`அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே லட்சியம்' என்கிற முழக்கத்தோடு டி.டி.வி.தினகரனால் தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் அந்தக் கட்சி கடந்துவந்த பாதை, லட்சியத்தில் அடைந்த முன்னேற்றம், கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்புகள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
2018, மார்ச் 15-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். ஒருபுறம் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தயாராகிக்கொண்டிருக்க, மறுபுறம் மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவித்தார் தினகரன். முதன்முறையாக 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அந்தக் கட்சி கிட்டத்தட்ட ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அதிமுக-வினருக்கு அதிர்ச்சி கொடுத்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காரணம், சிதம்பரம், ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக-வின் வெற்றியை மடைமாற்றியது அமமுக. தொடர்ந்து நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது அ.ம.மு.க. குறிப்பாக, ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வின் வெற்றியை மடைமாற்றியது அமமுக.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதேபோல, 27 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், கண்ணங்குடி, கயத்தாறு ஒன்றியங்களைக் கைப்பற்றியது. அதுவரை தேர்தல் களத்தில் ஓரளவுக்கு செல்வாக்குடனும் கௌரவத்துடனும் வலம்வந்த அமமுக, அடுத்தடுத்த தேர்தல்களில் சறுக்க ஆரம்பித்தது. முதலில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து படுதோல்வியைச் சந்தித்தது. கட்சியின் வாக்குவங்கி சரி பாதியாகக் குறைந்ததோடு மட்டுமல்லாமல், கோவில்பட்டியில் போட்டியிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் தினகரனே தோல்வியைச் சந்தித்தது யாரும் எதிர்பார்க்காதது.

தொடர்ந்து ஒன்பது மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் வெற்றிபெற்றிருக்கிறது அந்தக்கட்சி. தேர்தல் களத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றியை எட்டாவிட்டாலும்கூட, கணிசமான வெற்றியைப் பெற்று களத்தில் நிற்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால், கட்டமைப்புரீதியாக கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்ததைவிட, கடந்த நான்காண்டுகளில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. கட்சி தொடங்கும்போது தினகரனுக்குத் தளபதிகளாகத் தோளோடு தோள் நின்ற பலர் இன்று கட்சியில் இல்லை. உதாரணமாக, செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன், பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், மாரியப்பன் கென்னடி, வ.து.நடராஜன் உள்ளிட்ட பலர் தி.மு.க-வில் இணைந்துவிட்டனர். மாவட்டச் செயலாளர்கள் சிலர் அதிமுக-வில் இணைந்துவிட்டனர்.

கட்சி நிர்வாகிகளுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் அவ்வப்போது சைலன்ட் மோடுக்கு தினகரன் சென்றுவிடுவதே அதற்குப் பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, தேர்தல் காலங்களில் பொருளாதாரரீதியான உதவிகளுக்குத் தலைமையைக் கடைசிவரை எதிர்பார்த்துக் காத்திருப்பதும், பிறகு ஏமாற்றப்படுவதுமாக நிர்வாகிகள் கடுமையான அதிருப்திக்கு தொடர்ச்சியாக ஆளாகிவருகின்றனர்.
அதன் காரணமாக யாராவது கட்சியைவிட்டு வெளியேற முடிவெடுத்து, தலைமைக்கு அதைத் தெரியப்படுத்தினாலும், 'விருப்பம் இருந்தால் இருங்கள், இல்லையென்றால் கிளம்புங்கள்' என்கிற தினகரனின் அணுகுமுறைதான் பலரை முகச்சுளிப்புக்கு ஆளாகியிருக்கிறது. தவிர, சசிகலாவின் செயல்பாடுகளுக்கு முழுமையாக ஆதரவாக நிற்பதா, இல்லை விலகி நிற்பதா என்பதில் கட்சி நிர்வாகிகளுக்கு தினகரன் தெளிவாக வழிகாட்டவில்லை.

அதனால், அந்த விஷயத்திலும் குழப்பத்திலேயே நிர்வாகிகள் காலத்தைக் கழித்துவருகின்றனர். ஆனால், இவை எல்லாவற்றையும்மீறி தினகரனுக்கென்று ஒரு கரிஷ்மா இருக்கத்தான் செய்கிறது. அவர் உத்தரவிட்டால், ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு அவருக்கு விசுவாசுமான நிர்வாகிகள் இன்னமும் கட்சியில் இருக்கிறார்கள் என்பதற்கு நேற்று திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டமே சாட்சி. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவது என்பது தினகரனின் கையில்தான் இருக்கிறது.
பயன்படுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!