Published:Updated:

டெல்லி: `எங்களைத் தாக்கியவர்கள் விவசாயிகள் அல்ல..!’ -காயமடைந்த காவலர்கள் சொல்வது என்ன?

டெல்லி செங்கோட்டை வன்முறை
டெல்லி செங்கோட்டை வன்முறை ( ANI )

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் தங்களைத் தாக்கியது ரௌடிகள்தான், விவசாயிகள் இல்லை என்று காயமடைந்த காவலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களையும் தாண்டி போராட்டம் நடத்திவருகிறார்கள். மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர் தோல்வியிலேயே முடிந்தன. இதையடுத்து, குடியரசு தின விழாவில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்
AP

கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணி, அனுமதி வழங்கப்பட்ட பாதையில் சென்றுகொண்டிருந்தது. திடீரென பேரணியிலிருந்த சிலர், பேரணியின் பாதையிலிருந்து விலகி செங்கோட்டை நோக்கிச் சென்றனர். இதனால் டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்தது.

இந்தக் கலவரத்தில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயம் அடைத்துள்ளனர். பல காவலர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கலவரம் தொடர்பாக 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 19-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட காவலர்கள் தங்களைத் தாக்கியது விவசாயிகள் இல்லை; ரௌடிகள்தான் என்று கூறியுள்ளனர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்
AP

டெல்லி காவல்துறையில் பெண் காவலராகப் பணியாற்றும் ரேகா குமாரி, ``கலவரத்தில் காவலர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள முயன்றனர். நானும் என்னைத் தற்காத்துக்கொள்ள முற்பட்டேன். அங்கிருந்த இரும்பு கேட் என்மேல் விழுந்தது. என்னைக் காப்பாற்றுமாறு கூறியபோதும், பத்து நிமிடங்களுக்கு பிறகே என்னை மீட்டனர்" என்றார்.

இந்தக் கலவரம் குறித்து, பாதிக்கப்பட்ட டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஜொகீந்தர் ராஜ், ``எனது பணிக் காலத்தில் நான் பல்வேறு கலவரங்களையும், போராட்டங்களையும் சந்தித்துள்ளேன். ஆனால், இந்தக் கலவரம் போன்ற ஒன்றைப் பார்த்தது கிடையாது. என் முதுகு, தோள்பட்டை, கைகள் என்று என்னைக் கொடூரமாகத் தாக்கினர். என்னை வாளால் வெட்டவும் முற்பட்டனர். அந்த இடத்திலிருந்து நான் தப்பித்தேன். எங்கள்மீது தொடர்ந்து கற்களைக்கொண்டு தாக்கினர்" என்று கூறியுள்ளார்.

விவசாயிகள்
விவசாயிகள்
ANI

கலவரத்தின்போது செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடியை ஏற்றியதாக நடிகர் தீப் சித்து ஒப்புக்கொண்டிருக்கிறார். இவர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார். நடிகர் சன்னி தியோல் தற்போது 1எனக்கும் நடிகர் தீப் சித்துவுக்கும் தொடர்பில்லை’ எனத் தெரிவித்திருக்கிறார்.

செங்கோட்டையில் மதக்கொடி; பா.ஜ.க தொடர்பு! - வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் தீப் சித்து யார்?

இந்தக் கலவரம் தொடர்பாகப் பேசிய விவசாயிகள், `இந்தப் போராட்டத்துக்கும், விவசாயிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பேரணியில் கலவரக்காரர்களை, பா.ஜ.க-வினரும் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு