Published:Updated:

`அரசு திட்டத்தைச் செயல்படுத்த எம்.எல்.ஏ-வே தடையாக இருக்கிறார்!' - கொதிக்கும் விவசாயிகள்

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

”தூத்துக்குடியில் மேல்மாந்தை கண்மாயை தூர்வாரிட எங்க தொகுதி எம்.எல்.ஏ சின்னப்பன் தடையாக இருக்கிறார்” என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, விவசாயிகள் குடிமராமத்து பணி செய்தல், குளங்கள் தூர் வாருதல், பயிர் இழப்பீடு, படைத் தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர். இதில், விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள மேல்மாந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியரை முற்றுகையிட்டு மேல்மாந்தை கண்மாயை தூர்வார கோருவது தொடர்பாக விளக்கம் அளிக்க அனுமதி கேட்டனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

``உங்களுக்கான நேரம் ஒதுக்கும்போது பேசுங்கள்” என ஆட்சியர் கூறியதும் கோஷம் எழுப்பியபடியே அரங்கைவிட்டு விவசாயிகள் வெளியேறினார்கள். இதுகுறித்து மேல்மாந்தைக் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விவசாயியிடம் பேசினோம்,``மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் குடிமராமத்துப் பணி மேற்கொள்வதற்காக எங்க ஊருல இருக்க மேல்மாந்தை பெரிய கண்மாய்க்குளம் தேர்வு செய்யப்பட்டது. குடிமராமத்து பணிக்காக ரூ.80 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தக் குளத்தை தூர் வாருவது தொடர்பாக `மேல்மாந்தை கண்மாய் நீரைப் பயன்படுத்துவோர் சங்கம்' என்ற பெயரில் சங்கத்தையும் அமைத்து, அதைப் பதிவும் செய்துவிட்டோம். ஆனால், சங்கம் பதிவு செய்து 20 நாள்களுக்கு மேல் ஆகியும் இதுவரை மேல்மாந்தை பெரிய கண்மாய் குளத்தில் குடி மராமத்து பணி செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. எங்களது சங்கம் குடி மராமத்து பணிகளைச் செய்வதற்குத் தயாராக உள்ளது. ஆனால், இந்தச் சங்கத்தைக் கலைத்துவிட்டு, புதிதாக ஒரு சங்கத்தை தொடங்கிட எங்களது விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ சின்னப்பன் முயற்சி செய்து வருகிறார்.

விவசாயிகள் கூட்டம்
விவசாயிகள் கூட்டம்

முறையாகப் பதிவு செய்து சான்றிதழ் பெற்ற சங்கத்தை எப்படிக் கலைக்க முடியும்? மழைக்காலம் வருவதற்கு முன்னர் குளம் தூர்வாரும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். மேல்மாந்தை கண்மாயை விரைந்து தூர்வாரிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமராமத்துப் பணியில் தாமதம் ஏற்பட்டாலோ, எம்.எல்.ஏ-வின் தலையீடு இருந்தாலோ விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர். குடிமராமத்துப் பணிக்கு எம்.எல்.ஏ தடையாக இருப்பதாக விவசாயிகள் எழுப்பிய குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டது.