Published:Updated:

ஓபிஎஸ் Vs இபிஎஸ்: அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கில் அனல் பறக்கும் வாதம் - யார் கை ஓங்குகிறது?!

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

`வலுவான வாதங்களை முன்வைத்திருக்கிறோம். அதனால் நிச்சயமாக தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை வாங்குவோம்' என எடப்பாடி தரப்பும் `உச்சநீதிமன்றத்துக்கே போனாலும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு மாறாக எதுவும் வரப்போவதில்லை' என ஓ.பி.எஸ் தரப்பும் கூறிவருகின்றன.

ஓபிஎஸ் Vs இபிஎஸ்: அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கில் அனல் பறக்கும் வாதம் - யார் கை ஓங்குகிறது?!

`வலுவான வாதங்களை முன்வைத்திருக்கிறோம். அதனால் நிச்சயமாக தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை வாங்குவோம்' என எடப்பாடி தரப்பும் `உச்சநீதிமன்றத்துக்கே போனாலும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு மாறாக எதுவும் வரப்போவதில்லை' என ஓ.பி.எஸ் தரப்பும் கூறிவருகின்றன.

Published:Updated:
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

``ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது'' என தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்திருக்கிறது. இரு தரப்பு வாதங்களையும் நேற்று எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம்
அதிமுக பொதுக்குழுக் கூட்டம்

`அ.தி.மு.க-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும்' என பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், எடப்பாடி தரப்பால் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி தரப்புக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிவந்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். ஓ.பி.எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர் ஆஜராகினர். தொடர்ந்து எழுத்துபூர்வமாக வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கைப் பொறுத்தவரை, `வலுவான வாதங்களை முன்வைத்திருக்கிறோம். அதனால் நிச்சயமாக தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை வாங்குவோம்' என எடப்பாடி தரப்பும், `உச்ச நீதிமன்றத்துக்கே போனாலும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு மாறாக எதுவும் வரப்போவதில்லை' என ஓ.பி.எஸ் தரப்பும் கூறிவருகின்றன. உண்மையில் தற்போது யார் கை ஓங்கியிருக்கிறது?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் பேசினோம்.

`` எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெளிவான வாதங்களை முன்வைத்துள்ளனர். `கட்சியினர் ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கோரிக்கைவைத்ததாக எந்தப் புள்ளிவிவரமும் இல்லை’ எனவும், `ஒன்றரைக் கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா?’ எனவும் தனி நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பது யூகத்தின் அடிப்படையிலானது என எங்கள் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதேபோல, அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவைக் கூட்டவில்லை என்று தனி நீதிபதி கூறியிருப்பது தவறு எனவும் தெரிவித்தனர். அதேபோல, கட்சி விவகாரங்களைப் பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. அடிப்படைத் தொண்டர்களின் கருத்துகளைப் பெறவில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு எனவும் சுட்டிக்காட்டினர். அதேபோல, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.

பன்னீர்
பன்னீர்

இருவரும் இணைந்து செயல்படுவதால் கட்சிக்குப் பின்னடைவு என்பதால்தான் ஒற்றைத் தலைமையைக் கொண்டு வர முடிவுசெய்திருக்கிறோம். இனிமேல் இருவரும் இணைந்து செயல்பட முன்வர மாட்டார்கள். தனி நீதிபதியின் உத்தரவால், கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துவிட்டதாகவும் வாதங்களை முன்வைத்தனர். அதேபோல, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது, இது விபரீதமானது எனவும் தெரிவித்தனர்.

உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறியிருப்பதாலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என வாதிட்டனர். அதேபோல, ஜூலை 23-ம் தேதி விடியற்காலை இதே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுதான், பொதுக்குழுவில் முன்வைக்கப்படும் விஷயங்கள் குறித்து அஜண்டாவை முன்பே கொடுத்துவிட்டு பொதுக்குழுவை நடத்துங்கள் என்று கூறியிருந்தார்கள். அதன்படி முன்பே அஜண்டா கொடுக்கப்பட்டு, ஓ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுத்தான் பொதுக்குழு நடத்தப்பட்டது. அவர் வராமல் போனதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாவோம்... அதனால், இந்த வழக்கில் நிச்சயமாக எங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். அங்கும் இல்லாவிட்டால் மீண்டும் பொதுக்குழுவை நடத்துவோம்'' என்கிறார்கள்.

தொடர்ந்து பன்னீர்தரப்பு நிர்வாகிகளிடம் பேசினோம்...

``அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக-தான். அடிப்படை உறுப்பினர்களைவிட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறுவது தவறு என்று எங்கள் வழக்கறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவைக் கூட்ட முடியும். அதனால், தலைமைக் கழக நிர்வாகிகள் பெயரில், ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாது எனவும் வாதிட்டனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும், பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலியாகிவிடும் எனக் கட்சி விதிகளில் கூறப்படவில்லை என்றும் எடுத்துக் கூறியிருக்கிறோம். அதேபோல, அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்துவது என செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு பொதுக்குழு ஒப்புதல் வழங்கவேண்டிய அவசியம் இல்லை என்பதையும் முன்வைத்திருக்கிறோம். இந்த வழக்கைப் பொறுத்தவரை தனி நீதிபதி கொடுத்த உத்தரவில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. மீண்டும் அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கே போனாலும் சட்டப்படி எங்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்புவரும். அதில் எந்த மாற்றமும் இல்லை'' என அடித்துச் சொல்கிறார்கள்.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

ஓ.பி.எஸ் தரப்பின் இதே கருத்தைத்தான் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமும் முன்வைக்கிறார். அவர் இது குறித்து அவர் பேசும்போது,

``தனி நீதிபதியின் தீர்ப்பு தொடர்வதற்கு அதாவது ஒ.பி.எஸ்-ஸுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள்தான் இருக்கின்றன. இதேபோல, ஜெயலலிதா காலத்திலும் ஒரு விஷயம் நடந்தது. அதிமுக-வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த திருநாவுக்கரசர் பொதுக்குழுவைக்கூட்டி, `நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர்’ எனத் தீர்மானம் கொண்டுவந்தார். ஜெயலலிதா அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார். அப்போதும் இதேபோல இரு நீதிபதிகள்கொண்ட அமர்வில், பொதுக்குழுவுக்கு பொதுச்செயலாளரைத் தேர்வுசெய்யும் அதிகாரம் கிடையாது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வுசெய்ய முடியும் என மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டனர். அதற்குப் பிறகுதான் திருநாவுக்கரசர் தனிக்கட்சி ஆரம்பித்தார். 25 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த அதே சம்பவம் தற்போது மீண்டும் நடந்துகொண்டிருக்கிறது'' என்றார்.