Published:Updated:

திருவாரூர்: கருணாநிதியின் ஊரிலேயே செயல்படாமல் இருக்கும் உழவர் சந்தை - கண்டுகொள்ளுமா அரசு?!

உழவர் சந்தை - திருவாரூர்
News
உழவர் சந்தை - திருவாரூர்

திருவாரூரில் மிக மோசமான நிலையில், பராமரிப்பின்றி கொசுக்களின் இருப்பிடமாக இருக்கிறது உழவர் சந்தை எனக் கண்ணீர் வடிக்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், தேங்காய் போன்ற உணவுப் பொருள்களை இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக மக்களிடமே விற்பனை செய்ய வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு, 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் `உழவர் சந்தைத் திட்டம்'. தமிழக அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் அமைக்கப்பட்ட இந்த உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தத் திட்டம் வரக் காரணமாக இருந்த கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரிலேயே மிக மோசமான நிலையில், பராமரிப்பின்றி கொசுக்களின் இருப்பிடமாக இருக்கிறது உழவர் சந்தை எனக் கண்ணீர் வடிக்கிறார்கள் விவசாயிகள்.

திருவாரூர்  உழவர் சந்தை
திருவாரூர் உழவர் சந்தை

திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஒட்டியவாறு இருக்கிறது உழவர் சந்தை. ஆரம்பத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்த சந்தை, நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் வெறும் இரண்டு கடைகள் மட்டுமே உள்ளே செயல்பட்டு வந்தன. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக அவர்களும் காலிசெய்ய, இப்போது உள்ளே ஒரு கடைகூட செயல்படவில்லை. கட்டடங்களின் மேற்கூரைகள் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் இருப்பதாலும், மழைத் தண்ணீர் தேங்கிச் சாக்கடை போலக் காட்சியளிப்பதாலும் உள்ளே விவசாயிகள் யாரும் விற்பனை செய்ய வருவதே இல்லை. உழவர் சந்தைக்கான அட்டை வைத்திருக்கும் விவசாயிகள், சந்தைக்கு வெளியே ரோட்டோரத்தில் கடை போடும் அவலநிலை உண்டாகியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருவாரூருக்குப் பக்கத்தில் உள்ள மருதப்பட்டினம், பழையவலம் போன்ற ஊர்களில் உள்ள விவசாயிகள் வேளாண் பொருள்களை இந்த சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு தயாராக இருந்தாலும், சந்தை மிக மோசமான நிலையில் இருப்பதால், அவர்களின் ஊர்களிலேயே விற்பனை செய்ய கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ரோட்டோரத்தில் கடைகள்
ரோட்டோரத்தில் கடைகள்

இது குறித்து, அங்கு தேங்காய் கடை வைத்துள்ள விவசாயி கிருஷ்ணன் பேசும்போது, ``உழவர் சந்தையைச் சுத்தி பெருவியாபாரிகளோட ஆக்கிரமிப்பு இருக்குறதால, இங்க உழவர் சந்தை இருக்குறதே பலபேருக்குத் தெரியுறதில்ல. அதேபோல, உள்ள ஒரு சில கடைகளுக்கு மட்டும்தான் கரண்ட் வசதியும் இருக்கு. எப்போ வேண்டும்னாலும் மேற்கூரை இடிஞ்சி விழுற மாதிரி இருந்தா, எப்படிப் பயம் இல்லாம வியாபாரம் செய்யமுடியும். வேற, வழியில்லாமதான் நாங்க ரோட்டுல கடை போட்டிருக்கோமே தவிர, எங்களுக்கு இங்க வச்சு வியாபாரம் செய்ய விருப்பம் இல்ல. இன்னும் ஒரு வாரத்துல பொங்கல் வருது, அதுக்குள்ள உழவர் சந்தயைச் சரிபண்ணிக் கொடுத்தா புண்ணியமாப் போகும்'' என்கிறார் பாவமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``2018- ம் வருஷம் அடிச்ச கஜா புயல்ல இந்த சந்தை முழுசா சேதமாகிப் போயிடுச்சு. நாங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிட்ட அடிக்கடி மனுவும் கொடுத்துப் பாத்துட்டோம், அவங்களும் மறுநாள் வந்து ஆய்வு பண்ணிட்டு போவாங்க. ஆனா, ஒண்ணும் நடக்காது. இப்போ வரைக்கும் விவசாயிகள் எல்லாரும் பக்கத்துல இருக்குற ரோட்டுலதான் வியாபாரம் பண்ணிட்டு இருக்காங்க. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வேற வருது. அதுக்குள்ள மாவட்ட நிர்வாகம் இந்த சந்தையைச் சீரமைச்சுக் கொடுக்கணும். இல்லைனா, தற்காலிகமா அவங்களுக்கு வேற ஒரு இடத்துலயாவது உழவர் சந்தையை அமைச்சுக் கொடுக்கணும்'' என வேண்டுகோள் விடுக்கிறர், விவசாய சங்கத்தின் நகரச் செயலாளரான ராஜசேகர்.

திருவாரூர்  உழவர் சந்தை
திருவாரூர் உழவர் சந்தை

திருவாருர் உழவர் சந்தை குறித்து, வேளாண் துணை இயக்குநர் லட்சுமி நாராயணனிடம் பேசினோம்.

``திருவாரூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. கஜா புயலின்போது சேதமடைந்த, இந்த திருவாரூர் உழவர் சந்தையைச் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சந்தையைச் சீரமைக்க தேவைப்படும் தொகை மதிப்பீடு செய்யப்பட்டு வேளாண் இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில், திருவாரூர் உழவர் சந்தை சீரமைக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படும்" என்றார் அவர்.

வருகின்ற தைக்குள்ளாவது வழி பிறக்குமா எனக் காத்திருக்கிறார்கள் திருவாரூர் பகுதி விவசாயிகள். கண்டுகொள்ளுமா அரசு?!