Published:Updated:

நெல்லை: வேளாண்துறை பட்ஜெட் கருத்துக்கேட்பு; அமைச்சரிடம் முறையிட்ட 5 மாவட்ட விவசாயிகள்!

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற 240 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக, ஐந்து மாவட்ட விவசாயிகள் பங்கேற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நெல்லை: வேளாண்துறை பட்ஜெட் கருத்துக்கேட்பு; அமைச்சரிடம் முறையிட்ட 5 மாவட்ட விவசாயிகள்!

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற 240 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக, ஐந்து மாவட்ட விவசாயிகள் பங்கேற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Published:Updated:
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வேளாண்துறை பட்ஜெட் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் பங்கேற்ற கருத்துக்கேட்பு கூட்டம் நெல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில், விவசாயப் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் சபாநாயகர் அப்பாவு
நலத்திட்ட உதவிகள் வழங்கும் சபாநாயகர் அப்பாவு

கூட்டத்தில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்காக இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். அவரது வழியில் வந்த ஸ்டாலின் தலைமையிலான அரசு, 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. பனைத் தொழிலை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்த ஆட்சியில் தொடர்ந்து விவசாயிகளுக்காகச் செயல்படுத்தப்பட்டுவருகின்றன” என்றார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஏர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வேளாண்துறை பட்ஜெட்டுக்காக நடத்தப்பட்ட கருத்துக்கேட்புக் கூட்டத்தில் விவசாயிகளிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கருத்துகளையும் பட்ஜெட்டில் இடம்பெறச் செய்தோம். அதை விவசாயிகள் பாராட்டிவருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் 6.4 கோடி மதிப்பில் வாழைத்தார் விற்பனை மையம் அமைக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 12,500 ஊராட்சிகளில் 5,209 ஊராட்சிகளில் அனைத்து வேளாண் கிராம வளர்ச்சித் திட்டத்தில் கிராமத்துக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்துவருகின்றன. தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி ரூ.5 உயர்த்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு 2,500 ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற 240 அறிவிப்புகள் திட்டங்களாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கடந்த வேளாண்துறை நிதிநிலை அறிக்கையில், நான்கு புதிய வேளாண் கல்லூரிகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்
விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்

வாழை மற்றும் எலுமிச்சைப்பழங்களிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பதற்கான மையங்கள் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அவற்றை கவனத்தில்கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்படும். மலைப்பகுதிகளுக்கு அருகிலுள்ள விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். வேளாண் பயிர்களைச் சேதப்படுத்தும் வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த வனத்துறை அமைச்சருடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மேயர் சரவணன், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, வேளாண்மை ஆணையர் சமயமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.