும் வழிநடத்திச் செல்லப்படுகிறது. இந்த ஆட்சியின் மக்கள் பணி தொடரவேண்டும் என்றுதான் மக்களும் எங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார்கள். பழசைப் புகழ்ந்துபேசினால், புதுசுக்கு மவுசு இருக்காது. பழசின் புகழ்பாடினால், புதுசுக்கான தேவையே இருக்காது. எனவே, புதிதாக அரசியலுக்குள் வர நினைக்கிறவர்களிடமிருந்து எங்களுக்கான பாராட்டுகளை எதிர்பார்க்க முடியாது.

69 சதவிகித இடஒதுக்கீடு எனும் சமூக நீதி, பெண்ணுரிமைப் பாதுகாப்பு, கிராமப் பொருளாதார முன்னேற்றம், கல்வி என எல்லாத் திட்டங்களிலும் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கே அ.தி.மு.க ஆட்சிதான் காரணம்!''

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ஃப்ரான்சிஸ் பாஸ்டியன் (ரஜினி மன்ற சமூக ஆர்வலர்)

''1996-ல் த.மா.கா எனும் கட்சியை ஆரம்பித்து முப்பதே நாள்களில் தேர்தல் வெற்றி பெற்று, ஆட்சி பீடத்திலும் வந்தமர்ந்தார்கள். அப்படியிருக்கும்போது 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுதாக ஒரு வருடம் இருக்கிறது. இந்தக் காலகட்டத்துக்குள் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான கால அவகாசம் நிறையவே இருக்கிறது. மற்ற கட்சிகளிலுள்ளவர்களும்கூட இந்தப் புதிய அரசியல் அமைப்புக்குள் வருவார்கள். அப்படிப்பட்ட காலச்சூழலைத்தான் சூப்பர் ஸ்டாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுவரையிலும் ரசிகர்கள் அனைவரும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம்.

'கட்சி வேறு; ஆட்சி வேறு' என்று சூப்பர் ஸ்டார் சொல்வதற்குக் காரணம் நாட்டை வழிநடத்திச் செல்வதற்கு நல்ல படித்த, அனுபவமிக்க வல்லுநர்களும் தேவை என்பதற்காகத்தான். கூடவே, சமுதாயப் பொறுப்புகளைத் திறம்பட நடத்திச் செல்லும் பொறுப்பை இளம் வயதினரிடமிருந்து எதிர்பார்க்கிறார். இப்படியான நோக்கங்களோடு தகுதியான நபர்களை நமது புதிய அரசியல் அமைப்பில் தேர்ந்தெடுத்துக்கொள்கிற, உருவாக்குகின்ற கால அவகாசம்தான் இந்தக் கால நேரம்.

இன்றைய காலகட்டத்தில், பொருளாதாரம், சுகாதாரம் என நாட்டில் சில பின்னடைவுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதையெல்லாம் பின்னாளில் சரிசெய்கிற விதமாக ஆற்றல்மிக்க வல்லுநர்களும் இளைஞர்களும் நமது புதிய அரசியல் அமைப்பின்மூலம் கண்டிப்பாக உருவாக்கப்படுவார்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism