Election bannerElection banner
Published:Updated:

``விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு... பா.ஜ.க-வைத் தோற்கடியுங்கள்!“ - தேர்தல் களத்தில் விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

உலகின் கவனத்தை ஈர்த்த டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் குறைந்திருப்பதுபோலத் தெரிகிறது. ஆனால், தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராகக் களமிறங்க விவசாயிகள் தயாராகிவருகிறார்கள்.

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்தப் போராட்டம் மார்ச் 6-ம் தேதி 100-வது நாளை எட்டப்போகிறது. பஞ்சாப், ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சிங்கு உள்ளிட்ட டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். விவசாய சங்கங்களின் அகில இந்திய போராட்டக்குழுவில் சுமார் 500 விவசாய சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அமைப்பின் பிரதிநிதிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்தியது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட வேண்டும் என்பது போராடும் விவசாயிகளின் முக்கியக் கோரிக்கை. ஆனால், அந்தச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவரத் தயாராக இருப்பதாகக் கூறும் மத்திய அரசு, அந்தச் சட்டங்களை ஒருபோதும் வாபஸ் பெற முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது. இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒருகட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துவிட்டது.

எனவே, போராடும் விவசாயிகளை மத்திய அரசு தற்போது கண்டுகொள்ளாமல் இருக்கிறது. டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடிவந்தாலும், அந்தப் போராட்டம் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனாலும், தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவுசெய்துள்ளனர்.

இது தொடர்பாக, சிங்கு எல்லையில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து, மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நடைபெற்றுவரும் போராட்டம், அடுத்தகட்டத்தை நோக்கி நகரப்போகிறது என்று விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப், ஹரியானா, உ.பி ஆகிய மாநிலங்களைத் தாண்டி, இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டத்தை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ள விவசாய அமைப்புகள், ‘குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுவோம்’ என்ற பிரசாரத்தைப் பரவலாக முன்னெடுத்துச்செல்வதற்கு திட்டமிட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்ற பிரசாரத்தை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலில் தொடங்குவதற்கு விவசாயிகள் தயாராகிவருகின்றனர்.

மேலும், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைக்காகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது அரசியல்ரீதியான திருப்பத்தை நோக்கி நகர்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகப் பிரசாரத்தில் இறங்குவது என்று விவசாய சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.

அந்தப் பிரசாரத்துக்கான குழுக்கள் தற்போது தயாராகிவருகின்றன. ``விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் பா.ஜ.க-வின் வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம்” என்று விவசாய அமைப்புகளின் தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

``விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவந்த பா.ஜ.க-வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடியுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்போகிறோம். மார்ச் 12-ம் தேதி கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்துடன் இந்தப் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கிறோம்” என்று அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த யோகேந்திர யாதவ் கூறியிருக்கிறார்.

கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் இடதுசாரி விவசாயிகள் அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலுவாக இருக்கிறது. அவர்களின் ஆதரவுடன் இந்த இரண்டு மாநிலங்களிலும் தீவிரமான பிரசாரத்தை மேற்கொள்ள போராட்ட ஒருங்கிணைப்புக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகத்திடம் பேசினோம்.

சண்முகம்
சண்முகம்

``இந்தியா முழுவதும் மார்ச் 15-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒருங்கிணைப்புக்குழு முடிவுசெய்துள்ளது. மார்ச் 15-ம் தேதி கே.எம்.பி எக்ஸ்பிரஸ் வே என்கிற முக்கிய சாலையை மறிப்பது என்றும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கறுப்புக்கொடி ஏற்றுவது என்றும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் என்பதால், அன்றைய தினம் பெண் விவசாயிகள் தினமாக அனுசரிக்க ஒருங்கிணைப்புக்குழு முடிவுசெய்துள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் ஏராளமான பெண் விவசாயிகள் பங்கேற்கும் பேரணிகளும் போராட்டங்களும் நடைபெறும். அது தவிர, தனியார்மயம் மற்றும் கார்ப்பரேட்மயம் ஆகியவற்றுக்கு எதிரான தினமாக மார்ச் 15-ம் தேதியை அனுசரிக்கவிருக்கிறோம்.

மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை: 14 வயதில் பிரசாரம் முதல் 2021 தேர்தல் வரை!-எப்படிச் செயல்படுகிறார்?

அன்றைய தினம், தொழிற்சங்கங்களுடன் இணைந்து வீதிகளில் இறங்கிப் போராட்டதை நடத்தவிருக்கிறோம். இந்தப் போராட்டத்தை தமிழகத்தில் முழுவீச்சுடன் நடத்தவிருக்கிறோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் ஒன்றிய அளவில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள். இது அறுவடைக் காலம் என்பதால் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் பலர் அறுவடைக்காகச் சென்றுள்ளனர். இன்னும் சில வாரங்களில் அறுவடை முடிந்தவுடன் மீண்டும் டெல்லியை நோக்கிப் படையெடுப்பார்கள்” என்றார் பெ.சண்முகம்

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரியில் கடுமையான குளிரையும் பனியையும் மீறி விவசாயிகள் போராட்டத்தைத் தொடந்தார்கள். தற்போது கோடைக்காலம் தொடங்குகிறது. எனவே, டெல்லி எல்லைகளில் முகாம்கள் அமைத்து போராட்டத்தைத் தொடரும் விவசாயிகள், கோடையில் வெயிலைச் சமாளிப்பதற்கு ஏர்கூலர்கள் உள்ளிட்ட குளிர்சாதனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இது அறுவடைக் காலம் என்பதால் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் பலர் அறுவடைக்காகச் சென்றுள்ளனர். அறுவடை முடிந்தவுடன் விரைவில் போராட்டக்களமான டெல்லி எல்லைக்கு அவர்கள் திரும்புவார்கள் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை விற்கும் சூழல் ஏற்படுத்தப்படாவிட்டால், உத்தரப்பிரதேசம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு