Published:Updated:

`என்ன வேண்டும் என்று தெரியாமலேயே விவசாயிகள் போராடுகின்றனர்!’ - நடிகை ஹேமமாலினி

ஹேமமாலினி
ஹேமமாலினி

டெல்லியில் விவசாயிகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியாமலேயே போராடுவதாக பா.ஜ.க எம்.பி-யும், நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்திருக்கிறார்.

``டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதையும், விவசாயச் சட்டங்களால் என்ன பிரச்னை என்றும் தெரியாமல் இருக்கின்றனர். இதன் மூலம் யாரோ சொல்வதால்தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. எனவேதான் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகும் இதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை” என்று நடிகையும், மதுரா தொகுதி பா.ஜ.க எம்.பி-யுமான ஹேமமாலினி தெரிவித்திருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகையில், ``பஞ்சாப்பில் மொபைல் டவர்களைச் சேதப்படுத்துவது நல்லதல்ல. பஞ்சாப் அதிகமான இழப்புகளைச் சந்தித்திருக்கிறது.

போராட்டக் களத்தில் விவசாயிகள்
போராட்டக் களத்தில் விவசாயிகள்

விவசாயிகள் மொபைல் டவர்களை சேதப்படுத்துவதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. ஆனால், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்கான கொள்கை இல்லாமல் இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி குறித்துக் குறிப்பிட்ட ஹேமமாலினி, ``கொரோனாவுக்கு தடுப்பூசி வந்திருப்பது நல்லது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன். இந்தத் தடுப்பூசி குறித்தும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருக்கின்றன. அரசு என்ன சொன்னாலும் அதை எதிர்க்கட்சிகள் எதிர்த்து குரல் கொடுக்கின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுடன் ஏழு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளும், மத்திய அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் இதில் தலையிட்டு மத்திய அரசின் சட்டங்களுக்குத் தடை விதித்திருப்பதோடு, விவசாயச் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது. ஆனால், அந்த கமிட்டியில் மத்திய அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பதால், அதை ஏற்க முடியாது என்று கூறி விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு