கர்நாடக மாநிலம், கோலார் தாலுகாவிலுள்ள கென்தட்டி என்ற கிராமத்தின் ஏரியில் ஒரு குழந்தை மிதந்துகொண்டிருந்தது. இது குறித்து கிராம மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். குழந்தையின் உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். குழந்தை யார் என்பது அடையாளம் காணப்பட்டதால், குழந்தையின் தந்தை தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் கருதினர். அதனால் குளத்தில் தேடிப்பார்த்தபோது சடலம் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி குழந்தையின் தந்தை ராகுலைக் கைதுசெய்தனர்.
பெங்களூரில் தன் மனைவி பாவ்யாவுடன் வசித்துவந்தவர் ராகுல் பரமர். 45 வயதாகும் ராகுலுக்கு 2 வயதில் ஒரு மகள் இருந்தார். இது தொடர்பாக ராகுல், ``கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக் கேட்டு தொல்லை செய்வார்கள் என்று கருதி என் மகளுடன் காரில் புறப்பட்டேன். தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் காரை ஓட்டிச்சென்றேன். குளம் இருந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு காரில் சிறிது நேரம் என்னுடைய மகளை கட்டியணைத்து விளையாடினேன். என்னிடம் இருந்த பணத்தில் பிஸ்கெட் வாங்கிக்கொடுத்தேன்.

ஆனால் சாப்பாடு கேட்டு அழுத அவளுக்குச் சாப்பாடு வாங்கிக்கொடுக்க என்னிடம் பணம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே என் மகளை மூச்சுத் திணறடித்துக் கொலைசெய்து, குளத்தில் அவளுடன் நானும் தற்கொலை செய்யும் நோக்கத்தில் குதித்தேன். ஆனால் தண்ணீர் குறைவாக இருந்ததால் என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியவில்லை'' என்று தெரிவித்தார்.
ராகுல் மனைவி பாவ்யா தன்னுடைய கணவர் மற்றும் மகளைக் காணவில்லை என்று கூறி கடந்த 15-ம் தேதியே போலீஸில் புகார் செய்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்துவந்த ராகுலுக்குக் கடந்த ஆறு மாதங்களாக வேலை இல்லை. அதோடு அவரிடமிருந்த பணம் முழுவதையும் பிட்காயினில் இழந்திருக்கிறார்.

இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானார். ராகுல் வீட்டில் தங்க நகைகள் திருட்டுப்போனதாகப் புகார் செய்திருந்தார். விசாரணையில் ராகுல்தான் தங்க நகைகளைத் திருடிவிட்டு, போலி திருட்டு புகார் கொடுத்திருந்தது தெரியவந்தது. மீண்டும் விசாரணைக்கு வரும்படி போலீஸார் எச்சரிக்கை செய்திருந்தனர். அதனால் தன்மீது நடவடிக்கை எடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் ராகுல் இது போன்று செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்'' என்று தெரிவித்தனர்.
குஜராத்தைச் சேர்ந்த ராகுல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பெங்களூருக்கு வந்து குடியிருக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.