சேலம் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கம் சார்பாக கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், ``ஒப்பந்தம் மற்றும் வளர்ப்பு தொகை அடிப்படையில் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட கொட்டகை மூலம் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கோழி வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் மஞ்சு, கரிமூட்டை போன்ற இடுபொருட்கள் கடுமையான விலை உயர்வு அடைந்துள்ளது. இதனை சரிக்கட்ட வேண்டுமென்றால் எங்களுக்கு போதிய வருவாய் கிடைத்தால் மட்டுமே ஈடுக்கட்ட முடியும், ஆனால் ஒப்பந்தம் செய்திருக்கும் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களின் முறைபடுத்தப்படாத குறைந்தபட்ச வளர்ப்புத் தொகை மற்றும் அடுக்கு விகிதம், தரமற்ற தீவனம் போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கான உரிய தொகையை பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்க தலைவர் ஜெயக்குமாரிடம் பேசினோம், ``கறிக்கோழி வளர்ப்பில் ஒப்பந்த நிறுவனங்களை விட விவசாயிகளுக்கு தான் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. காரணம், ஒப்பந்த நிறுவனங்கள் கோழி குஞ்சுகளை வளர்க்க கொடுத்ததுடன் அவர்களுடைய பங்களிப்பு முடிந்துவிட்டது. அதற்கு தேவையான உபரி பொருட்கள் மருத்துவ செலவுகள் அனைத்தும் விவசாயிகள் தலையில் தான் விழுகிறது. கோழி குஞ்சுகள் வழங்கும்போது தரமில்லாத குஞ்சுகளை கொடுத்துவிட்டு செல்கின்றனர். அதற்கு எதாவது நோய்வாய்பட்டு இறந்தாலோ, நாய், கீரிகள் பிடித்துச்சென்றாலோ அதற்கான இழப்பீட்டு தொகையை எங்களிடமிருந்து பெற்றுச்செல்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விலைவாசி அதிகரித்துள்ளது. இதனால் கோழிகளுக்கான உபரி பொருட்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனை ஒரு விவசாயி சமாளிக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு போதிய வளர்ப்புத் தொகை ஒப்பந்த நிறுவனங்கள் கொடுத்தால் மட்டுமே முடியும். ஆனால், எந்தஒரு தனியார் ஒப்பந்த நிறுவனங்களும் இதற்கு முன் வருவதில்லை. ஏற்கனவே விவசாயி வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் திகைத்து நிற்கும் வேளையில் இப்படி மேலும்மேலும் கடனாளியாக மாற்றுவதற்கான வேலைகளை கார்ப்ரேட் நிறுவனங்கள் செய்து வருகிறது. கோழி குஞ்சுகளை மட்டும் கொடுத்துவிட்டு எங்களுடைய வருமானத்தையும் சேர்த்து கொள்ளையடிக்கும் விதமாக கோழிவளர்ப்பு நிறுவனங்கள் செயல்படுகிறது.

இதுகுறித்து தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தைக்காக அழைப்புவிடுப்பதாக தெரிவித்துள்ளனர்” என்றார்.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் புருஷோத்தமனிடம் பேசினோம், “சம்பந்தப்பட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் அளித்த மனுவினை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஒப்பந்ததாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் வளர்ப்புத் தொகை பிரச்னை என்பதால் இதனை நாங்கள் முடிவு எடுக்கமுடியாது என்றார்.