Published:Updated:

`காஷ்மீருக்குள் சீனா வந்தால்கூட பரவாயில்லை!’ - ஃபரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடும் மோதல் போக்கு நிலவிவருகிறது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது. இதற்கிடையே ஃபரூக் அப்துல்லாவின் கருத்து கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு ஓராண்டு கடந்து விட்டது. மத்திய அரசின் இந்த முடிவு காரணமாக அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்கலாம் என்பதால், ஜம்மு காஷ்மீர் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல்வேறு கட்சித் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டனர். தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகளும் வழங்கப்பட்டுவருகின்றன.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர், ``மத்திய அரசு, காஷ்மீரில் வசிக்கும் மக்களிடம் போய்க் கேட்கட்டும். அவர்கள் தங்களை இந்தியர்களாக கருதவில்லை. இந்திய அரசின் மீது கடும் விரக்தியில் இருக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். ஆனால், ஒன்றைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். காஷ்மீர் மக்கள் தங்களை பாகிஸ்தானியர்கள் என்றும் நினைக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானைத் தேர்வு செய்யவில்லை. மாறாக, காந்திவழியில் இணைய விரும்பினார்கள். அதனால்தான் இந்தியாவுடன் இணைந்தனர். அவர்கள் காந்தியின் இந்தியாவைத்தான் தேர்ந்தெடுத்தனர். மோடியின் இந்தியாவை அல்ல.

சீனாவில் இஸ்லாமியர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை இங்குள்ள மக்கள் அறிவார்கள். ஆனாலும், தற்போதிருக்கும் சூழலுக்கு சீனாகூட காஷ்மீருக்குள் வந்தால் பரவாயில்லை என்ற மனநிலையில்தான் காஷ்மீர் மக்கள் இருக்கிறார்கள்” என்றார்.

ஃபருக் அப்துல்லா
ஃபருக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லாவின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடும் மோதல் போக்கு நிலவிவருகிறது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்துவருகிறது. இந்தநிலையில் ஃபரூக் அப்துல்லாவின் காஷ்மீர் மக்கள் குறித்த கருத்து கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. `யாருக்கு இந்த நாட்டின் உணர்வு இல்லையோ, அவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறலாம். மற்ற மக்களையும் சேர்த்துப் பேச வேண்டாம்’ , `ஃபரூக் எப்போது சீனா குடியுரிமை பெற்றார்’ உள்ளிட்ட பல கமென்ட்களைப் பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரைக்கு